search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"

    காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிறிய அளவில் திருத்தம் செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, அதை பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு வழங்கியது. இந்த பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    அதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். தமிழக அரசு தனது பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

    இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். முதலில் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.

    இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

    கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.



    தமிழக மக்கள் சார்பில் நான் இங்கு வந்து கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தேன். அவரும் கர்நாடக மக்கள் சார்பில் என்னிடம் பேசினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி நீர் பிரச்சினையை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து சில முக்கியமான விஷயங்களை கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறினேன். எனது உணர்வை அவரும் பிரதிபலித்தார். இந்த பேச்சுவார்த்தை உணர்வுப்பூர்வமாக இருந்தது.

    குமாரசாமியின் பேச்சு எனது இதயத்தை நிரப்பிவிட்டது. காவிரி இல்லாமல் இரு மாநில மக்களும் வாழ முடியாது. நான் வக்கீல் கிடையாது. ஆனால் எனது தந்தை வக்கீலாக பணியாற்றியவர். எங்கள் குடும்பத்தில் பலர் வக்கீலாக இருக்கிறார்கள். அவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது தான். இந்த பிரச்சினையில் நமது மனநிலை மாற வேண்டும்.

    எங்களது கட்சி சிறிய கட்சி. நான் இப்போது தான் குழந்தையாக உள்ளேன். இப்போது தான் கட்சியே ஆரம்பித்துள்ளேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. நான் ‘ஈகோ’ பார்க்கவில்லை. அதனால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அணிலாக, பாலமாக, காலணியாக மாறவும் தயார். குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அரசியலை விட நமக்கு விவசாயிகளின் நலன் முக்கியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணைய வழிகாட்டுதல்படி இரு மாநிலங்களும் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சு பெருந்தன்மையாக இருந்தது. இது நீண்ட நட்பின் தொடக்கம் ஆகும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.  #Kamalhaasan #Kumaraswamy #Tamilnews 
    பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Indiansrescued #MEASushma
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை புதுடெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் உள்ள பல நாடுகளுக்கு நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். எங்கள் ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சியில் 
    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட பலரை பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள்.

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indiansrescued #MEASushma
    ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump #KimJongUn #June12
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து டிரம்ப் நேற்று கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், “ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. சந்திப்புக்கான அனைத்தும் நன்றாகவே நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.    #DonaldTrump #KimJongUn #June12
    விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    கரூர்:

    விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இவ்வாறான மின் திட்டங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் பதித்து மின் வயர்களை கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முன்னூர் கிராமம், தென்னிலை கீழ்பாகம், க.பரமத்தி ஆகிய இடங்களில் சில விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலையோரமாக கேபிள் வயர்களை பதித்து மின்திட்டத்தை செயல்படுத்துமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, மாவட்ட செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் ஈசன், ஆடிட்டர் நல்லுசாமி, செந்தில் உள்பட நிர்வாகிகள், விவசாயிகளுடன், நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் போது அதன் திட்டப்பாதை விவசாய நிலத்தின் உள்ளே செல்வதால் மரம் வளர்த்தல் உள்ளிட்டவை தடைபடுகிறது. மேலும் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதிக்கின்றனர்.

    அந்த மின்பாதையில் ஏற்படும் மின் தூண்டலினால் பயிர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலத்தையொட்டி வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிப்படையக்கூடும். எனவே கரூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் கூறினர். அப்போது இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பதில் கூறினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    உயர் மின்கோபுர திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கேபிள் மூலம் புதை வழித்தடத்தில் மின்வயர்களை கொண்டு செல்வது தான். எனவே இதை தான் கரூரில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால் இந்த உயர் மின்கோபுர திட்டபாதையால் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை பொது மேடையிலோ அல்லது முக்கியஸ்தர்களின் முன்னிலையிலோ யாராவது வாதம் செய்து விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கம் சார்பில் ரூ.1 கோடி பரிசு தந்து விடுகிறோம். மேலும் விவாத மேடையிலேயே ரூ.1 கோடியை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ (டிடி) வைத்து விட்டு நாங்கள் பாதிப்புகளை முன்வைக்கிறோம். அந்த சமயத்தில் அதிகாரிகள் பாதிப்புகள் இல்லை என நிரூபிக்க தவறினால், ஏற்கனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களை கழற்றி கேபிள் மூலம் மாற்று முறையில் அதனை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #NorthKorea #SouthKorea
    சியோல்:

    கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.

    கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.

    இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்ததால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ஜ.க.வின் முன்னணி நிலவரம் சரியத் தொடங்கியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், மதியம் 2.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

    தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) ஆதரவுடன் ஆட்சியமைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. ஆனால், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க வியூகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.டி.எஸ். தலைவர் தேவே கவுடாவுடன் சோனியா காந்தி பேசியிருக்கிறார். குலாம் நபி ஆசாத்தும் பேசியுள்ளார்.

    இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் முதலமைச்சர் சித்தராமையா வீட்டில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி ஆட்சிக்கான புதிய வியூகம் வகுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும், இதனை ஏற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஜே.டி.எஸ். தலைவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.

    இதற்கிடையே முதல்வர் சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக நெல்லை தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் 18-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
    நெல்லை:

    விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டும், ரூ.300 விடுமுறை கால சம்பளம் கேட்டும் சங்கரன்கோவிலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான 2-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் அப்துல் காதர் சுபைர் தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் வேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2014-15 ஆண்டுக்கான அடிப்படை கூலிதான் தரமுடியும் என்றும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து இது தொடர்பான 3-வது கட்ட பேச்சுவார்த்தையை வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். 
    ×