search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை"

    அ.ம.மு.க.வில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை கிடையாது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    வேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

    துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது.


    ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.

    மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை.

    தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.

    ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.

    வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.

    தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran

    சிறுபான்மையினருக்கு அரசு கடன் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் என்று ‘டாம்கோ’ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் அறிவுறுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரும், டாம்கோ மேலாண்மை இயக்குனருமான வள்ளலார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழக அரசால் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள சிறுபான்மையினர் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டாம்கோ நிறுவனத்தின் மூலம் பயனாளிகளுக்கு தனிநபர் கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் உள்ளிட்ட கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தாய்கோ வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    டாம்கோ திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டில் 252 பேருக்கு ரூ.84 லட்சத்து 37 ஆயிரம் சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கும்போது சம்பந்தப்பட்ட தொழிலுக்கு கடன் தொகையை பயனாளி பயன்படுத்துவதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், பெறப்பட்ட கடன்தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் பயனாளிகளை திருப்பி செலுத்த செய்ய வேண்டும்.

    டாம்கோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக அரசால் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அலுவலர்கள் தகுதியானவர்களுக்கு கொண்டு சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் மிருணாளினி, ஆவின் பொது மேலாளர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×