search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • போலீசார் பிரசாந்திடமிருந்து இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை களிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக முஸ்தப்பா (52), அபுதாகிர் (24) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரவணம்பட்டி,

    கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது35).

    இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

    நேற்று காலை வேலை முடிந்து மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

    மோட்டார் சைக்கிள் கோவை சத்தி ரோட்டில் குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் எடை மேடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மகேஷ், முத்துராஜ் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    முத்துராஜ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இறந்த மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிழற்குடை மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும்.

    குனியமுத்தூர்.

    கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் காந்திநகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் செல்லும் பயணிகள் பஸ் ஏறும் நிறுத்தத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் அதில் உட்கார முடியாத நிலை காணப்படுகிறது.

    இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்தால் அவர்கள் பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் பயணிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    நிழற்குடை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. நிழற்குடையை நோக்கி வரும் வயதான பயணிகள் கல் தட்டி கீழே விழுந்து எழுந்து செல்லும் சூழ்நிலையை காணப்படுகிறது.

    அதே போன்று அதற்கு எதிர் புறம் பொள்ளாச்சி செல்லக்கூடிய பயணிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை எதுவுமே கிடையாது. இதனால் வெயிலில் நின்று தான் பேருந்து ஏறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே பொள்ளாச்சி ரோடு காந்தி நகரில் பஸ் ஏறக்கூடிய பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது.
    • இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதி அடர்வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவி லங்குகள் அவ்வப்போது ஊருக்கு நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது. மேலும்,பாகுபலி காட்டு யானையுடன் தற்போது வேறு சில யானைகளும் இணைந்து அதே பகுதியில் சாலையை கடக்க துவங்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதி வழியாக சாலையைக்கடந்து மற்றொருபுறம் சென்றது.

    அப்போது, யானை வருவதை கண்ட அங்கு சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று யானையை பார்த்து குரைக்க தொடங்கியது.

    இதனால் ஆவேசம் அடைந்த பாகுபலி யானை பிளிறிய படியே நாயை விரட்டி சென்றது.

    பின்னர் அங்கிருந்து விளை நிலங்களை நோக்கி சென்று விட்டு, மீண்டும் வனப்பகுதியை நோக்கி நடந்தது.

    தற்போது பாகுபலி யானை தன்னை பார்த்து குரைத்த நாயை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாகுபலி யானையை கண்டதும் நாய் குரைத்ததையும், குரைத்த நாயை பார்த்த காட்டு யானை தெருநாயை விரட்டுவதையும் படத்தில் காணலாம்.

    • விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
    • சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல துணைத் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, பேராசிரியர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குரு ரங்கதுரை, வி.பி.எம். நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பச்சையப்பன், டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் காணொளி காட்சி வாயிலாக கிராமிய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் நோயற்ற வாழ்வு கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, கர்மயோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு ,தூய்மையும் பசுமையும் மிக்க ஆரோக்கியமான அமைதியான கிராமம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார் .

    சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண் 16159) ஏப்ரல் 27, 29-ந் தேதிகளில் திருச்சி கோட்டை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.

    ஜார்கண்ட் மாநிலம் ,தன்பாத்திலிருந்து கேரளத்தின் ஆலப்புழா செல்லும் விரைவு (ரெயில் வண்டி எண் 13351) ஏப்ரல் 26, 28 தேதிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், நாமக்கல், கருவூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

    ஈரோடு- பாலக்காடு நகரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் ( வண்டி எண்கள் : 06818/06819) ஏப்ரல் 28 , 30-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்ேபால மதுரை சென்றடையும்.

    கண்ணூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயில் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16608/16607) ஏப்ரல் 28, 30 -ந் தேதிகளில் போத்த னூருடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து பிற்பகல் 2.34 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல கண்ணூர் சென்றடையும்.

    கேரள மாநிலம் சொரனூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள் 06804/06805) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல சொரனூர் சென்றடையும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • வாலிபர் சிறுமியிடம் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பில் பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பாட்டி வீடு பொள்ளாச்சியில் உள்ளது. இதனால் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருவார்.

    சிறுமியின் பாட்டி வீட்டின் அருகே வசந்தகுமார் (22) என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சிறுமியிடம் சென்று பேசி வந்தார்.

    அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி தனது பாட்டியை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பார்த்த வசந்தகுமார், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். தொடர்ந்து இது போன்று அவர் செய்து வந்துள்ளார்.

    மேலும் கடந்த 12-ந் தேதி சிறுமியை அழைத்து சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை உடும லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி தனக்கு நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து, பலாத்காரம் செய்த வாலிபர் வசந்தகுமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை,

    பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான யல்லோ வாரியர்ஸ் என்ற அணியும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் என்ற அணியும் மோதியது.

