search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். #SchoolEducationDepartment #ExamsChanged #ParliamentaryElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.



    பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும்  தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  #SchoolEducationDepartment #ExamsChanged

    5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அதிமுக அரசு கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #PublicExams #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ-மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

    மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க அரசே நினைத்துப்பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க அரசு பள்ளிப்பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

    ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களையும் “நுழைவுத் தேர்வு” “போட்டித் தேர்வு” “பொதுத் தேர்வு” என்று பலவந்தப்படுத்தி கிராமப்புறக் கல்வியறிவை அப்படியே தகர்த்தெறிந்து விட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு தலைஆட்டும் பொம்மை போல் அ.தி.மு.க அரசும் செயல்படுவது மன்னிக்க முடியாத துரோகம்.

    ஏற்கனவே, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று கட்டாய பொதுத் தேர்வுகள் இருக்கின்ற நிலையில், இப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது, ஒரு மாணவன் 12-ம் வகுப்பு படித்து வெளியில் வருவதற்குள் ஐந்து பொதுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கும், மன ரீதியிலான துன்பத்திற்கும் தள்ளப்படுகிறான். இந்த பொதுத்தேர்வுகள் பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவனின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைப்பதற்குச் சமம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் உணரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.



    5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் என்பது ஏதோ டெண்டரில் அ.தி.மு.க அமைச்சர்கள் கமி‌ஷன் அடிப்பது போன்றது அல்ல என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். கல்வியாளர்களையும், பெற்றோர்களையும் ஏன் மாணவர்களையும் கூட கலந்து ஆலோசித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரை வேக்காட்டுத்தனமாக அவசர கோலத்தில் எடுப்பது பல தலைமுறைகளை பாதித்து விடும்.

    ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசின் “காவிமய கல்வி” மற்றும் “சமூக நீதி” மற்றும் “கிராமப்புற மாணவர்களை” பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடி, கையைக் கட்டிக்கொண்டு, ஆமாம் சாமி போட்டு ஒத்துழைப்பதை அ.தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு, மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும்; கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PublicExams #MKStalin
    மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. #PublicExams
    சென்னை:

    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #PublicExams
    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #JactoGeo
    போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JactoGeoStrike #TeachersProtest
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.



    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்து வருகிறது. மாவட்ட தலை நகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக பணிக்கு வராத 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை ஈடுபட்டது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    முதுநிலை பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் முடங்கி உள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் 65 சதவீத அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் திருப்புதல் (ரிவிசன்) தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது.

    இதுபோன்ற நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நேற்றும் எச்சரிக்கை விடுத்தது.

    எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்றும் அவகாசம் அளித்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேரும், தொடக்கப்பள்ளியில் 70 சதவீதம் பேரும் இன்று பணிக்கு திரும்பியதாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

    சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்பட்டதாகவும். 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர் என்றும் சென்னை முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறினார்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தற்காலிக ஆசிரியர்களை கல்வித்துறை நியமித்து வருகிறது.

    ஏற்கனவே 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 602 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கல்வித்துறை பிறப்பித்தது. மொத்தம் 1002 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து 1002 பணியிடங்களை காலியிடமாக அறிவித்து அவற்றுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 3 இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். #JactoGeoStrike #TeachersProtest
    நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    6-வது நாளாக தொடரும் போராட்டத்தால் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலுள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.



    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.

    அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28ம் தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பாடம் நடத்தினார். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதை அறியாத மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். நேரம் செல்ல, செல்ல தங்கள் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், சிறிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducationDept
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
     
    மாவட்ட தலைநகரங்களில் இன்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. 



    இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்ய இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். 

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17 பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #PublicExam #SSLC #PlusTwo
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.

    பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2500-க்கும்மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 1000 மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.

    இந்த விடைத்தாள்களை தேர்வுதுறையினர் ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்தனர்.


    இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுநோட்டீசு அனுப்பி உள்ளது.

    விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் திருத்தியதால் நிறைய குளறுபடி நடந்துள்ளதால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோட்டீசுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PublicExam #SSLC #PlusTwo
    பள்ளிக்கல்வித்துறையை பாராட்டிய ரஜினிக்கு அரசின் சார்பில் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #Rajinikanth
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்.அகாடமி விரைவில் திறக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் இதை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதே போல சி.ஏ. படிப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 மாணவர்கள் முதற்கட்டமாக சி.ஏ. எழுதுவதற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 12 புதிய பாடங்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். வரும்ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்ததும் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களின் திறமைகள் உருவாக்கப்படுகின்றன.


    கே:- பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறாரே?

    ப:- அவருக்கு அரசின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே:- பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் எப்போது நடைபெறும்?

    ப:- இன்னும் 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Rajinikanth
    ×