search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 115469"

    பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கீழக்கரை:

    மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சக திட்டத்தின்கீழ் சைல்டு லைன் அமைப்பு மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கும், ஆதரவில்லா பெண் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, குழந்தை திருமணம் தடுப்பு, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு திரும்ப செய்வது போன்றவற்றிற்கு பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி கீழக்கரை நகரில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், துண்டு பிரசுரம் மூலமும் பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் துணை மைய இயக்குனர் தேவராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வின்சென்ட், ஆனந்தராஜ், காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், வர்த்தக சங்க தலைவர் சாலிகு, ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    சாத்தூரில் உள்ள அமிர்தா பவுண்டேசன் மதுபோதை மறுவாழ்வு மைய அலுவலகத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    விருதுநகர்:

    சாத்தூரில் உள்ள அமிர்தா பவுண்டேசன் மதுபோதை மறுவாழ்வு மைய அலுவலகத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் கார்த்திக் செல்வம் முன்னிலை வகித்தார்.

    வக்கீல் ஸ்டாலின் கருத்துரை வழங்கினார். மனநல டாக்டர் குமரேசன் மதுபோதை பாதிப்புகள் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆலோசனை வழங்கினார். தேசிய இளையோர் விருதாளர் விஜயராகவன் உடல் நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மது போதையால் உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு அமிர்தா பவுண்டேசன் சார்பில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனையில் நிவாரணம் பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இறுதியில் தனியார் கிளினிக் இயக்குனர் பெருமாள்சாமி நன்றி கூறினார். 
    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதம் குறித்து நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    நாமக்கல்:

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில் மற்றும் சுஜாதா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகே தொடங்கிய ஊர்வலம் பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, சேலம் ரோடு, கடைவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நாமக்கல் பஸ் நிலையம் வந்தடைந்தது.

    இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அதில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விபத்துக்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
    வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேனகா, லட்சுமிபிரியா ஆகியோர் முன்னிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் சார்பில், இலவசமாக பிரேக் உள்ளிட்ட வைகளை சரிபார்த்து கொடுத்தனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்து குறித்தும், இதனால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது. 
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சண்முகம், அண்ணாதுரை தலைமையில் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது.

    பைக் ரேசிங் போன்றவை சாலையில் தவிர்க்க வேண்டும், மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ-மாணவிகளிடமும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். 
    இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட மேலவாசல் கிராமத்தில் புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகமாகும். இந்த நூலகம் மாட்டு வண்டியில் செயல்பட்டது. இதன் நினைவை போற்றும் வகையிலும், புத்தக வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மன்னார்குடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    மன்னார்குடி கிளை நூலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மேலவாசல் கிராமம் வரை மாட்டுவண்டியில் நடமாடும் நூலகம் சென்ற பாதை வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்றது. இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்துக்கு திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் திருநாவுக்கரசு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நூலகர் அன்பரசு வரவேற்றார். ஜேசீஸ் அமைப்பின் மன்னை தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    ஊர்வலத்துக்கு மேலவாசல் கிராம எல்லையில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து மேலவாசல் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலகர் லெட்சுமணன் வரவேற்றார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டார் வழக்காற்றியல் துறை தலைவரும், பேராசிரியருமான காமராசு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தகம் வாசிப்பது வாழ்க்கையை வளப்படுத்தும். மேலவாசல் கிராமத்தை தேர்ந்தெடுத்து நடமாடும் நூலகத்தை தந்த கனகசபை பிள்ளை என்பவரை நினைவு கூரும் விதமாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மேலவாசல் கிராமத்தில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட நாள் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி ஆகும். ஆகவே வருகிற அக்டோபர் 21-ந் தேதிக்குள் ஒவ்வொரு வீட்டிலும் புத்தகத்தை வாசித்து, அதை வாசிப்பு திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் அறிவுரையின்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, செங்கோடன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்வதால், விபத்தில் மரணத்தை தவிர்க்கலாம் என்பது குறித்தும், வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது பற்றியும், விபத்தில் உயிர் பலியை தடுக்க இரு சக்கர வாகனத்தை ஓட்டுச் செல்பவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 
    அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu
    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது. அறக் கட்டளை தலைவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.துரைக்கண்ணு முன்னிலை வகித்தனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து துணை-ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    நம் நாட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு. உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்திய மக்களில் கணிசமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். 2015-16-ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 5 வயதுக்குட்பட்ட 38.4 சதவீத இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாகவும், 35.7 சதவீத குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையில் இருக்கிறோம்.

    கர்ப்ப காலத்தில் 5-ல் ஒரு பகுதி பெண்கள் ஆற்றல் குறைபாடு உள்ளவர்களாகவும், 5-ல் ஒரு பகுதி பெண்கள் பருமனாகவும் இருக்கிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த பிரச்சினையை போக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

    உணவு உட்கொள்ளுதல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமின்மை போன்றவை ஊட்டச்சத்து குறைபாடுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. கலோரி குறைபாடு, புரத குறைபாடு, நுண்ணுயிரி குறைபாடு ஆகியவை காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் காணப்படுகிறது.

