search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி"

    திருச்சியில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஏழைகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என பாராட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திருச்சி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து  பேசியதாவது:

    இந்த திருச்சி திமுகவின் எஃகு கோட்டை. திருச்சியில் தான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆளும் மோடியின் சர்வாதிகார ஆட்சியினையும், மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி ஆட்சியினையும் பற்றி ஒரு சில வரிகள் கூறவிரும்புகிறேன். அப்போதெல்லாம் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள்.  இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள். அப்போதெல்லாம் கோமாளிகள் சர்க்கஸில் இருப்பார்கள். இப்போது சர்காரிலேயே இருக்கிறார்கள்.



    அப்போதெல்லாம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்கள். தற்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள் . அப்போதெல்லாம் மீனவர்கள் மீன்களை பிடித்தார்கள். தற்போது மீனவர்களையே பிடிக்கிறார்கள். அப்போது வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள் இப்போது கட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    மேலும் பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது. விவசாய கடன் கட்ட முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்படாது.  பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி அவர்கள், ரபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.  

    மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது.  பாஜகவின் சேவகர்களாக அதிமுக உள்ளது. இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.

    ராகுல் காந்தி  மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள் , ஏழைகள் பற்றி யோசித்தீர்களா? கார்ப்பரேட்களுக்கு தான் மோடி காவலாளி.  பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 
    திருச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    திருச்சி பெரியகடை வீதி ஜாபர்ஷா தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை ரெங்கநாதன் (56) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி சென்றார்.

    இன்று காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது‌. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெங்கநாதன் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மாயமாகியிருந்தது.

    இது குறித்து உடனடியாக அவர் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற நிதி நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் சின்ன ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 52), கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் முத்து (50).

    முத்துவிற்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராஜகோபால் மற்றும் முத்துவின் வீடு அருகருகே உள்ளது. முத்துவின் மகள் கோகிகலாவை லால்குடி பெருவளநல்லூரைச்சேர்ந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேல் (32) திருமணம் செய்துள்ளார்.

    இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. எனவே சக்திவேல் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் ராஜகோபால் குடும்பத்திற்கும், முத்து குடும்பத்திற்கும் வீட்டு அருகில் உள்ள தென்னை மரத்தில், தேங்காய் பறிப்பது தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முத்துவின் மகன்கள் வீட்டருகில் உள்ள மரத்தில் தேங்காய் பறித்துள்ளனர்.

    அப்போது தேங்காயில் தங்களுக்கும் பங்கு கொடுக்கும்படி ராஜகோபாலின் மகன்கள், முத்து குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜகோபால் குடும்பத்தினர், முத்துவின் மகன்களை தாக்கியுள்ளனர்.

    இது குறித்து இரவில் வீட்டிற்கு வந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேலிடம் முத்துவின் மகன்கள் புகார் கூறியுள்ளனர். தனது மனைவியின் சகோதார்களை தாக்கியது தொடர்பாக சக்திவேல், சின்ன மாமனார் ராஜகோபாலிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் இருந்த கல்லை எடுத்து சின்ன மாமனார் ராஜகோபாலை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுப்பையா நேரில் சென்று கொலை செய்யப்பட்ட ராஜகோபால் உடலை கைப்பற்றினார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் ராஜகோபால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, புரோட்டா மாஸ்டர் சக்தி வேலை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் தேர்தல் விதிமுறையால் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். #Jallikattu #Election

    லால்குடி:

    திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் கலந்து கொண்டன. 254 காளையர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத் துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #Jallikattu #Election

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    திருச்சியில் இன்று நடந்த வாகன சோதனையில் 1008 பித்தளை செம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    திருச்சி:

