search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    • இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது.
    • ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிட்ட தீர்த்தம் உள்ளது.

    இதில் வசிட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் பெற்றார். அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

    இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.

    இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட் கொண்டவர்களும் துன்பக்கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடிகளையும் இடமாக பெருவார்கள். அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத்தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

    • அண்ணாமலையார் ஆண்டிற்கு 2 முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.
    • அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார்.

    ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலை யாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.

    அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.

    அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகபடி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.

    கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும் அவைகளை விரட்டுவதற்காகவும் அண்ணாமலையார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.

    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!

    இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!

    நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • நெற்கதிர்களை அண்ணாமலையாருக்கு மாலையாக அணிவித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஒரே பகுதியில் உள்ள விவசாய நிலத்தினை அருணாசலேஸ்வரர் பார்வையிடும் வைபவம் நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டிராக்டர் மூலம் சாலை வழியாக வந்தார்.

    கலசபாக்கம் செல்லும் சாலையில் நாயுடுமங்கலம் அருகே உள்ள தனகோட்டிபுரம் கிராமத்தில் ஏரியின் அருகில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகளும் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை ஆண்டுதோறும் கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறும் ஆற்று திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் வந்து பார்வையிடும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு அண்ணாமலையார் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தினை பார்வையிடுவதற்காக அதிகாலையில் சென்றிருந்தார் அப்போது கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அண்ணாமலையாருக்கு மாலையாக அணிவித்தனர். மேலும் விவசாயம் மூலம் கிடைத்த அரிசியை கொண்டு பொங்கல் வைத்து அண்ணாமலையாருக்கு படையல் இட்டு வழிபட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்த வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

    • திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.
    • இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது.

    பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2688 அடி.

    அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

    இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பவுர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும்.

    காரணம் பவுர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும்,

    மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.

    மலை வலம் வரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் ரூ. 12 லட்சம் செலவில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தால் மலைசுற்றி வரும் 14 கிலோமீட்டர் பாதை முழுவதற்கும் சோடியம் ஆவி விளக்குகள் புதிதாக பொருத்திதரப்பட்டுள்ளது. இது இரவில் மலைவலம் வரும் பத்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    மலை வலம் வரும் வழியில் ஆங்காங்கே நகர நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் குழாய் பம்ப் போடப்பட்டு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலனுக்காக குறிப்பிட்ட காலத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில் ஆங்காங்கே அன்னதானமும் மற்றும் ஒரு சில மெய் அன்பர்களால் பால் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

    • இங்கு மலையே கடவுள்.
    • ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.

    திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.

    மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.

    இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை. இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது? சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.

    இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில். கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம். மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம். மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும்.

    அது திரிமூர்த்தி தத்துவம், மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம். இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.

    • முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.
    • எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம் என்று உரைத்தார் நந்தி தேவர்.

    திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள். அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.

    அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல. ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது. அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும். ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது. முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.

    அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான். தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான். மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான். வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.

    மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர். இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.

    வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை. எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம் என்று உரைத்தார் நந்தி தேவர்.

    • கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    • மகாதீப தரிசனம் கண்டால் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

    நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

    கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

    கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

    • மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்
    • அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.
    • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

    திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டுச் சென்று, வரம் வாங்கித்திரும்ப வேண்டும் என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்தப்பாக்கியம் கிடைத்து விடாது?

    பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார். 14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

    இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள். "இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள். உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். உங்களையும் அறியாமல் தினமும்' நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

    அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா? என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும். ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள். இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

    இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும். நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும். வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

    மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார், " இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

    மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும். பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

    சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர் அருள் மள, மளவென வரிசையாகத்தேடி வரும். இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது. புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள், மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

    சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள். அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு அவரே வரும்படிச்செய்து அருள்பாலித்து விடுவார்.

    பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும். அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து' நமச்சிவாயா நமஹ' அருணாச்சலேஸ்வரா நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

    முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும். இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள். அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும். மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள். அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

    அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

    • அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை
    • திருவண்ணாமலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.

    இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

    இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும்.

    அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும்.

    யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும், நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும்.

    வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும்.

    வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும்.

    குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும்.

    ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.

    • திருவண்ணாமலைத் தலத்தில் மலையே சிவன்.
    • இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன.

    பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலையை அருணையம்பதி, முக்திபதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். சுமார் 2664 அடி உயரமுள்ள திருவண்ணாமலையை தட்சணகைலாசம் என்று கூறுவதுண்டு.

    திருவண்ணாமலை பல மலைகள் இணைந்த ஒன்றாகும். இந்த மலைகளை வலம் வருவதற்கு 14 கிலோமீட்டர் நீளப்பாதை உள்ளது.

    திருவண்ணாமலை, சிவபெருமானின் அருவ வடிவமாகும். மலையின் அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ளது.

