search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீடிப்பு"

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 7-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
    குமாரபாளையம்:

    மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

    கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

    இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

    உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

    இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராஜஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போராட்டக் குழுவினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் விஸ்வேந்திர சிங் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் பவான் ஆகியோர் குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மூன்றாவது நாளான நேற்று தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர், காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



    இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் சமூகனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

    குஜ்ஜார்களின் போராட்டம் காரணமாக கோட்டா ரெயில்வே கோட்டத்தில் புதன்கிழமை வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 37 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் வடக்கு ரெயில்வே, இன்று 10 ரெயில்களை ரத்து செய்துள்ளது. நாளை 12 ரெயில்களும், நாளை மறுதினம் 15 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. #GujjarProtest #GujjarReservation #AshokGehlot
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில், அவருக்கு 22 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தாபானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசிலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்.



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாளாக நீடிக்கிறது. தர்ணா போராட்ட மேடையில் அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர்.

    மேடையில் இருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, நியாயம் கிடைக்கும் வரை சமரசத்துக்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ளார். வருகிற 8-ந்தேதி வரை தர்ணா போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடத்தும் தனது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று அவருக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளன.

    மொத்தம் 22 எதிர்க்கட்சிகள் மம்தாபானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவே பா.ஜனதா தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதை பா.ஜனதா மறுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது பற்றி கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மம்தாபானர்ஜி தொடர்ந்து மீறி வருகிறார். சி.பி.ஐ. அதிகாரிகளை விசாரணை நடத்தவிடாமல் பிணைக்கைதி போல் பிடித்து வைத்திருந்தார். அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு துளி அளவு கூட கிடையாது” என்றார். #MamataDharna #CBIvsMamata
    சபரிமலையில 144 தடை உத்தரவு இன்று ஒருநாள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ஐயப்ப பக்தர்கள் வருகையும் பாதியாக குறைந்தது.

    மேலும் சபரிமலையில 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு இன்று ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நிலவும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்து உள்ளது.

    நேற்று ஒரேநாளில் 83 ஆயிரத்து 648 பக்தர்கள் சபரிமலை வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.

    கடந்த ஆண்டு ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகை தந்தனர். அவர்கள் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகுதான் சாமி தரிசனம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சபரிமலையில் கடந்த ஆண்டு மொத்தம் ரூ.356 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. இதே நாளில் ரூ.123 கோடியே 93 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரூ.72 கோடியே 2 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டு காணிக்கை மூலம் மட்டும் ரூ.100 கோடி வருமானம் வந்திருந்தது. இது இந்த ஆண்டு ரூ.28 கோடியே 13 லட்சமாக குறைந்துள்ளது. சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை மற்றும் அப்பம் பிரசாதம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது.

    சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை நடைபெற்றதால் ராகுல் ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தினம் திட்டா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர், கடந்த சனிக்கிழமை போலீஸ் நிலையத்தில் கையெழுந்து இடவில்லை. இதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்த கோர்ட்டு அவரை கைது செய்யவும், போலீசுக்கு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து பாலக்காட்டில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.  #Sabarimala
    சபரிமலையில் 144 தடை உத்தரவை இன்று முதல் 8-ந்தேதி வரை நீடிப்பு செய்து பத்தனம்திட்டா கலெக்டர் அறிவித்துள்ளார். 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Sabarimala #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக தற்போது கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் இதுபோன்ற போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் இந்த ஆண்டு குறைந்து உள்ளது.

    சபரிமலையில் 144 தடை உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் நீடிப்பு செய்து அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல் 8-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவு இளவங்கல் முதல் சன்னிதானம் வரை அமலில் இருக்கும். அதே சமயம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சரணகோ‌ஷம் எழுப்பவோ, நாமஜெபம் நடத்தவோ தடை இல்லை.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமன், ஸ்ரீஜெகன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர்கள் முதலில் நிலக்கல், பம்பையில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று 2-வது நாளாக சபரி மலை சன்னிதானத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பக்தர்களுக்கு கழிவறை, குளியல் அறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் திருப்தியாக உள்ளதாக தெரிவித்தனர். போலீஸ் கெடுபிடி மட்டும் அதிகமாக இருப்பதாக குழுவினர் கூறினர்.

    ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழு சபரிமலை சன்னிதானத் தில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    இந்த 3 பேர் குழு வருகிற 10-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்களிடம் போலீசாரின் கெடுபிடியை கண்டித்தும் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கேரள தலைமை செயலகம் முன்பு இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா எம்.பி. சுரேஷ்கோபி, ஓ.ராஜ கோபால் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதே கோரிக்கைக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.  #Sabarimala #Section144
    தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதியாக நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் வரை ஒருவழி தடத்தில் மெட்ரோ ரெயில் செல்கிறது. இதுதவிர தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் போகிறது.

    மெட்ரோ ரெயிலில் விரைவாக செல்லலாம். எனவே இதில் ஏராளமானோர் விரும்பி பயணம் செய்கிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.



    தற்போது மெட்ரோ ரெயில் அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. வருகிற நவம்பர்-2, 3 ஆகிய தேதிகளில் தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும்.

    எனவே வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையில் ரெயில்கள் விடப்படும். இந்த 2 நாட்களும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீடிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
    ×