search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123319"

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பலூரில் அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் கிளையின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீலவேணி, பொருளாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்குமார், 10 அம்ச கோரிக்கைகளை விரிவாக எடுத்து கூறி பேசினார்.

    முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 1.6.2018 அன்று 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அந்த அரசு ஆணையை விரைவாக வெளியிட்டு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை தகுதி அடிப்படையில் சிறப்பு தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த தகுதியான கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வில் அரசு இணைத்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். மற்றும் மகளிர் பேறுகால விடுப்பு போன்ற நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் கிளையின் துணைத் தலைவர் அரங்கவளவன் வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். 
    மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் தேவைக்கு கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் நீண்ட நாட்களாக நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ள நிலையில் சமீபகாலமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்கும், ஒரு சில கிராமப்புறங்களுக்கும் கைகொடுத்து வந்தது. நகர் பகுதிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணை பகுதிகள் வறண்டு விட்ட நிலையில் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைப்பது வெகுவாக பாதித்து விட்டது.

    கிராமப்பகுதிகளில் 90 சதவீதம் கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பி உள்ள நிலையில் நீர் ஆதாரத்தில் வறட்சி, பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர்களால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.

    பல கிராம மக்கள் குடிநீர் கோரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையும் தாண்டி காலிகுடங்களுடன் கிராமத்து பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    நகர் பகுதிகளை பொறுத்தமட்டில் மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்த காரணத்தால் தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கிருந்து வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. பேரூராட்சி பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    மொத்தத்தில் தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தை ஏமாற்றி விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே குடிநீர் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்களை கலெக்டர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டு பெற்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்களுக்கு அவர்களது குடிநீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் கிராமப்பகுதிகளிலும் குடிநீருக்காக போராட்டங்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிடும். 
    கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    எல்.ஐ.சி. பாலிசி பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கான போனஸ்சை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரை யறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் அன்றிலிருந்து ஒருவாரம் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் இறுதிநாளான நேற்று மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு போன்ற பயிற்சிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை பயன்படுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான 2-வது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கழகத்தின் பெரம்பலூர் கல்வி மாவட்ட தலைவர் காமராஜ், மகளிர் பிரிவு செயலாளர் எழிலரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கபேரியல் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெயராமன், மல்லிகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. #Section377 #SupremeCourt
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறியது. மேலும், ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக கருதி, ஓரினச் சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதர் மற்றும் வக்கீலாக உள்ள டாமி கோ என்பவர் தனது சமூக வலைதளத்தில் கூறுகையில், இந்தியாவை போல் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஓரினச் சேர்க்கை சமூகத்தினர் சட்டப்பிரிவு 377 ஏ-ஐ எதிர்த்து வழக்கு தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தோல்வி அடைந்துள்ளது என மற்றொருவர் பதிவிட்டதற்கு, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என டாமி கோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Section377 #SupremeCourt
    கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று அதில் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

    இதில் மாநில துணை தலைவர் குணசேகரன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் ஞானசேகரன், தாந்தோன்றி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பா.ம.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சத்திய வாணி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முத்து கண்ணு, சாரதாம்பாள், ஜெயா, சுமதி ஆகியோர்முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வி கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினார். சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் தங்கராஜ், பழனி, மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி ஆகியோர் பேசினர். 

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக்கி கால முறை ஊதியம் வழங்கவேண்டும், பணிக்கொடை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்பட  பல்வேறு கோரிக்கைகள்பற்றி பேசினர். 

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தனலட்சுமி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரோஜா நன்றி கூறினார்.
    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    தஞ்சாவூர்:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் இணைந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி மற்றும் காரைக் குடி பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரையில் தற்காலிகமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சை வழியாக சென்னைக்கு ஒரு விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை பணிகளுக்கு உடனடியாக தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் தலைமையில் டாக்டர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அரசு டாக்டர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அரியலூர் மாவட்ட அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமையில் டாக்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். இதில் தலைமை டாக்டர்கள் ரமேஷ் கண்ணன், உமா, மறைதென்றல், விக்னேஷ், மேகநாதன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் டாக்டர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
    தூத்துக்குடியில் உப்பு இலாகாவுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரத்தில் மத்திய அரசின் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட ஊரணி ஒத்த வீடு, மினி சகாயபுரம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் மாநகராட்சி மூலம் குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ, சாலை வசதியோ கழிப்பிட வசதியோ செய்ய முடியாத நிலையில் அந்த ஏழை-எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மத்திய உப்பு இலாகா அதிகாரியை நேரில் சந்தித்து மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்த போது, மாநில அரசுக்கு இடத்தை விலைக்கு வழங்க முடியும் என்பதை கூறினார். ஆகவே கலெக்டர் சிறப்புக் கவனம் செலுத்தி அரசின் மூலம் அந்த இடத்தைப் பெற்று, அதில் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் வீரநாயக்கன்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க முத்தையா புரத்துக்கு 5கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் 150 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் அந்தப் பகுதியில் நகரும் கூட்டுறவு கடை மூலமோ அல்லது வாரம் 2 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் அந்தப் பகுதிக்கு சென்று விநியோகம் செய்யவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தூத்துக்குடி மாநகரத்தில் மணிநகர், அண்ணாநகர்-1, டூவிபுரம் பகுதிக்குட்பட்ட ரே‌ஷன் கடை போல்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே போல்பேட்டை மார்க்கெட்டிங் சொசைட்டியில் உள்ள கடையை டூவிபுரத்தில் உள்ள மகளிர்க்குழு வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளில் மாற்றி அமைக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தென் மண்டல தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    மதுரை:

    தென் மண்டல தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

    மாநில பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைவர் பாண்டியன், செயலாளர் ஆசிரியதேவன் முன்னிலை வகித்தனர்.

    மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பணியாளர்கள் பங்கேற்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

    நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தை மாதந்தோறும் அரசே நேரடியாக வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் விற்பனையாளர்கள், சங்கப்பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    நியாயவிலை கடைகளை ஆய்வு என்ற பெயரில் பல்வேறு துறை அதிகாரிகள் மாமூல் பெற்று வருவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்திலும் தொங்கிய படி பயணிகள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.

    அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.

    பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    ×