search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.
    • வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கவுள்ளது.

    வால்பாறை,

    வால்பாறையில் வருகிற 26-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    மலைச்சரிவுகளில் பச்சைப் பசேல் என கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால், தினசரி ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி மேற்பார்வை யாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வால்பாறையில் வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடத்துவது என்றும், கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், காவல்துறை சார்பில் நாய் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனி கண்காட்சிகள் நடத்துவது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் கோடை விழா நடத்தப்படுவதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினார்
    • அமர்ந்தநிலையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்

    சூலூர்,

    சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர் காங்கேயம்பாளையத்தில் உள்ள டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மாக்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ராஜேந்திரன் பிணமாக தொங்கினார். அவரது உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது.

    சூலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சூலூர் போலீசார் ராஜேந்திரன் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ராஜேந்திரன் உடல் தரையில் முட்டி போட்டு அமர்ந்தநிலையில் இருப்பதால் அது தற்கொலையாக இருக்க முடியாது எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • இரும்பு கழிவுகளும்,பஞ்சு கழிவுகளும் குவியல், குவியலாக குவிக்கப்பட்டுள்ளது
    • பொது மக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாச்சம்பாளை யத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயானம் ஒன்று உள்ளது. அந்த சுற்று வட்டார பகுதி முழுவதும் அந்த மயானத்தை பயன்படுத்துவது வழக்கம்.

    ஆனால் தற்போது அந்த மயானம் முழுவதும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. இரும்பு கழிவுகளும்,பஞ்சு கழிவுகளும் குவியல், குவியலாக குவிக்கப்பட்டுள்ளது. சிறிது மழை பெய்தாலும் அந்த குப்பை மேட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது.

    நள்ளிரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் ஆதிக்கமும் அப்பகுதியில் அதிகமாக உள்ளது. மதுப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். விரைவில் அந்த குப்பைமேடுகளை அகற்றி சுத்தமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • செல்வராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தி ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
    • தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடையை கரும்பர் வீதியை சேர்ந்தவர் ரவிராகுல் (வயது 32). இவரது தம்பி யுகேஷ் ராகுல் (29). இவர் பேரூர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவர்களது கடைக்கு கரடிமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் (55) என்பவர் மது குடிக்க சென்றார். அப்போது செல்வராஜ், பார் உரிமையாளர்கள் ரவிராகுல், யுகேஷ்கோகுல் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தொழிலாளியை தாக்கினர். இதனையடுத்து அவர் அங்கு இருந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் தாக்குதலால் ஏற்பட்ட காயத்துக்கு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    இந்தநிலையில் செல்வராஜ் மீண்டும் சென்று மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சென்ற போது அங்குள்ள தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இதனை பார்த்த ஒரு அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்வராஜின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அவரை அடித்து கொன்ற ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வராஜை அடித்து கொலை செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் யுகேஷ்கோகுல், மற்றும் அவரது அண்ணன் ரவி ராகுல் ஆகியோரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் கடைக்கு சென்றவர், அதன்பிறகு கம்பெனிக்கு திரும்பி வரவில்லை
    • பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    பீகார் மாநிலம் சாம்ப்ரான் பகுதியைச் சேர்ந்தவர் சிவ்டாட் மான்ஜி (வயது 31). இவர் பொள்ளாச்சி அருகே கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள காலிபாட்டில் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்தார்.

    நேற்று இரவு கம்பெனியில் இருந்த அவர் மதுகுடித்து விட்டு வருவதாக டாஸ்மாக் கடைக்கு சென்றார். அதன்பிறகு அவர் கம்பெனிக்கு திரும்பி வரவில்லை. இதனால் இரவில் சிவ்டாட் மான்ஜியை சக ஊழியர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் சிவ்டாட் மான்ஜி, கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள நாகபிள்ளையார் கோவில் எதிரில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சிவ்டாட் மான்ஜி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் கோட்டூர் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவ்டாட் மான்ஜியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    நேற்று இரவு மதுகுடிக்கச் சென்றபோது யாருடனாவது தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அந்த நபர்கள் சிவ்டாட் மான்ஜியை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறா ர்கள். இதுதொடர்பாக அவர் எந்த கடைக்கு மது குடிக்கச் சென்றார், அவருடன் வேறு யாராவது சென்றார்களா என்பது பற்றி போலீசார விசாரித்து வருகிறார்கள். மேலும் சிவ்டாட் மான்ஜியின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கனமழை காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.
    • பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்திரா காந்தி தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் கடந்த 1991 -ம் ஆண்டு கட்டப்பட்டன.

