search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமலை"

    திருமலையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, திருப்பதி போலீசார் 24 மணிநேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tirupati #BabyRescued
    திருப்பதி:

    திருமலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் தூங்கி கொண்டிருந்த பெற்றோரிடம் இருந்து, 3 மாத ஆண் குழந்தையான வீராவை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையை காணாதது கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    திருமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

    இதுபற்றி திருமலை போலீசார், திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்த துளசி என்பது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊர், சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் ஆகும். அவரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதியை காண்பித்தது.

    திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதிக்குச்சென்ற திருப்பதி போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரித்தனர். அங்கு, கைக்குழந்தையோடு ஒரு பெண் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பிடிப்பட்ட துளசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    துளசி, போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும் கார்வேட்டிநகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு தலைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென இறந்து விட்டது. 2-வதாக நான் கர்ப்பம் ஆனேன். அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனால் என்னை விட்டு, கணவர் பிரிந்தார்.

    எனக்கு பெற்றோர் இல்லாததால், திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி வசித்தேன். அங்கு, எனக்கு தனிமை வாட்டவே, வேலைத்தேடி திருமலைக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்தபடி, இரவில் சென்று ஏதேனும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள எஸ்.வி.ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் படுத்துத்தூங்கி கொண்டிருந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஆண் குழந்தையை கடத்தினேன். என் செல்போன் அழைப்பு மூலமாக 24 மணிநேரத்தில் திருப்பதி போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.

    மேற்கண்டவாறு போலீசாரிடம் துளசி கூறினார்.

    இதையடுத்து துளசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, அக்குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் ஒப்படைத்தார்.

    அதற்கு அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  #Tirupati #BabyRescued

    தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் ஜனவரி 27-ம் தேதி திறக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. #TTD #TTDTemple #KanyaKumari
    திருமலை:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.
     
    அதைத்தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை அதிகாரியான அனில் குமார் சிங்கால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், தேவஸ்தானம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி கோவில்கள் போன்று கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில் ஜனவரி 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் திட்டமிட்டபடி மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். #TTD  #TTDTemple #KanyaKumari
    சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது. #Tirupati #TirupatiKudai

    சென்னை:

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது.

    ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று மதியம் பூஜைகளுடன் புறப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோ‌ஷங்களுடன் 11 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, சுவாமி சைதன்யானந்தா மகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     


    ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனி தாண்டுகிறது. அதன் பின்னர் சால்ட் குவாட்டர்ஸ், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் சென்றடைகிறது.

    நாலை (12-ந்தேதி) ஐ.சி.எப்.. ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வில்லிவாக்கம், சென்றடைகிறது. 13-ந்தேதி பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் செல்கிறது. 14-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றடைகிறது. 15-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்று 16-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜியர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகிறது.

     


    இதுகுறித்து ஹிந்து தர்மர்த்த சமிதி அறக்கட்டளை அமைப்பு செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருமலையில் திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 16-ந்தேதி திருக்குடைகள் திருமலையில் சமர்பணம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiKudai

    இன்று சந்திரகிரகணம் நடைபெறுவதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இன்று மாலை 5 மணி முதல் நாளை அதிகாலை 4.15 மணி வரை சாத்தப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகபிரசித்தி பெற்றதாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு சந்திரகிரகணம் பூர்த்தியாகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி முதல் நாளை அதிகாலை 4.15 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து சுப்ரபாதசேவையுடன் நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் காலை 7 மணி முதல் இலவச, பிரத்யேக, திவ்ய தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜிதபிரம்மோற்சவ சேவைகள், மாதந்தோறும் நடைபெறும் கருடசேவையும் இன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை அன்னபிரசாதமும் ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார். 
    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது. புஷ்கரணி ஆரத்தியும் ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்துடன் செப்டம்பர் மாதம் 13-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    இரு பிரம்மோற்சவ விழாக்களை முன்னிட்டு தூய்மைப்படுத்தி, சீரமைக்கும் பணிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை ஒரு மாதத்துக்கு கோவில் தெப்பக்குளம் (புஷ்கரணி) மூடப்படுகிறது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளிப்பதற்காக புஷ்கரணியின் பின் பக்கம் குழாய்கள் அமைக்கப்பட்டு வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புஷ்கரணியில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட உள்ளது. தண்ணீரை வெளியேற்றியதும், படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தரை தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளது. படிக்கட்டுகளை சிமெண்டு பூசி சீரமைத்து, வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் புஷ்கரணி ஆரத்தி நடப்பது வழக்கம். எனவே தெப்பக்குளம் இன்று முதல் மூடப்படுவதால் ஒரு மாதத்துக்கு புஷ்கரணி ஆரத்தி நடப்பது ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பகல் 11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாளையொட்டி கோவிலில் நேற்று விசேஷ பூஜை, வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன பக்தர்கள் செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிந்தன. அதனையும் தாண்டி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    ரூ.300 கட்டணத்தில் 5 மணி நேரத்திலும், நடை பாதை பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்துக்குள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முதல் இன்று காலை வரை 86 ஆயிரத்து 744 பேர் சாமி தரிசனம் செய்தனர். 36,455 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று முன்தினம் 3.50 கோடியும் நேற்று 2 கோடியே 78 லட்சம் உண்டியல் வசூலானது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ்அப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ். என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊழியர்கள் பேசுவார்கள்.

    சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
    ×