    நம் நாட்டில் 60 சதவீதம் ஊரக குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கின்றனர் என தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ எனும் அணுகுமுறையானது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஊக்குவிக்கும் ‘ஊட்டச்சத்துக் கான வேளாண்முறை’ என்பது ஊரக இந்தியாவில் உள்ள குடும்பங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பெறுவதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகும்.

    எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரை பேரில் தான் தேசிய ஊட்டச்சத்து திட்டம் 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை ஆரோக்கியமாகவும், எதிர்காலத்தில் ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ‘கண் மேற்பரப்பு மற்றும் கார்னியா சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்றார். விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்திரிநாத் தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    பார்வை இழப்பை ஒழிப்பதில் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் திகழ்வதுடன், சமுதாயத்தின் பெரும் பகுதியை மேம்படுத்துவதில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நன்கொடைகள், மானியங்கள் ஏழைகளுக்கு சேவையாற்ற பயன்படுகிறது.

    குழந்தைகளின் பார்வை விஷயத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுண்ணாம்பு உள்ளிட்ட ரசாயன பொருட்களால் பார்வை பறிபோக வாய்ப்பு அதிகம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வகை பொருட்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொள்கை அளவில் முடிவு செய்து சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கருத்தரங்கின் மூலம் நாடு முழுவதும் வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை உபயோகிப்பவர்கள் பயன்படுத்தும் ‘சுண்ணாம்பு பாக்கெட்’, கழிவறைகள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் கண் மேற்பரப்பு பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  #VenkaiahNaidu  #tamilnews

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வசந்தாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    போதை பழக்கத்தினால் வரும் நோய்கள் மற்றும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி செய்து இருந்தார்.

    மோகனூர் காவல் துறை, சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் மோகனூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கல்லூரி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார். குமரிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் நவலடி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போலீஸ் நிலையம் முன்பு தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, அரசு மருத்துவமனை, வளையபட்டிசாலை எல்.ஐ.சி அலுவலகம், பஸ் நிலையம் வழியாக மீண்டும் போலீஸ் நிலையம் வந்தடைந்தது. இதில் மோகனூர் போலீசார், சுப்பிரமணியம் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் அறநிலையங்களின் தலைவர் சோமசுந்தரம் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய வேலூர் கிளை பொறுப்பாளர் அம்பிகா முன்னிலை வகித்தார். போதை மற்றும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலம் பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், தேசிய மாணவர் படை மாணவ,மாணவிகள், பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் போலீசார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாமகிரிப்பேட்டை போலீசார் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கியது. இதில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தை தேசிய மாணவர் படை கமாண்டர் அபிசேக் சேத்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் போதைப்பொருள் உபயோகிப்பதால் விளையும் தீமைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள். போதையின் தீமைகள் குறித்து விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். திருச்செங்கோடு புதிய பஸ்நிலையம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் அருகே நிறைவடைந்தது.

    ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுத்தேர்தலை போன்று பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கை விரலில் மையிட்டு, ஐ-பேடில் வாக்களித்தனர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் நிர்வாக குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், தலைவி, விளையாட்டு செயலாளர், கலை இலக்கிய செயலாளர் ஆகிய 4 பொறுப்பாளர்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய அணிகளை கொண்ட 4 அணித்தலைவர் மற்றும் 4 துணை தலைவர்கள் என மொத்தம் 12 பொறுப்புகளுக்கு 38 மாணவ-மாணவிகள் போட்டியிட்டனர்.இவர்கள் சக மாணவர்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.



    இதற்காக பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள அரங்கில் 8 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐ-பேடு வைக்கப்பட்டிருந்தது. வாக்குபதிவை பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி வாக்களித்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அந்தோணிராஜ், தலை மை ஆசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு பொதுத்தேர்தலில் வைப்பது போல கை விரலில் மை வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவர்கள், 12 பதவிகளுக்கு போட்டியிடும் மாணவ-மாணவிகளின் புகைப்படங்களை தொட்டு இணைய தளம் மூலம் வாக்களித்தனர். அவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால் பொதுத்தேர்தலில் உள்ளது போன்று ‘நோட்டா’ வாக்கு பதிவு செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிறுவனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே அரசியல் அறிவுபெறவேண்டும். தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை.நாட்டின் நலன் கருதி அதை தவற விடக்கூடாது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலை நடத்தினோம். இதில் 742 மாணவ-மாணவிகள், 86 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 832 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பதிவு எண்ணப்பட்டு, 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். 
    குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

    குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ-மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசினார்.
    தர்மபுரி:

    எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் முன்னிலை வகித்தார்.

    மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் ஆஷாபிரடரிக், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, மாவட்ட திட்ட மேலாளர் பிருந்தா, டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் எய்ட்ஸ் தடுப்பு குறித்தும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் எச்.ஐ.வி. நோய்தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் மலர்விழி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உயர்தர சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் இறப்பில்லாத நிலையை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பதாகைகளில் கையெழுத்திட்டனர். எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
    ×