    வீடுகள் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தற்போது இங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து விடுகி ன்றன. மேலும் தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் குடும்பத்துடன் வசிக்கும் மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சிலர் வீடுகள் எப்போது இடிந்து விடுமோ என்று அச்சத்தில் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தோலம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். காலியாக இருக்கும் இந்த வீடுகளில் உபயோகப்படுத்தப்படாத பொருட்களை போட்டு வைக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து தோலம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வரக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சாந்தாமணி(50) என்பவர் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலானதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன. கட்டிடத்திலும் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது.இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் நாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருகிறோம். எனவே ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு தங்களது குடியிருப்பு பகுதியினை புனரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

    அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ்(30) கூறுகையில் குழந்தைகளுடன் இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் தாங்கள் கட்டிடம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், ஏற்கனவே பலமுறை குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டி ருக்கையில் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

    பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தங்களது வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் கடந்த செப்டம்பர் மாதம் அவரது மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமண செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிய மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கீதா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கீதாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்சு சித்ரா மீது மோதியது.
    • மேல் சிகிச்சைக்காக சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    கோவை,

    கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி சித்ரா (வயது 49). சம்பவத்தன்று இவர் கோவை -அன்னூர் இடையே உள்ள கைகாட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்சு சித்ரா மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்சு ஊழியர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்த பெண் ஒருவர் சைகை காட்டி பூபதியை அழைத்தார்.
    • ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே சென்று போலீசில் புகார் அளித்தார்

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் நெல்லிபாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 34). ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் அன்னூர் அருகே உள்ள காந்தி காலனி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்த பெண் ஒருவர் சைகை காட்டி பூபதியை அழைத்தார்.

    இதனையடுத்து அவர் அந்த பெண்ணின் அருகே சென்று என்னவென்று கேட்டார். அதற்கு அந்த பெண் தன்னுடைய வீட்டில் அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனையடுத்து பூபதி அந்த பெண் அழைத்த வீட்டிற்குள் சென்றார். அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காண்பித்து இவரிடம் உல்லாசமாக இருக்க ரூ.1000 வேண்டும் என கேட்டார்.அதற்கு ஆட்டோ டிரைவர் தன்னிடம் பணம் இல்லை எனவும், அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் அவர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விபசாரம் நடப்பதாக ஆட்டோ டிரைவர் கூறிய வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் அம்சவள்ளி (வயது 41) என்பவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் விபசாரத்துக்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த திருப்பூரை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர்.

    இதனையடுத்து அழகிகளை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். அழகிகளை வைத்து வீட்டில் விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது
    • கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். இதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க, தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    அதன்படி, நேற்று கோவை ஆர்.எஸ்.புரம் அருகே ஒரு கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையில் ஈடுபட்ட போது, அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடபட்டியை சேர்ந்த விஷ்னு (வயது26) பெயிண்டர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்னுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மீன்பிடித் தடைக்காலம் எதிரொலியால் விைல அதிகரித்துள்ளது
    • மீன் வியாபாரிகள் மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்

    கோவை,

    தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கோவை உக்கடம் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

    கோவை உக்கடத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தைகளுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 70 டன் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 250 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14 -ந் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்கள் இனப்பெருக்கத்துக்காக, தமிழக அரசு மீன்பிடித் தடை க்காலத்தை அமல்படுத்தி யுள்ளது. இதன் காரணமாக, உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தையில் மீன்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதுடன் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் ,தினமும் 30 டன் வரையே மீன்களின் வரத்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் 150 டன் மீன்களே விற்பனைக்கு வருகின்றன. குறைவான அளவே மீன் வரத்து உள்ளதால், விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.400-க்கு விற்ற பாறை மீன் தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திசாளை ரூ.200, நண்டு ரூ.800, கறுப்பு வாவல் ரூ.1100, இரால் ரூ.600, நெத்திலி ரூ.500, சங்கரா ரூ.500, அயிரை ரூ.300, விளமீன் ரூ.600-க்கு விற்பனையாகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.

    இதேபோல, கறிக்கோழி வரத்தும் குறைந்துள்ளதால் கடந்த வாரங்களில் கிலோ ரூ.200-க்கு விற்ற கோழி இறைச்சி, தற்போது ரூ.40 அதிகரித்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனையாகிறது.

    • கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
    • கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலையில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருப்பதை கோவில் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.

    நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×