search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123319"

    மானாமதுரை பகுதியில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறுவதற்காக சிறு கிராமங்களில் கூட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த ஊராட்சிக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது.

    ஒரு பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்றினால் அதில் ஒருவர் மட்டும் பணிக்கு வருவது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் கதவு சாவியை உள்ளூரில் உள்ள மாணவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதையடுத்து அந்த மாணவர்கள் காலை நேரத்தில் வந்து அந்த பள்ளியை திறப்பது, வகுப்பு நேரம் முடிந்தவுடன் பின்னர் அந்த பள்ளியை மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    பொதுவாக அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமைஆசிரியர் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் நடைமுறை உள்ளது. ஆனால் மானாமதுரை பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு மேல்தான் ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். அதன் பின்னர் அந்த பள்ளியில் முறையான இறை வணக்கம் கூட நடத்துவது இல்லை. பின்னர் மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களும் புறப்பட்டு சென்று விடுவாதாக கூறப்படுகிறது. இதனால் இதுபோன்று உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் கிராமப்புற பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவனுக்கு தாய் மொழியான தமிழைக்கூட வாசிக்க திணறும் அளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உள்ளது. மேலும் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 26 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினந்தோறும் கால தாமதமாக வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நேற்று காலை 9.40 மணி வரை இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் காலை முதல் ஆசிரியர்களின் வருகைக்காக பள்ளி வாசலில் காத்திருந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிவர ஆய்வு நடத்துவது இல்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த காரணத்தினால் கிராமப்புறத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் அந்த பள்ளிகளுக்கு வருவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுபோல் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து சென்று சரியான நேரத்திற்குள் ஆசிரியர்கள் அங்கு வருகின்றார்களா என்று ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #Keralaflood #RahulGandhi
    புதுடெல்லி:

    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அணைகள் திறப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.



    மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும் பல இடங்களில் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அன்புக்குரிய பிரதமரே, தயவுசெய்து கேரள வெள்ளப்பெருக்கை எவ்வித தாமதமும் இன்றி தேசிய பேரிடராக அறிவியுங்கள். நமது லட்சக்கணக்கான மக்களின் உயிரும், வாழ்வாதாரமும், எதிர்காலமும் ஆபத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.   #KeralaRain #Keralaflood

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் ஒருங்கிணைந்த மீன் வியாபாரிகள், தந்தை பெரியார் மீன் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மீன் கமி‌ஷன் ஏஜெண்டுகள் முருகன், ரசீது, ஜெய்லானுதீன், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை வகித்தனர். 

    கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் கே.எஸ்.சேகர், வக்கீல் ஆனந்த், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும். பொது இடங்களில் பெண்கள் சுகாதாரமின்றி மீன்கள் விற்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    பின்னர் மீன் மார்க்கெட் முன்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு சப்- கலெக்டர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி, நகர்நல அலுவலர் பிரேமா ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மணப்பாறை: 

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் செந்தில் தீபக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், கரூர் பாராளுமன்ற பொறுப்பாளர் பார்த்திபன், கோட்ட இணைப்பொறுப்பாளர் சிவசாமி, கோட்ட அமைப்புச் செயலாளர் பெரியசாமி, மாநில  செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த் உள்ளிட்ட பலரும் கோரிக்கை குறித்து விளக்கிப்பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மதுரையில் இருந்து செல்லும் பேருந்துகள் பன்னாங்கொம்பில் நின்று செல்ல வேண்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி பள்ளிக்குழந்தைகளை அலைக்கழிக்காமல் அனைத்து பேருந்துகளிலும் ஏற்றிச் செல்ல வேண்டும், வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் குறித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். 

    முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கலா துரை நன்றி கூறினார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். #Teachers #Arrest
    சென்னை:

    மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று காலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அ.சுதாகரன் தலைமையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கோட்டை நோக்கி பேரணியாக செல்ல தயாராகினர்.

    ஆனால் போலீசார் அவர்களை சேப்பாக்கம் அருகிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும், கோஷங்களை எழுப்பியபடி கோட்டையை நோக்கி செல்ல அவர்கள் முயன்றனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட 1,500 ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்காக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளான அ.சுதாகரன், கதிரவன், ந.ரெங்கராஜன், அய்யப்பன், சுப்புராஜ் ஆகிய 5 பேரை போலீசார் அழைத்து சென்றனர்.

    அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம், தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. எங்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஊதிய பிரச்சினை தொடர்பாக சாதகமான முடிவு ஏற்படும் என்றும், சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்வதாகவும், பயோ மெட்ரிக் வருகை பதிவு எங்களுக்கு கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளார் தெரிவித்தார். அதே சமயம் புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசின் முடிவு என்பதால் அவர் அதுபற்றி எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. 
    கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
    வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. #ElectionCommission #Facebook
    புதுடெல்லி:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தொலைக்காட்சி உள்ளிட்ட கருவிகள் மூலம் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை 48 மணி நேரத்துக்கு முன்னரே நிறுத்த வேண்டும்.

    இந்த சட்டப்பிரிவு குறித்து ஆராய்வதற்காக தேர்தல் கமிஷன் அமைத்த சிறப்பு குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதிநிதியும் பங்கேற்றார்.



    அப்போது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பேஸ்புக்கில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. இதற்கு எந்தவித குறிப்பட்ட பதிலும் இதுவரை தெரிவிக்காத பேஸ்புக் நிறுவனம், அது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது.

    எனினும் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை தெரிவிக்க பேஸ்புக்கில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய பேஸ்புக் பிரதிநிதி, அதில் சட்டமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #ElectionCommission #Facebook #Tamilnews 
    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

    மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகங்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டது. ஆனால் இன்றோ ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #AmmaHotel
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல் அம்மா உணவகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் 200 வார்டுகளிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. காலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ரூ.3-க்கு பொங்கலும் விற்பனை செய்யப்படுகின்றது.

    அதேபோல், மதியம் சாம்பார் சாதம் ரூ.5, கலவை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும், மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மலிவு விலையில் ஏழை- எளிய மக்களின் பசியை போக்கியது மட்டுமில்லாமல், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினையும் அம்மா உணவகம் பெற்றது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்களும், இதர பகுதிகளில் 247 என மொத்தம் 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் குறித்த செய்தியை அறிந்து, எகிப்து நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதி நிதிகளும் வந்து பார்த்து விட்டு வியந்து சென்றனர். அ.தி.மு.க.வின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக அம்மா உணவகம் பேசப்பட்டது.

    அந்த அளவுக்கு நேர்த்தியாக, மலிவு விலையில் தரமான-சுவையான உணவு வழங்கி துடிப்போடு செயல்பட்டு வந்த இந்த அம்மா உணவகங்கள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆதரவற்ற நிலையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது, அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தனர்.

    ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லாதது போல் போய்விட்டது. தரமான, சுவையான உணவுகள் என்று இருந்த நிலை மாறி, சுவை குறைவு, தரமில்லாமை என்ற குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகி, விற்பனை சரிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. முறையாக நிர்வகிக் கும் திறன் இல்லாததே, அம்மா உணவகம் பொலிவு இழந்ததற்கான காரணம் என்று அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாக புகார்களும் வருகின்றன. மேலும், அம்மா உணவகங்களில் தயாராகும் இட்லியை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

    இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அது வெறும் கண்துடைப்பாகவே இருப்பதாகவும் அம்மா உணவக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அம்மா உணவகம் முதலில் இருந்த பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் பழைய பெருமையை தக்க வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கூடுதலாக அம்மா உணவகங்களில் எந்த மாதிரியான உணவு வகைகளை சேர்க்கலாம்?, அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் வருகையை எப்படி அதிகப்படுத்துவது? போன்ற பல்வேறு கருத்துகளை அதிகாரிகள், ஊழியர்கள் தரப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அதை நாங்கள் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதுவரை அம்மா உணவகம் தட்டு தடுமாறி செயல்பட்டு வருகிறது. எப்போது நிற்கும்? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலான நிதி அம்மா உணவகத்துக்கே ஒதுக்கப்படுவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர்கள் கூறினாலும், ஜெயலலிதா தொடங்கி, தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்மா உணவகம் தற்போது ஆதரவற்ற நிலையில் இருப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் பலரும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

    மொத்தத்தில் அம்மா உணவகத்தை மாநகராட்சி நிர்வகித்து வந்தாலும், அரசு இதில் முழுகவனம் செலுத்தி, அவர்களுடன் கைகோர்த்து நடவடிக்கை எடுத்து, அம்மா உணவகத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. #AmmaHotel 
    ×