search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • வினோதினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கோகுல் பிராசாந்த். இவரது மனைவி வினோதினி(வயது20). நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மிகுந்த வலியுடன் அவர் துடித்தார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அப்போது குழந்தையின் தலை வெளியே வந்து இருந்தது.

    இதனால் அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்த கோபால் உதவியுடன் வீட்டில் வைத்து வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயும்-சேயும் இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை மூலத்துறையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது.

    குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த செல்போன் டவரில் திடீரென கரும்புகை வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தனர்.

    அப்போது செல்போன் டவரில் திடீரென தீ பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி ஜெனரேட்டர் பகுதி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.

    இந்த விபத்தில் செல்போன் டவரில் இருந்த வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.

    இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.இதனால் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    செல்போன் டவர் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது.

    • ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம்.
    • கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது.

    கோவை,

    விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்தில் இப்பணிகள் கடந்தாண்டு 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கின. தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதால் ஷார்ஜா விமானம் தரையிறங்கும், புறப்படும் நேரம் மாற்றியம ைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள் ளப்பட்டன.

    சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டன.  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் காற்றின் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்ட பணிகள் தற்போது தான் நிறைவடைந்துள்ளன.

    கடந்த 27-ந் தேதி முதல் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது கோவை விமான நிலையம்.

    புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நிலைக்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல் ஷார்ஜா விமானம் அதிகாலை 4 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் 4.45 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்ல தொடங்கியது.சிங்கப்பூர் விமானம் உள்பட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் முன்பு இரவு 11 மணி வரை மற்றும் அதிகாலை வழங்கப்பட்டு வந்த நிலையில் விரைவில் விமான சேவை நேரங்கள் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பல புதிய அறிவுப்புகளை எதிர்பார்க்க லாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
    • தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை அருகே மதுக்கரை கடைவீதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) சீரடி சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா இந்த கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று துவாரகா மாயிவாழ் ஆனந்த சாய் டிரஸ்ட் சார்பில் ஏழை பெண்களுக்கு புத்தாடைகளும், மளிகை பொருட்களும் வழங்க ப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு புத்தாடைகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி சென்றனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 6 மணிக்கு பெருந்திரு மஞ்சனமும், 7 மணிக்கு பேரொளி வழிபாடும், 8 மணிக்கு பாபாவின் சத் சரித பாராயணமும், 12 மணிக்கு மத்தியான ஆரத்தியும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சத்யநாராயண பூஜையும், 6 மணிக்கு மாலை ஆரத்தியும் நடைபெற உள்ளது

    30-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு காகட ஆரதியும், 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும், 9 மணிக்கு பாபாவின் சத் சரிதை பாராயணமும், 11:30 மணிக்கு கோமாதா பூஜையும், மதியம் 1 மணிக்கு மத்தியான ஆரதியும், சிங்காரி மேளம் நடைபெற உள்ளது.

    மாலை 4 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாபா ஊர்வலமாக மதுக்கரை கடைவீதி, மதுக்கரை மார்க்கெட், முத்துக்குமரன் பஸ் நிறுத்தம், அன்பு நகர் வழியாக வந்து கோவிலை சென்று அடையும். மாலை 6:30 மணிக்கு நாட்டிய ஆச்சாரியார் பட்டம் பெற்ற சுவாமி கிருஷ்ணா ஆனந்தஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    இரவு 9 மணிக்கு இரவு ஆரதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. பாபாவின் ஜெயந்தி தின விழாவில் அனைத்து பக்த கோடிகளும் கலந்து கொண்டு பாபாவின் அருள் பெற்று செல்லுமாறு விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோவை

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் அதன் ஒரு பகுதியாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்களமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்கம், கிராம செவிலியர் சங்கம், வருவாய்த்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • 11 உண்டியல்களின் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடந்தது.
    • கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.44 லட்சத்து 90 ஆயிரத்து 971 செலுத்தி இருந்தனர்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியல்களில் போட்டு செல்கின்றனர். இதன்படி கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதியில் இருந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த 11 உண்டியல்களின் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நேற்று நடந்தது.

    தேக்கம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசம் தலைமையில் தக்கார் பிரதிநிதி வடிவுக்கரசி, காரமடை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் தங்கம் 105 கிராம், வெள்ளி 125 கிராம், ரொக்கமாக ரூ.44 லட்சத்து 90 ஆயிரத்து 971 காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    இதனை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காரமடை கிளையின் மேலாளர் பிரபாத் குமார்ஜா மற்றும் ஊழியர்கள் சரி பார்த்து எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள், மிராசுதாரர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.
    • வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூர்,

    சூலூர் அருகே அரசூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. அரசூர் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

    நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த போதை நபர் அங்குள்ளவர்களிடம் தனக்கு குடிக்க பணம் வேண்டும் 50 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அந்த போதை நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

    அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போதை நபர், தான் வந்த பழைய இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்த புதிய ஒரு இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.

