search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர்"

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட் வைக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourtMaduraiBench #ParliamentElection
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

    பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது. 2016 சட்டசபை தேர்தலின்போது சுமார் 750 கோடி வரை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம்.

    எனவே தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.



    எனது மனுவின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கணக்கில் வராத பணம் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.

    பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமோ, கட்சி தலைவர்களிடமோ தேர்தல் செலவுகளை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மொத்தமாக பொதுமக்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    இதேபோல் பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் வேட்பாளர், தலைவரிடம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.

    அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். #HighCourtMaduraiBench #ParliamentElection

    பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


    பேனருக்கு தடை வரவேற்கத்தக்க ஒன்று. பொது மக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது என நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

    ஆனாலும் சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன். அதனை தி.மு.க. வினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது தீடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.

    சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்கள் மீது விழுந்த இந்த பேனரால், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
    தி.மு.க. நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ, அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளிலோ பேனர்கள், கட்-அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும், எந்த வகையிலும் பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும், கழகச் செயல் தலைவர் பொறுப்பேற்ற நேரத்திலேயே கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    அதைக் கழகத்தில் பல நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலும், ஒரு சில நிர்வாகிகள் ஆர்வ வேகத்தின் காரணமாக அந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பதில்லை என்பது, அண்மையில் கழகச் செயல் தலைவர் பங்கேற்ற அண்ணாநகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் வாயிலாகத் தெரிய வருகிறது.

    இந்த செய்திகளைப் படித்தவுடன் கழகச் செயல் தலைவர், சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகளை அழைத்து, பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாகப் பழுது பார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும் அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்து உள்ளனர்.

    ஆகவே கழகச் செயல் தலைவர் ஏற்கனவே விரும்பி வெளிப்படுத்தியவாறு, கழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கழக நிகழ்ச்சி குறித்து முக்கியமான ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது. இந்த அறிவுரைகள் மீறப்படாமல் பின்பற்றப்படுவதை கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
    பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.#JDS #kumaraswamy
    பெங்களூர்:

    நாளை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமி தனது தொண்டர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    எனது கட்சி தொண்டர்கள் எப்போதுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே எனது வேண்டுகோளை ஏற்று யாரும் கட்அவுட், பேனர் வைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#JDS #kumaraswamy
    கலைஞராக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு தி.மு.க. தொண்டர்களை அழைத்து கண்டித்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #UdhayanidhiStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘நான் எப்போதுமே அரசியலில் இருந்து வருகிறேன். என் தாத்தாவுக்காகவும் அப்பாவுக்காகவும் தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன். நான் சினிமாவில் இருந்துவிட்டு அரசியலுக்குள் நுழைவதுதான் விமர்சனங்களுக்கு எல்லாம் காரணம்.

    ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்த நான் அரசியலுக்கு வருவதை எப்படி தவறு எனலாம்? வேறு கட்சியில் இணைந்திருந்தால் இந்த பேச்சு வந்திருக்காதோ? எனது கட்சியில் நான் ஏதும் பதவி கேட்டேனா? இல்லை தேர்தலில் நிற்க சீட் கேட்டேனா? நான் மிக குறுகிய காலத்திலேயே மக்கள் கவனம் பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் விமர்சனம் செய்கிறார்கள்.’

    கேள்வி:- தாத்தாவும், அப்பாவும் உங்களுக்கு பலமா?

    பதில்:- இல்லை. எனக்கு பலவீனம் தான். ஒருவர் ஒரு கட்சியில் இருந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டால் அவருக்கு பாராட்டுகள் தான் கிடைக்கும். ஆனால் என் வி‌ஷயத்தில் அப்படி இல்லாமல் விமர்சனங்கள் தான் வருகின்றன. காரணம் நான் இந்த குடும்பத்தில் பிறந்தது தான்.’

    கே:- தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்தானா?


    ப:- அப்பா வி‌ஷயத்திலேயே இதற்கு பதில் இருக்கிறது. அப்பா வாரிசு என்பதால் பதவிக்கு வந்திருந்தால் எப்போதோ தலைவராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் தனது கடின உழைப்பால் மெதுவாக முன்னேறி இருக்கிறார். தலைவரின் மகன் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொறுமையும் கடின உழைப்பும்தான் அப்பாவின் தகுதிகள். அந்த தகுதிகள் அவருக்கு பதவியை தந்தது.

    கே:- உங்களை கலைஞராக சித்தரிக்கும் பேனர்கள் தான் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது?

    ப:- சில ஆர்வமிகுதி தொண்டர்கள் செய்யும் தவறான வேலை அது. அவர்களை அழைத்து நான் கடுமையாக கண்டித்ததோடு அந்த போஸ்டர்களை நீக்கும்வரை நான் வரமாட்டேன் என்று சொல்லி நீக்க வைக்கிறேன். தாத்தா, அப்பாவுடன் ஒப்பிடும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #UdhayanidhiStalin
    ×