    முதல் போட்டியில் டாஸ் வென்ற யல்லோ வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ பைட்டர்ஸ் அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்சர், 3 ஃபோர்கள் உள்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    2-வது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ பைட்டர்ஸ் அணி பவுளிங்கை தேர்வு செய்தது. யல்லோ வாரியர்ஸ் அணி நிர்ணி யிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னு பேபி 29 பந்துகளில் 10 சிக்சர், 2 போர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 போர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
    • போலீசார் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமானநிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கி.மீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நவஇந்தியா சிக்னல், லட்சுமிமில்ஸ், எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் ஆகிய சிக்னல்களில் மட்டும் மேம்பால தூண்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.

    எனவே கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல், எல்.ஐ.சி.சிக்னல், அண்ணா சிலை சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    போக்குவரத்து மாற்றத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் இருந்த பஸ் நிறுத்தம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகளையும் போலீசார் ஆங்காங்கே வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.இதுகுறித்து மாநகர போலீஸ் துறையினர் கூறியதாவது:-

    அவினாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜே.எம். பேக்கரி சிக்னலில் வலது புறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவினாசி சாலைக்கு வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் ரெயில் நிலையம், கோர்ட்டு வளாகம் சாலையில் இருந்து காந்திபுரம், அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.

    நஞ்சப்பா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் இதுபுறமாக மட்டுமே செல்ல முடியும்.

    ஜே.எம். பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு செல்வது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் கலெக்டர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று யுடர்ன் செய்து அவினாசி சாலையை அடைந்து ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம்.

    அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவினாசி சாலை, வ.உ.சி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.

    காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவினாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக காந்திபுரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஓசூர் சாலை வழியாக செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக அண்ணா சிலையில் இருந்து வலதுபுறமாக திரும்பி பாலசுந்தரம் சாலையை அடைந்து காந்திபுரத்துக்கு செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவினாசி சாலையில் வலதுபு றமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் பாலசுந்தரம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஓசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.

    செஞ்சிலுவை சங்க சாலையில் இருந்து ஓசூர் சாலையில் இருந்து ஓசூர் சாலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பி கே.ஜி.திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
    • லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 டன் அளவு அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். மேலும் லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.  

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
    • நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    கோவை,

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.கவினர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் தான் அ.தி.மு.க. இந்த இயக்கம் உருவாகி 50 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.கவின் தொண்டர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் என அனைவரின் ஆதரவோடும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொண்டரும் தலைவர் ஆகலாம் என்பது அ.தி.மு.கவில் மட்டுமே நடக்கும். அது தற்போது நடந்துள்ளது.

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அதனை அங்கீகரிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி இருந்தது.

    தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த இயக்கத்திற்கு சில புல்லுருவிகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர். அதனை எல்லாம் தகர்த்தெறிந்து அ.தி.மு. க.வை அவர்கள் இருவரும் சிறப்பாக வழி நடத்தினர்.

    அவர்களது மறைவுக்கு பிறகு தற்போது கூட ஒரு சில புல்லுருவிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு எதிராக இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்தனர். இருந்தாலும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஆகியவை ஜனநாயக முறைப்படி தொண்டர்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி எங்களை போன்ற எளிய தொண்டர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர், 4 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி, மக்களுக்கு நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார்.

    ஆட்சி மட்டுமின்றி கட்சியையும் சிறப்பான முறையில் வழிநடத்தி வரக்கூடிய அவரை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு அளித்த சிறப்பான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுகிறோம்.

    இனி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. இயக்கம் பெறும். அதுமட்டுமின்றி சாதாரண கிளைசெயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் குளு,குளு சீசன் நிலவக்கூடிய இடங்களை தேடி சென்று வருகிறார்கள்.

    அந்த வகையில் குளு, குளு சீசன் நிலவி வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரிக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து தான் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 2 சாலைகள் செல்கிறது. ஒன்று குன்னூர் வழியாகவும், மற்றொன்று கோத்தகிரி வழியாகவும் செல்கிறது.

    இந்த 2 சாலைகளையும் நீலகிரி மக்கள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த 2 சாலைகளிலும் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் மாவட்ட காவல்துறை போக்குவரத்து மாற்றமும் செய்துள்ளது.

    அதன்படி கோத்தகிரியில் இருந்து கீழே வரும் வாகனங்கள், ராமசாமி நகர், ஊமைப்பாளையம், மச்சினாம்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்லாம்.

    இதேபோன்று, குன்னூர் மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் சிறுமுகை சாலையில் தென்திருப்பதி நால்ரோடு வழியாக வந்து, அந்தந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் மாற்றுப்பாதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாரவிடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீலகிரிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.

    இதனால் காலை 7 மணி முதலே மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    போக்குவரத்து நெரிசலால் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையாம்பாளையம் புதுமார்க்கெட் வரை 6 கி.மீ வரையும், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் குட்டையூர் வரை 4 கி.மீ வரையும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் காருக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது. இதுதவிர மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ், ஊட்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலான சாலை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×