search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி"

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் இறக்குமதி வரியாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #ArunJaitley #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, ‘மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.



    இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி இன்றிரவு அறிவித்துள்ளார். #PulwamaAttack #PakistanMFNstatus  #MFNstatuswithdrawal  #FMArunJaitley #goodsimportedfromPak #Customsduty #importedgoods
    நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #budget

    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.

    ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

    இந்த அரசின் பதவி காலம் முடிந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் இதற்காக இந்தியா திரும்புகிறார்.

    தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் (ரூ.8 லட்சம் வரை) பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த அளவு கோலின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.

    இதே போல கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். மேலும் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #budget

    காட்பாடியில் வீட்டுவரியை குறைக்க கோரி குடியிருப்போர் நலசங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    புதிய வரிவிதிப்பை அரசு ஆணைப்படி மாற்றி அமைத்திட வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரமான சாலைகள் அமைக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வழங்கபட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் காட்பாடி காந்திநகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நலசங்க தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். அருள்தணிகை செல்வன், லோகநாதன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அமரன், துரைபாண்டி, கண்மணி, துரைமுருகன், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி.யில் 1,216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளது.

    சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டிஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

    சிமெண்டு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டும் தொடர்ந்து 28 சதவீத வரிவிகிதத்தில் உள்ளன. மற்ற அனைத்து கட்டுமான பொருட்களின் வரிவிகிதம் ஏற்கனவே 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும் முதல் வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. முதல் வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.89,700 கோடியாக இருந்தது. 2-வது வருடத்தில் சராசரி மாத வரி வசூல் ரூ.97,100 கோடியாக உள்ளது.



    ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும். நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும்.

    ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இதில் விதிவிலக்கானவை. அவைகளுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #GST
    கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்த ஆணையிட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206 சதவீதம் உயர்வாகும்.

    ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478 சதவீதம் உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.

    அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12 சதவீதம் உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பல குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரையிலும் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது ரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.

    சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23-ந்தேதி அறிவிப்பு வெளியானது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின் தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான் புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும் ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

    வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50 சதவீதம் என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

    அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. #China #US #TradeWar
    பீஜிங்:

    இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

    அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின் துடைப்பான் முதல் இணையதள கருவிகள் வரை இந்த வரி விதிப்பு பொருந்தும்.

    இதைப்போல அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு முதல் குறிப்பிட்ட ரக விமானங்கள் வரையிலான பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. #China #US #TradeWar
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. #USD #ChineseGoods #ImportTariff
    வாஷிங்டன்:

    சீனாவால் ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது. இவ்விரு வல்லரசு நாடுகள் இடையே ஏற்பட்டு உள்ள வர்த்தக போர் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று அதிரடியாக கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முதலில் அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து விட்டது. மீதி 16 பில்லியன் டாலர் பொருட்களுக்குத்தான் இப்போது கூடுதல் வரி விதித்து உள்ளது.

    அமெரிக்கா சீனப்பொருட்கள்மீது எந்த அளவுக்கு கூடுதல் வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது நாங்கள் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கனவே கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது. இது பற்றி அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்கு பதிலடி தருகிற விதத்தில் அதே அளவுக்கு சீனாவால் கூடுதல் வரி விதிக்க முடியாது. அவர்கள் சிறிதளவு வரி விதிப்பார்கள். முடிவில், அவர்களை விட நாங்கள் தான் கூடுதல் வரி விதிக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும்” என குறிப்பிட்டார்.  #USD #ChineseGoods #ImportTariff  
    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சண்டை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரியை உயர்த்தினார்.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்தது.  இதன்மூலம், சீனாவுக்கு 50 முதல் 60 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வரி விதித்து அறிவித்தது.

    இந்த நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #Trumph
    டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. #TrumpExtraTariffs #EuropeanUnion
    டப்ளின்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

    எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் அவற்றை டிரம்ப் நிராகரித்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

    டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி தருகிற வகையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற விவசாய பொருட்கள், இரும்பு, உருக்கு பொருட்கள் என மொத்தம் 29 பொருட்கள் மீதான வரியை அதிரடியாக இந்தியா உயர்த்தியது.

    பாதாம்பருப்பு, அக்ரூட் பருப்பு உள்ளிட்டவை வரி உயர்த்தப்பட்ட பொருட்களில் அடங்கும். ஆகஸ்டு 4-ந் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரி உயர்வு 241 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,638 கோடி) மதிப்பிலானது ஆகும்.

    அடுத்த அடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

    வரி விதிக்கப்படுகிற பொருட்களில் போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவை அடங்கும்.

    இந்த வரி விதிப்பு தொடர்பாக டப்ளின் நகரில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷனர் ஜீன் கிளவுட் ஜங்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவின் வரி விதிப்பு, எல்லா தர்க்கத்துக்கும், வரலாற்றுக்கும் எதிராக அமைந்து உள்ளது. எனவே எங்களின் பதிலடி, தெளிவானது. சரியாக அளவிடப்பட்டது” என்று கூறினார்.

    மேலும், “அமெரிக்க வரி விதிப்பை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்” என்றும் கூறினார்.

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காக, புகையிலை, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை தூள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியம் 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.

    மேலும், அமெரிக்க காலணிகள், துணி வகைகள், சலவை எந்திரங்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    அமெரிக்க வரி விதிப்பும், அதற்கு பதிலடி தருகிற விதத்தில் பிற நாடுகளின் வரி விதிப்பும் உலகளாவிய வர்த்தக போராக மாறுகிற ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. #TrumpExtraTariffs #EuropeanUnion
    பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.#edappadipalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  துணை  பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

    எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும்.

    தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



    தற்போது கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் விலையில் உள்ள இந்தச் சூழலில், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றிக்கு 100 டாலர் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அப்போது பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.#Edappadipalanisamy #TTVDinakaran
    ×