search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 6.10 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தான்குளத்தை சேர்ந்தவர் சாய்ராம் (வயது 42). இவரது மனைவி லெட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    சாய்ராம் பல ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சாய்ராம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து லெட்சுமி அளித்த புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவிலில் தொழிலாளி மீது தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 35). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்வின் போது இவருக்கும், அந்த ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று கருணாகரன் வீட்டில் இறந்த உறவினருக்கு விஷேசம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டு பாட்டத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கருணாகரனை வழிமறித்த அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ், மாரியப்பன் (40), சுரேஷ் (26), மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (16) மற்றும் அவர்களது உறவினர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி உள்ளிட்டோர் வழிமறித்தனர். இதில் இவர்களுக்கும், கருணாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் கருணாகரனை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த கருணாகரன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுண் போலீசார் பாக்கியராஜ், மாரியப்பன், சுரேஷ், ஆனந்தராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சமுத்திரபாண்டியை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே புதுப்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாண்டியாபுரம், புதூரை சேர்ந்தவர் கனிராஜா (வயது43). இவரது தங்கை பானுமதி (21).

    இவருக்கும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பின் பானுமதியும், முத்துக்குமாரும் 5 நாள் மட்டுமே ஒன்றாக வசித்துள்ளனர்.

    அதன்பிறகு முத்துக்குமார் பெங்களூர் சென்று விட்டார். அவ்வப்போது மனைவியை சந்திக்க வருவாராம். இந்த நிலையில் நேற்று முத்துக்குமார் வீட்டில் இருந்து கனிராஜுக்கு போன் வந்தது. போனில் பேசிய முத்துக்குமாரின் உறவினர்கள் உனது தங்கை பானுமதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடக்கிறார் என கூறினார்கள்.

    இதையடுத்து கனிராஜ் பதறியபடி சூரங்குடி வந்தார். அங்கு சென்றதும் பானுமதி சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர் சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். அங்கு பானுமதி ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கனிராஜ் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கனிராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி சாவுக்கு காரணம் என்ன? அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்தமிழகத்தின் சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை ராமசாமி பட்டர் காலை 5.48 மணிக்கு ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோவில் ஊழியர் கணேசன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 11-ம் திருநாளான வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை தேரடி திடலில் சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 
    சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 24). இவர் அங்கு சொந்தமாக செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்த சூளையில் அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (40) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லையாம். இவர் அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

    வேல்முருகனின் உடன் பிறந்த அண்ணன் முத்துப்பாண்டி (45). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து உள்ளது. இது சம்பந்தமாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சினையில் வேல்முருகன் மீது, முத்துப்பாண்டி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு செங்கல் சூளைக்கு பைக்கில் முத்துப்பாண்டி வந்துள்ளார். பின்னர் வேல்முருகன் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த வேல்முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் தம்பி என்றும் பாராமல் தலையில் வெட்டியுள்ளார். இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்நிலையில் சத்தம் கேட்டு சூளை உரிமையாளர் கருப்பசாமி வந்துள்ளார். இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு முத்துப்பாண்டி தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #murder

    சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது நெடுங்குளம் கிராமம். இங்கு 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும்.

    இந்த கிராமத்தை பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் டவுன் மின்வாரியத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெடுங்குளம் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் மின் இணைப்பை, நடுவக்குறிச்சி கிராம மின்வாரிய தொகுப்பிற்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்குளம் கிராம மக்கள் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் நடுவக்குறிச்சி கிராம மின் தொகுப்பிற்கு மாற்றி அமைக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் டவுண் போலீசார் சென்று முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்ததை நடத்தி உரிய முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

    சங்கரன்கோவில், செப்.18-

    சங்கரன்கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் அருகே கீழ நரிக்குடி, மேல நரிக்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் சங்கரன்கோவில் தி.மு.க. செயலாளர் ராஜதுரை தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், தகவல் தொழிற்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டைட்டஸ், இளங்கோ மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களுடன் சிவில் சப்ளை தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
    சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜ கோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.

    மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.

    சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

    இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ‘ஆடித்தபசு’ ஆகும். அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

    சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

    இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெரு மானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டு கிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    அற்புத சக்கரம்

    கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்திற்கு ‘ஆக்ஞா சக்கரம்’ என்று பெயர். அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம். அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது.

    நோய் தீர்க்கும் புற்றுமண்

    இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும், புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்ட விடாமல் குடும்பத்தை காக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக் கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும்.

    திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. 
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 25-ந்தேதி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை நடந்தது. மதியம் 12.05 மணிக்கு மேல் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதிஅம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 2.45 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார்.

    அப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்டவற்றை சப்பரத்தில் போட்டனர். பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 5.14 மணிக்கு சிவபெருமான், கோமதிஅம்பாளுக்கு ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘சங்கரா, நாராயணா‘ என்று விண்ணதிர பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசு காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதிஅம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடித்தவசு காட்சி நடக்கிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அனைத்து நாட்களிலும் கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் யாகசாலை மண்டபத்தில் தினமும் பக்தி சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, பட்டிமன்றங்கள், சிறப்பு பரத நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் வருதல் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு விளா பூஜையும், 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2.45 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தவசுகாட்சிக்கு புறப்பாடும் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக தவசுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசுக்காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த காட்சியை காண்பதற்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் செய்து உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில், நகரசபை நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். 
    சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந் துள்ள தங்க கொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது. ராஜபட்டர் கொடியை ஏற்றினார்.

    இதையடுத்து தர்ப்பை புற்கள் பட்டு வஸ்திரங்கள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம் , இளநீர் உள்பட புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, மற்றும் மண்டகபடிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 27-ந்தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கு, இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    ×