search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி அய்யப்பனை தாக்கியது.
    • அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

     வால்பாறை,

    வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருபவர் அய்யப்பன் (57). இவர் நேற்று இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிசனில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி இவரை தாக்கியது. படுகாயம் அடைந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

    • க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    கோவை,

    கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மர்மநபர்கள் அதை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட நவக்கரையில் கொட்டினர்.

    இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கழிவுகளை கொட்ட வந்தவர்களை கையும், களவுமாக பிடித்ததோடு, க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சசூர் மாவட்டம் சோளக்கரையை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38), திருவள்ளாமலை அக்கபரம்பில்லை சேர்ந்த லியோ வர்கீஸ்(34) ஆகியோர் தலைமையில் 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கழிவுகளை ஏற்றி வந்த மினி வாகனத்தை மாவுத்தம்பதி ஊராட்சியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோழிகழிவுகளை ஊராட்சி பகுதியில் கொட்டியதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது மாவுத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

    அதுமட்டுமின்றி இனி மேல் கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து ஊராட்சியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் எச்சரித்தார்.

    • விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.
    • ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

    சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது. அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகையை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்.

    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.
    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும்.

    மேலும், பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சத்தியமங்கலம் வரதம்பாளையம் குள்ளன் காடு அபார்ட்மெண்ட் பகுதியைச்சேர்ந்த ரமேஷ்(30) என்பவர், தனது மேஸ்திரி பெரியசாமி மற்றும் நண்பர் சுப்பிரமணி உள்ளிட்டோருடன் கடந்த 23 -ந் தேதி வனபத்ர காளியம்மன் கோவிலில் நடைபெற்ற கிடாய் விருந்துக்கு வந்தனர்.

    அப்போது ரமேஷ், சுப்பிரமணியம் உள்ளிட்ட இருவரும் பவானி ஆற்றின் படித்துறையில் இறங்கி குளித்தனர். சுப்பிரமணி ஆற்றின் ஓரத்தில் குளித்து விட்டு வந்துள்ளார்.பின்னர்,குளிக்கச்சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, ரமேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் இளைஞர் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் சமயபுரம் மின் கதவனை அருகே பவானி ஆற்றில் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்,இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 -ந் தேதி மாயமான ரமேஷ் என்பது தெரியவந்தது. 

    • பிண்டு பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிண்டு (வயது 25). கட்டிட தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பிண்டு வேலை செய்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

    அப்போது அவரது இடது கால் அந்த வழியாக சென்ற மின்சார வயரில் பட்டது. கண்இமைக்கும் நேரத்தில் பிண்டுவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிண்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
    • மூதாட்டிகள் இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது.

    இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பழனாத்தாள் (வயது 75), அதே பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதி வான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த கவுதமி (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கவுத மியை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்த னர்.

    • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார்.
    • கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை கணபதி வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(26).ஐ.டி.ஊழியர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார்.

    அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், யூடியூப் வீடியோவில் தங்களது நிறுவனம் பற்றி லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.

    ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்ம நபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி அதனை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்துள்ளது.

    இதனை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பெரியகடை வீதி போலீசாருக்கு புல்லுக்காட்டில் போதை மாத்திரைகளை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருமால் வீதியை சேர்ந்த சேக் முகையதீன்(33), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது நவாஸ்(23) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது முகமது நவாஸ் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனடியாக அவரை போலீசார் மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சேக் மொய்தீன், முகமது நவாஸ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்து 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    கோவை,

    கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். பின்னர் இரவில் கலைந்து சென்றனர்.

    இன்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:-

    10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    கோடை காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். சம்பவத்தன்று வெங்கடாசலம் பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்தார்.

    அப்போது நெருப்பு படுக்கையில் விழுந்து தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. அப்போது தீ படுக்கையில் இருந்த வெங்கடாசலம் மீதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடாசலத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது.
    • காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகர் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புரு ஷோத்தமன் தலைமையில் காட்டூர் ெரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார்.

    கோவை,

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நகருக்குள் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் பயண தூரம் குறையும் என்பதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முந்தைய கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. இருப்பினும் பஸ்களில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை ேபாக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இதனால் தினசரி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.

    இந்தநிலையில் காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழி தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2018-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்ேதாம்.

    அப்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க கட்டணமாக ரூ.20-க்கு பதில் ரூ.22 வசூலித்த 2 அரசு பஸ்கள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23-க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியார், 4 அரசு பஸ்கள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசு பஸ் என மொத்தம் 9 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×