    திருச்சி கரூர் சாலை குட முருட்டி பாலம் சோதனை சாவடி அருகில் இன்று காலை திருச்சி தேர்தல் பறக்கும் படை ஏ பிரிவு அதிகாரிகள் தனி வட்டாட்சியர் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 1008 பித்தளை செம்புகள், 500க்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தது. அவை எங்கு எடுத்து செல்லப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது காரில் வந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செல்வதாகவும் கூறினர். மேலும் அந்த செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் பித்தளை செம்புகள், சங்குகள் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 1008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முக வேலனிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராணி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தை சோதனையிட்டதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சிவா(32) என்பவர் 100 எண்ணிக்கையிலான வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில், சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதா தியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை தாசில்தாரும் மணப்பாறை நத்தம் தனிதாசில்தாருமான இளவரசி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற ராஜேந்திரன், தேவசேனாபதி உள்ளிட்ட 5 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக காரில் வந்த கருமண்டபத்தை சேர்ந்த அந்தோணி நவீன் என்பவர் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரொக்கமாக எடுத்து சென்றார். அந்த பணத்திற்காக உரிய ஆவணமோ அல்லது ரசீதோ அவரிடம் இல்லை. விசாரணையில், எடமலைப்பட்டி புதூர்- மதுரை ரோட்டில் அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், வங்கியில் செலுத்த பணம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று, திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் தனிதாசில்தார் (மணப்பாறை சிப்காட்) வசந்தா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகாநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரன் அவ்வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த தொகைக்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில், நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கட்டுவதற்காக பணத்தை எடுத்து செல்வதாக கருணாகரன் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 400-ஐ திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த தொகை ஒரு கவரில் ‘சீல்’ வைக்கப்பட்டு கருவூலத் தில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சியில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் இருந்த பையை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அந்த பையினுள் கத்தை கத்தையாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாட்ஷா (36), தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா சபரீஷ் (26) மற்றும் திருச்சி காஜாமலை காஜா மியான் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் (34) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் கள்ள நோட்டுக்களை எங்கு வைத்து அச்சடித்தனர்? இதில் வேறு யாரேனும் தொடர்பட்டுள்ளனரா? என விசாரணை நடத்தினர். அப்போது பாட்ஷா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள வீட்டினை வாடகைக்கு எடுத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க தனது குடும்பத்தினருடன் வந்து தங்கியதும் தெரியவந்தது.

    மேலும் அவர்களை கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது வீட்டினுள் கூட்டாளிகள் உதவியுடன் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி ரூ.500, 2000 நோட்டுக்களை அச்சடித்து, அதனை குறிப்பிட்ட அளவு வெட்டி எடுக்க தேவையான உபகரணங்கள் இருந்தது. இவர்கள் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே போலீஸ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த சதீஸ் குமார் (21) ஆங்கு வந்தார். இதனால் அவருக்கும் இதில் தொடர்வு உள்ளதா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரம், அவற்றை வெட்டி எடுக்கும் கட்டிங் மெசின் ஆகியவை மற்றும் 586 எண்ணிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 478 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுக்கள் என மொத்தம் ரூ.14 லட்சத்து 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்களின் தொடர்பு எண்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளநோட்டுக்களை எளிதில் பரிமாற்றும் வகையில் வங்கியின் அடையாள ஸ்டிக்கர்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் பாட்ஷா, ராஜா சபரீஷ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கனகராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சதீஸ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்கள் இவற்றினை புரோக்கர்கள் மூலமாக புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    திருச்சியில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். #NirmalaSitharaman #DefenceIndustrialCorridor
    திருச்சி:

    தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது. இது இரண்டாவது தொழில் வழித்தடம் ஆகும்.
     
    இந்த விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது.



    விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த தொழில் வழித்தடத்தை பாலக்காடு வரை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்தார்.
     
    ஏற்கனவே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் ராணுவ தொழில் வழித்தடம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaSitharaman #DefenceIndustrialCorridor
    திருச்சியில் இன்று பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை புது தெருவை சேர்ந்தவர் குணா, ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 14). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை குணா, சுரேந்தரை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்து சென்றார். பள்ளி முன்பு சுரேந்தரை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சுரேந்தர் பள்ளிக்கு செல்லாமல் அவனது நண்பர் கோகுல் வீட்டிற்கு சென்றுள்ளான்.

    நாச்சிக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே நடந்து செல்லும் போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரேந்தரின் வாயில் துணியை அமுக்கி உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே உள்ள தென்னை தோப்பிற்கு கடத்தி சென்றுள்ளனர்.

    இதனிடையே அந்த வழியாக பொதுமக்கள் சிலர் வரவே, மர்மநபர்கள் அங்குள்ள புதர்பகுதியில் மறைந்து கொண்டனர். இதையடுத்து சுரேந்தர் சுதாரித்து செயல்பட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். மேலும் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தை தெரிவித்துள்ளான். உடனே குணா அங்கு சென்று சுரேந்தரை மீட்டார்.

    மேலும் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்மகும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யார், எதற்காக சுரேந்தரை கடத்தினார்கள், குணாவின் எதிராளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன் தலைமை தாங்கினார்.

    திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கிருபானந்த மூர்த்தி, செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர்   சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர் பரிந்து ரையின் மட்டுமே தற்போது மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முறை நடைமுறைபடுத்தப்பட்டால் தவறான மருந்துகள் எளிதில் வாங்க  முடியும். இதனால் இளைய தலைமுறையினர் வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகும்.

