search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன்"

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார். #PambanBridge #Ramanathapuram
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலமாகும். பாலத்தின் எடை அதிகமாக உள்ளதால், கப்பல்கள் தூக்குப் பாலத்தை கடக்க வரும் போது பாலத்தை திறந்து மூட முடியாமல் ரெயில்வே பணியாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த ரெயில்வே தூக்குப் பாலத்தை அகற்றிவிட்டு மின் சக்தி மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று ரெயில்வே கட்டுமான பிரிவு பொது மேலாளர் எம்.பி.சிங் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார் டிராலி மூலம் ரெயில் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை திட்ட மேலாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ரெயில்வே தூக்குப்பாலத்தின் மைய பகுதியில் உள்ள இணைப்பு மற்றும் மேல் பகுதிக்கு சென்று முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்விற்கு பின்பு ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் எம்.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மட்டும் அகற்றிவிட்டு புதிய தூக்குப்பாலம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதே தூண்களில் புதிய தூக்குப் பாலம் கட்டி முடிக்க 10 மாதங்களாகும். அதுவரை ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடியாது. மேலும் பழமையான பாலம் என்பதால், இதை மாற்றி அமைக்க முடியாது.

    பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலம் அருகிலேயே வடக்கு பகுதியில் புதிய தூக்குப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாம்பன் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் பணிகளை தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் மண்டபம் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் 2-ம் கட்ட பணிகள் நடைபெறும். இவை நடைபெறும் போதே புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் ஒரே இணைப்பில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரெயில்வே தூக்குப்பாலப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். புதிய பாலம் கட்டி முடித்த பின்பு தான் அருகில் உள்ள பழைய பாலத்தை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

    இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.

    இந்த திடீர் தடை உத்தரவால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்துறை அதிகாரிகளின் தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், 2-வது நாளாக 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
    மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலையிலும், ராமேசுவரம் மீனவர்கள் நாளை மறுநாள் காலையிலும் மீன்பிடிக்க செல்கின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களை மீன்பிடித்தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைகிறது.

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாளை காலையில் 90 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

    அது போல சுழற்சி முறையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லும் நிலை இருப்பதால் இந்தப்பகுதி மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலையில் 720-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல தயாராக உள்ளனர்.

    மேலும் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்கியவுடன், அதை பெற்றுக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து சுழற்சி முறை மீன்பிடிப்பால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதல் நாள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாள்கள் மீன்பிடிக்க சென்று வருவார்கள்.அதன் பேரில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மீன் பிடிக்க செல்வார்கள். வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள்.

    அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய்,வெள்ளி ஆகிய நாட்களில் மீன்பிடிக்க செல்வார்கள். இவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள். இந்நிலையில் 61 நாள்கள் மீன்பிடித்தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் 62 நாள்கள் கழித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

    ×