search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டையன்"

    ஒரு மாணவர் மட்டும் படித்தாலும் பள்ளியை மூட மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #KASengottaiyan

    கோபி:

    கோபியில் 1089 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கோபி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 15 லட்சத்து 47 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

    மேலும் அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இணைய தள வசதியுடன் கணினியும் இணைத்து தரப்படும். இந்த வருடம் எல்.கே.ஜி-யு.கே.ஜி வகுப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33 உள்ளது. இதே போல் 9 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 123 உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். குறைந்த சேர்க்கை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் அருகில் இருந்தனர்.

    முன்னதாக கோபி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். #KASengottaiyan

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    சென்னை:

    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. 

    அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என தெரிவித்தார். ஆனாலும், பொதுத்தேர்வு பற்றிய குழப்பம் நீடித்தது.



    இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

    எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது. மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். #Sengottaiyan #PublicExams
    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #Jayalalithaa
    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் கடந்த 2012-ம் ஆண்டு நீக்கப்பட்டார். இதுகுறித்து இந்தியா டுடே பத்திரிகை 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி செய்தி வெளியிட்டது.

    அதில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் செங்கோட்டையனை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி அந்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடர்ந்தார்.


    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரிகை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையில் வெளியான செய்தியினால் தன்னுடைய நற்பெயருக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. எனவே, பத்திரிகை மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன்.

    இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான பத்திரிகையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நெறிக்கப்பட்டால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோரது உழைப்பு வீணாகிவிடும்.

    சில நேரங்களில் பத்திரிகைகளில் தவறுகள் நேரலாம். அதேநேரம் ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கை மறுக்க முடியாது.

    ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டும்போது அதன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது. இதுபோன்ற விசயங்களுக்காக அவதூறு வழக்குகள் தொடரப்படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாகிவிடும்.

    பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், பொதுமக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமைகள் உள்ளது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். #MadrasHC #Jayalalithaa 
    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET
    சென்னை:

    உயர்கல்வி படிப்பதற்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

    அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வு பொதுத் தேர்வாக மாற்றப்பட்டது. பிளஸ்-1 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும், பிளஸ்-2 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும் நடத்தப்பட்டு 1200 மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.

    ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பள்ளி கல்வித்துறை பிளஸ்-2 தேர்வு முறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.

    இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    10-ம், 11-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

    மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்து இருக்கிறது.

    11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1200 மதிப்பெண் பெற வேண்டும் என இருந்தது. அதனை ஒரே தேர்வாக மாற்றி (பிளஸ்-1ல் 600, பிளஸ்-2ல் 600) அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

    பிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண் என முன்பு இருந்தது 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும். பிளஸ்-2 தேர்வில் எடுக்கப்படும் 600 மதிப்பெண் உயர்கல்விக்கு செல்லத் தகுதியாக கருதப்படும்.

    6 பாடத்திற்கு மட்டும் 600 மார்க் வீதம் உயர் கல்விக்கு செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு பொது தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் சமயம், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் களையப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு தனித்தனியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருக்கிறது.


    நீட் தேர்வு எழுத ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக 50 மாணவர்களை தேர்வு செய்திருக்கிறோம். 320 ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    413 மையங்களில் 4300 ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வை பொறுத்த வரையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன் கூட்டியே எடுத்து வருகிறது.

    எதிர்காலத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் போட்டி தேர்வுகளை சமாளித்து சேர தகுதிப்படுத்தப்படுவார்கள்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET
    சென்னையில் இன்று மாலை நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Sengottaiyan #RajivGandhimurdercase

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியில் இன்று காலை பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது.

    ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள் என தனி தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

    போட்டியை தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    இது போன்ற விளையாட்டு போட்டிகள் மூலம் உடல் மற்றும் மணதை வலிமைப்படுத்த முடியும். ஒழுக்கம், பண்பு, உயர்வு பெறும். சிறந்த கல்வியாளராக உருவாக முடியும்.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


    சமூக சேவை நிறுவனம் சார்பில் 20 அரசு பள்ளிகளில் முதல் கட்டமாக வாகனம் மூலம் கழிவறை சுத்தம் செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் பரிட்சாத்த முறையில் சோதனை மேற் கொள்ளப்படும்.

    வரும் கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் செலவில் “அடல் லேப்” திட்டம் தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழக கல்வித்துறை முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எலத்தூர் அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராபுரத்திலும் இது போல் சம்பவம் நடந்துள்ளது.

    எலத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியை மாற்றம் செய்யப்படுவார்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    நிகழ்ச்சியில் சத்தியபாமா எம்.பி, கல்லூரி முதல்வர் ஜெகதாலட்சுமணன், செயலாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sengottaiyan #RajivGandhimurdercase

    முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Governmentschool #Sengottaiyan

    சென்னை:

    அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவச்செல்வங்களுக்கு வழங்கி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்த் திருத்தங்களை மேற் கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவருகிறது.

    இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்தும் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திடவாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.


    முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் அரசு, பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Governmentschool #Sengottaiyan

    ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TRBTest #TeachersCompetitiveTest
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும். தனியார் பள்ளியுடன் இணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளா கோரும் அத்யாவசிய பொருட்களை அனுப்ப அரசு தயாராக உள்ளது’ என்றார்.



    தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். #TRBTest #TeachersCompetitiveTest

    அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில் இன்று ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கல்வித்துறையில் மாணவ- மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது.

    இந்த வாகனங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்யும். முதல் கட்டமாக 20 ஆயிரம் பள்ளி கூடங்களுக்கு இந்த வாகனங்கள் சென்று கழிப்பிட கட்டமைப்பை சுத்தம் செய்யும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதன் முதலாக இந்த கழிப்பிட வாகனங்கள் இயக்கப்படும். அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும்.

    அரசு பள்ளிகளில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மாற்றி அமைக்கப்படும்.

    டி.ஆர்.பி. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுதியவர்களுக்குழு விரைவில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

    அரியலூரில் புத்தகதிரு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக  விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக திருவிழா நடை பெறுகிறது. 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கிறார். அரசு தலைமை கொறடா, எம்.பி, எம்.எல் .ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உட்பட  பலர் கலந்து கொள்கிறார்கள். 12-ம் தேதி தமிழக பண்பாட்டு துறை அமைச்சர்  பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.

    இதனை முன்னிட்டு அண்ணாசிலையிலிருந்து புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சி தலைவர் சத்திய நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார், முக்கிய கடைவீதிகளின் வழியாக சென்ற பேரணி அரியலூர் யூனியன் அலுவலகத்தில் முடிவடைந்தது. 

    தாசில்தார் முத்துலெட்சுமி, மாவட்ட கல்வி  அலுவலர்செல்வம், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்  நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, தமிழ் பாண்பாட்டு பேரமைப்பு பொறுப்பாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நல்லப்பன், புலவர்.இளங்கோ, ஜமீன்வெங்கடேசன், அரிமா சங்க பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, அசோக்குமார், கோகுல், சங்கர், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். #publicexam #timetablereleased
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.



    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்க, தமிழகத்திலேயே அதிகப்படியான மையங்களை அமைக்க தயார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெகு சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பல ஆசிரியர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். #publicexam #timetablereleased
    ×