என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் பறக்கும் படை"
- ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு காளை மாட்டு சிலை அருகே பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்தபோது அவர் திருச்சியை சேர்ந்த செல்வக்குமார் என்பதும், சொந்தமாக தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. தொழில் சம்பந்தமாக பணத்தை ஈரோடுக்கு கொண்டு வந்தபோது வாகன சோதனையில் சிக்கி உள்ளார்.
பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இதுவரை 22 லட்சத்து 97 ஆயிரத்து 840 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் இன்று காலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் சின்னகோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது.
இதுகுறித்து காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
- மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
உசிலம்பட்டி:
பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பணபட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தற்போது இருந்தே தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை என நடத்திய சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியுள்ளன.
மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பிரிவில் அதிகாரிகள் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அ.தி.மு.க. கொடி கட்டிய கார் அந்த வழியாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியை அடுத்துள்ள காராம்பட்டி யைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கிருபாகரன் (வயது 29) இருந்தார்.
தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் கிருபாகரனிடம் இல்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவினாசி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவினாசி ரவுண்டானா பகுதியில் சோதனை செய்தபோது, சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் வந்திறங்கிய மதுரை சிவகங்கை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (வயது 27) என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் பண்டலாக ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரஹ்மத்துல்லாஹிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கணுவாய்-ஆனைகட்டி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
காருக்குள் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.
மொத்தம் 28 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது40) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 28 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் சாலையில் குபேரபுரி என்ற இடத்தில் மாநில வரி அலுவலர் மார்ஷல் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 270 வைத்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது, காய்கறி வியாபாரம் பார்த்து வருவதாகவும், அதில் கிடைத்த பணத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பேரூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு 5.52 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
- சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.
- நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது.
- மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நத்தம்:
திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த காரில் ரூ.1,27,780 பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை. மதுரை கடச்சநேந்தலைச் சேர்ந்த மாரிமுத்து என்ற அந்த நபர்தான் ஒரு காய்கறி வியாபாரி என்றும் மொத்தமாக மதுரையில் இருந்து காய்கறிகள் வாங்கி விற்று வருவதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.
பரமத்திவேலூர்:
பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை லோடு ஏற்றிச் செல்ல வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா எர்ணாகுளம் பாரிஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் (27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதுபோல் திருச்செங்கோடு- மோர்பாளையம் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
- உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
தருமபுரி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, தருமபுரி மாவட்டத்தில், 10 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை குழுவினர், 45 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டி கூட்டு ரோடு அருகே ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தருமபுரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 11.58 லட்சம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. இதையடுத்து, பறக்கும் படையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், லளிகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன், 29 என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை தருமபுரிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து கைப்பற்றிய பணத்தை, பறக்கும் படை யினர், தருமபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
பணத்துக்கான உரிய ரசீதை ஒப்படைத்து, வருமான வரித்துறையினரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் பணத்தை எடுத்து வந்த மோகனிடம் தெரிவித்தனர். இதே போன்று தொப்பூரில் உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட, ரூ.69 ஆயிரம் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி அருகே பறக்கும் படையினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த போர்ஸ் டிராவலர்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.
அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாதா மலர் பீடி நிறுவனத்தின் மூலம் தயாரித்த புகையிலை வியாபார பொருட்களை ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளராக இருந்து வருவதாகவும், விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,
- கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
- தொகை அதிகம் என்பதால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரேபாளையம் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து கோவை நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அரசு பஸ்சில் இருந்த ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது பின்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பேக் அணிந்திருந்தார். அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.35 லட்சம் இருந்தது.
இது குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் தாவணி கரையைச் சேர்ந்த ஹரிஷ் (வயது 32) என்பதும், கோவையில் தான் நிலம் வாங்கி உள்ளதாகவும் இடம் விற்பனை செய்த நபருக்கு இந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார்.
எனினும் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தொகை அதிகம் என்பதால் இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்று பணத்தை பெற்றுக்கொண்டனர்.
- விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று மாலை வரை நடந்த சோதனையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் உண்ணாமலை கடையில் ரூ.1.50 லட்சமும், கொல்லங்கோடு பகுதியில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ரூ.15 லட்சத்தில் 96 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று காலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டி குளம் பகுதியில் பறக்கும் படையினர் தாசில்தார் ராஜாசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் பேக் ஒன்றில் ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்தார். அந்த பணம் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மேலும் உரிய ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.62,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் ரூ.50,800 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலை மாவட்டம் முழுவதும் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்து 882 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், இருளப்பபுரம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படையினர் மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
- விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
- உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.
பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-
"தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.
உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.