    விண்ணுயர நிற்கும் ராஜகோபுரம் கோவிலின் கிழக்கில் அமைந்துள்ளது. அது 216 அடி கொண்டதாக 11 நிலைகளுடன் உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டினார். இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இங்கு சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரு தீர்த்த குளங்கள் உள்ளன. 56 திருச்சுற்றுகளைக் கொண்டது திருவண்ணாமலைத் திருக்கோவில்.

    கருவறைத் திருச்சுற்றில் 14 லிங்கமூர்த்தங்களும், 63 நாயன்மார்களும், சிவனடியார்களும், சப்தமாதர்களும் தெய்வ மூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் வட்டவடிவமான ஆவுடையார் மீது லிங்க உருவிலே அண்ணா மலையார் எழிலாகக் காட்சி தருகின்றார். அவரை பிரதட்சிணமாக வந்து இடப்புறம் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம்.

    சன்னதியிலுள்ள மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்ப வேலைபாடுகள் சிந்தையை நிறைக்கின்றன. உண்ணாமுலை அம்மனை தரிசித்துவிட்டு அங்குள்ள நவக்கிரகங்களையும் சுற்றி வந்தால் நலன் கோடி விளையும்.

    திருவண்ணாமலைத் தலத்தில் மலையே சிவன். சுயம்புவாக எழுந்த அக்னிமலை நாளடைவில் கல் மலையாக மாறியது.

    இம்மலையில் உள்ள செடி, கொடி, மரங்கள் யாவுமே மருத்துவப் பயனுள்ள மூலிகைகளாகும். மலையில் பல குகைகள் உள்ளன.

    சிறியதும், பெரியதுமாக உள்ள இந்த குகைகளில் துறவிகளும், முனிவர்களும், சித்தர்களும் தவநிலையில் வீற்றிருப்பதைக் காணமுடியும். பிரசித்தி பெற்ற அக்னித்தலமான திருவண்ணாமலையில் நாள்தோறும் திருவிழாக் கோலம்தான்.

    கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும் திருநாள் கார்த்திகைத் திருவிழாவாக 13 நாட்கள் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. ''திருவண்ணாமலை தீபம்'' என்று இந்த விழா சிறப்பித்து கூறப்படுகிறது.

    இது இறைவனை ஜோதியாக, சுடராக, தீபமாக, விளக்காகப் போற்றித் துதிக்கும் திருவிழா. திருவண்ணாமலையில், கார்த்திகைத் திருநாளன்று பஞ்சமூர்த்திகள் சன்னதிக்கு வெளியில் வந்து நின்றதும், அண்ணாமலையில் அகண்டதீபம் ஏற்றப்படும்.

    மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சராக இருந்தவர் வேங்கடபதிராயர். அவர் 1745-ம் ஆண்டு அண்ணாமலை தீபம் ஏற்றுவதற்காக வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை ஒன்றை வழங்கினார். இன்றும் இந்தக் கொப்பரையில்தான் மலைமீது தீபமேற்றுகிறார்கள். இந்தக் கொப்பரையில், கிலோக்கணக்கில் நெய் வார்த்து புதுத் துணியால் திரி செய்து தீபம் ஏற்றுவார்கள்.

    அண்ணாமலை தீபம் சில நாட்கள் வரை தொடர்ந்து சுடர்விடும்.

    13 நாட்கள் கொண்டாடப்படுகிற கார்த்திகை தீபத்திருவிழா முதல் மூன்று நாட்கள் துர்க்கை கோவிலிலும் அடுத்து வரும் பத்து நாட்கள் அண்ணாமலையார் கோவிலிலும் நடைபெறும்.

    சிவ வடிவமாக விளங்கும் இந்த மலையை தரிசிப்பதும் வலம் வருவதும் புனிதமானதாகும். கிரிவலம் வருவதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாட்களே. எனினும் சித்திரை முதல் நாளும், சிவராத்திரி தினமும், பவுர்ணமி திதியும் உகந்தவையாகும்.

    அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு கோபுர வாயிலை தரிசித்து விட்டு பின்பு கிரிவலம் செய்ய வேண்டும். பூத நாராயண பெருமாள், இரட்டை விநாயகரை வணங்கி கிரிவலம் தொடங்குவது மிக, மிக நல்லது. இடையில் எங்கும் நிற்காமல் நிறுத்தாமல் தொடர்ந்து கிரிவலம் வர வேண்டும். முடிவில் கிழக்கு வாயிலில் நிறைவு செய்ய வேண்டும் என்பது நியதி.

    பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் ஜீவ சமாதியடைந்த இடத்தையும் வலம் வரும் போது காணலாம். பல சுனைகளும், பாறைகளும், தீர்த்தங்களும், கோவில்களும், சமாதிகளும் நிறைந்தது திருவண்ணாமலை கிரிவலப்பாதையாகும். மனதை ஒருநிலைப்படுத்தி வலம் வந்தால் நிச்சயமாக சித்தர் பெருமக்களின் ஆசியைப் பெறலாம்.

    • இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார்.

    ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கினார்.

    இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    இந்த ஊடல் மற் றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.

    அங்கிருந்து இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பாடு நடந்தது. கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சாமி அம்மன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்கள். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விடுமுறை தினம் என்பதால் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×