search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்தகிரி"

    கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவன் சக்திவேல் பின்னர் விளையாட சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 10 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் கிடந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். இதனையடுத்து அவனது பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காய்கறி செடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தது. இதையொட்டி தங்களது விளைநிலங்களை தயார்படுத்தி கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மேரக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது மழை குறைந்து பயிர்களுக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால், களை பறித்து மழைநீர் செல்லும்படி தோட்டங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. மேலும் அவ்வப்போது மழை பெய்வதால் உரமிட்டு, செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கோத்தகிரி பகுதியில் போதியளவு மழை பெய்ததால், தரிசாக கிடந்த நிலத்தை உழுது காய்கறிகளை பயிரிட்டு உள்ளோம். அதிலும் தற்போது பீட்ரூட்டுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் எங்களது தோட்டத்தில் பீட்ரூட் பயிரிட்டுள்ளோம். நடவு செய்து 2 மாதங்களில் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகிவிடும். தற்போது பூச்சிகள் தாக்காமல் இருக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி லிட்டர் என்ற அளவில் டுபோண்ட் என்ற பூச்சி மருந்தை கலந்து செடிகளில் தெளித்து வருகிறோம். மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. எனவே இந்த முறை பீட்ரூட் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை மாமரம் உள்பட சுற்றுவட்டார ஆதிவாசி கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசனாக இருப்பதால் பலா மரங்களில் ஏராளமான காய்கள் காய்ந்துள்ளன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியிலிருந்து காட்டு யானைகள் இந்த பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.

    மேலும் இந்த சாலையின் பெரும்பகுதி வனப்பகுதி வழியாகவே செல்வதால் ஆங்காங்கே யானைகள் சாலையை கடக்கும் வழித்தடங்களும் உள்ளன. எனவே பலாப்பழங்களை உண்ண வரும் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலை வழியாக கும்பலாக நடந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

    எனவே இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், தற்போது குஞ்சப்பனை மாமரம், செம்மனாரை, கீழ்கூப்பு, மேல்கூப்பு உள்பட ஆதிவாசி கிராமங்களில் உள்ள பலாமரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. பலாப் பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியிலிருந்து வந்து பலாப்பழங்களை உண்டு வருகின்றன.

    எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் பலாப்பழங்கள் விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கவோ அல்லது செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்க கூடாது.

    மேலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யானைகள் சாலையை கடக்க நேர்ந்தால் சற்று நேரம் காத்திருந்து யானைகள் சென்ற பின்பே செல்ல வேண்டும். காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) ஒலிக்க வைத்து யானைகளை மிரள வைத்தலை தவிர்க்க வேண்டும்.

    இதுமட்டுமின்றி ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது தனியாக செல்லாமல் ஒன்றாக செல்ல வேண்டும். வயதானவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும். இதனால் யானைகள் மனிதர்களை தாக்குவதை தவிர்க்க முடியும், என்று தெரிவித்தார்.
    கோத்தகிரியில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமி‌ஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.
    ×