    அந்த இருசக்கர வாகனமானது அரசூர் ஊராட்சி அலுவலகத்தில் திட்ட பிரிவில் பணியாற்றும் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது.

    வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். தற்போது போதை நபர் இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது

    எனக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது.

    இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது கணவரை பிரிந்து மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அவரது காதலியை 2-வது திருமணம் செய்து உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் இது குறித்து எனது கணவரிடம் கேட்டேன்.

    அப்போது அவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
    • கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்

    கோவை,

    கோவை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான வரவு-செலவு திருந்திய திட்ட அறிக்கை 2023-24 ம் ஆண்டுக்கான உத்தேச திட்ட அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் ஒரே நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை உள்பட மற்ற மாநகராட்சிகளில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொத்து வரிஉயர்த்தப்பட்டது. குப்பை வரி வசூலித்திருப்பதால், மாநகராட்சி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்யும் திருந்திய திட்ட அறிக்கையில் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

    வருகிற நிதியாண்டில் எதிர்பார்க்கும் வருவாயும், அதிகமாக இருக்குமென எதிர்பார்ப்பதால் மாநகராட்சி பொது நிதியில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுன்சிலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    மண்டல அளவில் வார்டு பணிகளுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும். குறுக்கு வீதிகள், சந்துகளில் ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்ட வேண்டும்.

    சங்கனூர் பள்ளத்தை தூர் வார வேண்டும். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும். உள் விளையாட்டு அரங்கம் ஒதுக்க வேண்டும் என மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    • இயைடுத்து போலீசார் லாரி டிரைவரான பிரதீப்குமாருக்கு அபராதம் விதித்தனர்.

    சூலூர்,

    சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 5 பேர் ஒரு வேனில் உதவி கேட்டு பயணம் செய்தனர். அந்த வேன் சூலூரில் இருந்து அவினாசி சாலை செல்லும் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது முத்துக்கவுண்டன்புதூர் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது வேனுக்கு பின்னால் அதே திசையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் மேலே உள்ள கிரில் கழன்று வேனில் இருந்த மாணவர்கள் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    ஒரு மாணவருக்கு முதுகுப் பகுதியில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இந்த சம்பவம் பற்றி போலீசார் வேன் மற்றும் லாரி டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். லாரி டிரைவரான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (28) மது அருந்தியபடி வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பிரதீப் குமாருக்கு அபராதம் விதித்தனர். மேலும் மாணவர்களுக்கு உதவி செய்த வேன் டிரைவர் தர்மபுரி பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த மோகனை (36) இனி மேற்கொண்டு இவ்வாறு சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • கோவை திருப்பூரில் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • சிறப்பு ரெயில் (எண் 03358) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பீகார் மாநிலம் பராணி சென்றடையும்.

    கோவை,

    கோவை திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை-பீகார் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

    கோவையில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 5-ந் தேதி முதல் வாரத்தின் புதன்கிழமை தோறும் இரவு 12.50 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 03358) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பீகார் மாநிலம் பராணி சென்றடையும்.

    இந்த ரெயில் வரும் 3.5.23 வரை இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக வருகிற 1-ந் தேதி முதல் பீகார் மாநிலம் பராணியில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45

    மணிக்கு புறப்படும் ரெயில் (எண். 03357) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரெயிலானது வருகிற 29.4.23 வரை இயக்கப்படும். இந்த ரெயிலில் ஏ.சி.2 டயர் பெட்டிகள்-2, ஏ.சி.3 டயர் பெட்டிகள் -4, தூங்கும் வசதி பெட்டிகள்-12, பொதுப்பிரிவு -2ம் வகுப்பு பெட்டிகள்-4 இணைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த சிறப்பு ரெயிலானது ஈரோடு, சேலம், ஜோலா ர்பேட்டை. காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எழுறு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விழியங்கரம், ராயகடா, திட்டலகார், சம்பலூர், ஜார்சுடா, ரோர்கேலா, ஹத்தியா, ராஞ்சி, முறிபோகரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், பராக்கர், சித்தரஞ்சன், ஜமந்தரா, மதுபுர், ஜாஜ்ஹா, கியூல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மனவேதனை அடைந்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். பிளஸ்-2 படித்து முடித்து உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 27 வயது திருநம்பியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் பழகி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்து இளம்பெண் கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற இள ம்பெண் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னரும் அவர் திருநம்பியுடன் தொடந்து பழகி வந்தார். அவரது பெற்றோர் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் பழகுவதை நிறுத்த வில்லை.

    இதனையடுத்து இள ம்பெண்ணின் பெற்றோர் இது குறித்து மேட்டு ப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இள ம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இளம்பெண், திருநம்பியுடன் தான் செல்வேன். பெற்றோ ருடன் செல்ல மாட்டேன் என கூறி விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணை அந்த பகுதியில் உள்ள காப்ப கத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×