search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காண்டிராக்டர்"

    புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி சாந்திமதி (வயது 45). இவர்களுக்கு பொன்னி, தாமரை ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதி (70) என்பவரும் வசித்து வருகிறார்.

    பொன்னியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ஆஸ்பத்திரி செலவுக்காக பொன்னி தனது நகைகளை புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து விட்டு ரூ.6 லட்சம் பெற்றார். பின்னர் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தாயார் சாந்திமதியுடன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள். ஸ்கூட்டியின் பின்னால் சாந்திமதி இருந்தார். அப்போது யாரோ அவர் மீது அரிப்பு பொடியை தூவியதாக தெரிகிறது.

    இதனால் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும் பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு சாந்திமதி ஒரு அறைக்கு சென்று விட்டார். கட்டிலில் ரங்கநாதனின் தாயார் பார்வதி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து கட்டிலில் இருந்த பணப்பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

    பின்னார் அவர் அங்கு நின்ற மற்றவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்னி வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வருவதை பார்த்து நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் ஒரு வங்கியின் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது கட்டிட காண்டிராக்டர் ரங்கநாதன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்பாண்டி (22), மூர்த்தி (48) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் பெரும்பாலும் அரிப்பு பொடியை தூவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

    மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    திருக்காட்டுப்பள்ளி அருகே காண்டிராக்டரை காரில் கடத்திய மர்ம கும்பல் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்குவாடி தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 5-ந்தேதி திருச்சி சென்று கடப்பா கல் வாங்கி கொண்டு வேனில் கல்லணையை அடுத்த கச்சமங்கலம் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கந்தவேல் சென்ற வேனை மறித்து கண்ணில் துணியை கட்டி அவரை கடத்தி சென்றனர்.

    அவர்கள் கந்தவேலிடம் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் உங்களையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் கந்தவேல் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தந்தால் விட்டு விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கும் அவர் உடன்படாததால் அவர்வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று ரூ.37 ஆயிரம் எடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தெரிந்து விட்டால் தங்களை பிடித்து விடுவார்கள் என்று கருதிய கொள்ளையர்கள் கந்த வேலை நேற்று இரவு 11 மணி அளவில் துவாக்குடி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து கந்தவேல் தோகூர் போலீசில் இன்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக திருவையாறு டி.எஸ்.பி. குணசேகரன், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோரும் விசாரணை நடத்தி காண்டிராக்டரை கடத்தி நகை- பணம் பறித்த 4 பேரையும் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் காண்டிராக்டர் கந்த வேலை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் சிக்கினால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    திருப்பூரில் காண்டிராக்டரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பில்டிங் காண்டிராக்டர். இவருக்கு முத்தனம்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து ரூ. 14 லட்சம் கடன் பெற்றார்.

    பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதையடுத்து பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் செல்வகுமார் என்பவர் அறிமுகமானார்.

    செல்வகுமார் காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வங்கி கடன் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கிருஷ்ணமூர்த்தியை செல்வகுமார் அழைத்து சென்றார். அந்த வங்கியின் மேலாளராக இருந்த சிலம்புசெல்வி என்பவர் கடன் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். மொத்தம் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஒதுக்கிய அவர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.37 லட்சத்தை புரோக்கர் செல்வகுமாருடன் பங்குபோட்டு கொண்டார்.

    இந்த நிலையில் சிலம்புசெல்வி சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். வங்கியில் இருந்து காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.54லட்சத்து 50 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு வந்து தான் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் தான் கடன் வாங்கினேன் என்றார். ஆனால் வங்கி அதிகாரிகள் ரூ.54 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதை காட்டினர்.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கியின் முன்னாள் மேலாளர் சிலம்புசெல்வி, புரோக்கர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான காண்டிராக்டர் உள்பட 2 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் வனப்பகுதியில் காற்றில் சாய்ந்த 4 மரங்களை வெட்ட டெண்டர் எடுத்தவர் 121 மரங்களை வெட்டி கடத்தியது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஊர் கவுண்டரும், மரங்களை வெட்ட டெண்டர் எடுத்த காண்டிராக்டருமான கோம்பூரை சேர்ந்த ஆண்டி (வயது 64), மணிவண்ணன் (50) ஆகிய 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    தமிழகத்தில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. #ITRaid #SPKConstruction
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

    செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

    தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.



    அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஓட்டலும் உள்ளது.

    இந்த நிலையில் பாலையம்பட்டியில் உள்ள அவரது வீடுகளுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 5 கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்லவும், யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.



    செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. செய்யாத்துரையின் மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து பின்னர் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கும் விசாரணை மேற்கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 6 மணி முதல் சோதனையை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய, பெசன்ட் நகரில் உள்ள டி.வி.எச் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இதன் உரிமையாளர் கே.என். ரவிச்சந்திரன், திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. ரவிச்சந்திரன் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த கார் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

    இதே போன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரெங்கன் சாலை, பார்த்த சாரதி கார்டன் தெருவில் உள்ள செய்யாத்துறையின் உறவினர் தீபக் என்பவருடைய வீடு மற்றும் கோவிலம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ‘எவால்வு குளோத்திங் கம்பெனி’யிலும் சோதனை நடந்தது. தீபக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் மூட்டையாக கட்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    சேத்துப்பட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவருடைய வீடு மற்றும் மேத்தா நகரில் உள்ள கூட்டு நிறுவனத்தின் நிர்வாகி வீடு மற்றும் செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்பட எஸ்.பி.கே. நிறுவனத்தின் தொடர்புடைய நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதனுடைய நிர்வாகிகளின் வீடுகள் உள்ள அண்ணாநகர், அபிராமபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனை நடந்தபோது அலுவலகங்கள் முற்றிலும் இழுத்து மூடப்பட்டு உள்ளே இருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கட்டுமானம் நடந்து வரும் பணிகளுக்கான ஒப்பந்த கோப்புகள், வங்கி ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த சோதனையில் கணக் கில் வராத ரூ.120 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    வீடுகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களை சோதனை செய்தனர். அந்த கார்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்தனர். பின்னர் அந்த பணத்தை கைப்பற்றி அவற்றை எண்ணினார்கள்.

    திருவள்ளூர், நாமக்கல், பொள்ளாச்சி, ராமநாதபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு நடக்கும் பராமரிப்பு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இந்த நிறுவனம் கவனித்து வருவதாக கூறப் படுகிறது.

    புதிதாக விருதுநகர் கோட்டத்தையும் இந்த நிறுவனத்துடன் ஒப்படைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால், இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவருடைய காரில் இருந்து ரூ.25 கோடி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் காரில் இருந்து ரூ.24 கோடி மற்றும் தீபக் வீட்டில் இருந்து ரூ.28 கோடியும் பறி முதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகிறது. அதே போன்று பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ தங்கம் மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து வருமான வரி சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    ×