    ஆன்லைன் மருந்து விற்பனை பாதிக்கும் உருவாகும் பட்சத்தில் சிறிய கிராமங்கள் மற்றும் சிறிய அளவிலான நகரங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகி விடும். போலி மருந்துகள் நடமாட்டம் மற்றும் தரம் குறைந்த மருந்துகள் நடமாட்டமும் இதனால் அதிகரிக்கும். ஊக்க மருந்துகள், கருத்தடை மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்  போது பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகளை இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதோடு, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    இந்த தொழிலை நம்பி 8 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகவும்,  40 லட்சம் பேர் மறைமுகமாகவும் மற்றும் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் மருந்து ஆளிநர்களுக்கான பட்டயப்படிப்புகளை படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சி மாவட்ட மொத்த மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பிற பொருட்களை   வாங்குவதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. மருந்துகளை ஆன்லைனில் வினியோகம் செய்வதால் எவ்விதமான மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். தவறான மருந்துகளை வாங்கி இளைய சமுதாயம் சீரழியும் சூழ்நிலை உருவாகும். இதை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறினார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்க புரவலர் பெரியசாமி, ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்ட 200&க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் திருச்சி மாவட்ட  கலெக்டர் ராசா மணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. #tamilnews
    திருச்சியில் நாளை முதல் சிறிய கடைகளில் டீ விலை ரூ. 8-ல் இருந்து ரூ.10 ஆகவும், காபி விலை ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
    திருச்சி:

    உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி அருந்தப்படும் பானங்களில் முதலிடம் பிடிப்பது டீ தான். ஏழை, எளியோர்  என்ற  பாகுபாடின்றி அனைத்து  தரப்பினருக்கும் உற்சாகத்தை அளிக்கும் உன்னத பானமாகவும், விலையை பொறுத்தவரை  ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பது டீ மட்டுமே.

    தமிழகம் முழுவதும் கடந்த சிலஆண்டுகளாக ரூ.7-க்கு சிறிய  கடைகளில் விற்கப்பட்ட டீயானது கடந்த அண்டுரூ.8ஆகவிலை உயர்த்தப்பட்டது. ஆவின் பால் விலை, சர்க்கரை விலை, கியாஸ்விலை,  மாஸ்டர்களுக்கு சம்பளம் உயர்வு போன்ற  காரணங்களால் டீ  விலை  உயர்த்தப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் ஓட்டல்களில் டீ விலை ரூ.15 ஆகவும், காபி விலை ரூ.20 ஆகவும் இருந்தது. ஓராண்டுக்கு பின்னர் நாளை முதல்  மீண்டும்  டீ,  காபி விலை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி நாளை முதல் சிறிய கடைகளில் டீ விலை ரூ. 8-ல் இருந்து ரூ.10 ஆகவும்,  காபி விலை ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

    இதற்கான  அறிவிப்பு திருச்சி மாநகரில் உள்ள ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கடைகளுக்கு திருச்சி மாநகர டீ ஸ்டால் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு குறித்த அறிவிப்பு போர்டு அனைத்து கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாட்டுச்சர்க்கரை டீ ரூ.10, பனங்கற்கண்டு பால் ரூ.13, ஆவின் மோர் ரூ.10, பால் அல்லாத டீ ரூ.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போதைய  விலையில் இருந்து ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்த்தப்படுவதால் தினமும் 5-க்கும் குறையாமல் டீ குடிப்பவர்கள் சற்றே கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    டீ, காபி விலை உயர்வை பொதுமக்கள்  ஏற்றுக் கொள்ளவேண்டும். டீ, காபி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.  குறிப்பாக  கடை வாடகை,  மின்  கட்டணம், மாநகராட்சி  வரி,  தொழில் வரி, கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு வரி ஆகியவற்றால்  செலவு  அதிகமாகியுள்ளது.

    மேலும்  இதுவரை ரூ.300-க்கு  விற்கப்பட்ட  ஒரு கிலோ தேயிலை தற்போது ரூ.400-க்கு  விற்கப்படுகிறது. அத்துடன் சர்க்கரை விலை உயர்வு, புதிதாக மாநகராட்சியால் கொண்டு  வரப்பட்டுள்ள குப்பைகள்  அள்ள வரி (ஆண்டுக்கு ரூ.2000 வரை), பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிப்பால் பல காரங்கள் விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள், பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் விற்பனை பாதிப்பு போன்றவைகளும் டீ, காபி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் என்றார்.

    இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் திருச்சி தில்லைநகர், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றே விலை உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. அதேபோல் டீ விலை ரூ.10 ஆக உயர்த்தப்படுவதால் சிறிய கடைகளில் சில்லறை தட்டுப்பாடும் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
    ×