search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி"

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #DPandian #RajivGandhiHospital
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital
    கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். #PiyushGoyal #KeralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பரிதவித்த 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளிப்பதுடன், ஏராளமான நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகின்றன.



    இந்தநிலையில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவில், “எனது அமைச்சகம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய உறுதி கொண்டுள்ளது. பல்வேறு மாநில அரசு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் இதர முகமைகள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.



    இந்த நிலையில், புனே மற்றும் குஜராத்தின் ரத்லாம் நகரங்களில் இருந்து டேங்கர்களில் குடிநீர் ஏற்றிய 2 ரெயில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  #PiyushGoyal #KeralaFlood
    இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதற்கான பரிசீலனைக்கான குழுவை அமைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    கொலும்பு:

    இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பரிசீலனை செய்ய இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #NDTiwari
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி, மூளை செயல் இழப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    92 வயதான என்.டி.திவாரிக்கு நேற்று  முதல் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது மகனான ரோகித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

    அவர் உடல் நலம் பெற உத்தரகாண்ட் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார். #NDTiwari  #Tamilnews
    அருப்புக்கோட்டையில் விசைத்தறி கூடம் அமைக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் நகராட்சி அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல் முருகன்.

    அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். 
    வெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழை வலுவடைந்ததால் அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்ட வண்ணம் இருந்தது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது.

    சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் திருமலை நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர். இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டனர்.

    அதன்படி களக்காடு புலிகள் காப்பகம் கடந்த 10-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளம் தணிந்ததை அடுத்து, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தலையணையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை களக்காடு புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.

    தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. இதையொட்டி களக்காடு தலையணை, திருக்குறுங்குடி வனத்துறை நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


    வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாய்பாயின் குடும்பத்தினரிடம் சென்று நலம் விசாரித்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு வந்த மோடி, வாய்பாயிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்
    மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நடத்த, விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீது விசாரணை நடத்த, நிர்மலாதேவியை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் நிர்மலாதேவி மீண்டும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, நிர்மலாதேவிக்கு இம்மாதம் 21-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    அத்துடன் அவரது குரல் மாதிரி பரிசோதனையை, மதுரை மத்திய சிறையில் வைத்து நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார், நிர்மலாதேவியை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த சில ஆண்டாக பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாமல் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் முன் அனுமதி பெறப்படுகிறது. பின்னர் ஜூன், ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் மார்ச் 26-ந்தேதி 4 மாத செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு அனுமதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

    இந்த அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த திங்கள்கிழமை சட்டசபை கூடியது. 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். ஆனால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி டெல்லி சென்றுள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரியை சந்திக்கிறார். உரிய விளக்கம் அளித்து பட்ஜெட்டிற்கான ஒப்புதல் பெற்றுவருவார் என தெரிகிறது. இதன்பிறகே மீண்டும் சட்டமன்றம் கூடும்.

    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 28-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, கடந்த 21-ந் தேதி தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதில் ‘சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 815 மதுபானக்கடைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு மனுதாரர் கே.பாலு தரப்பில் ஆஜரான வக்கீல் பா.கருணாகரன் ஆட்சேபம் தெரிவித்தார். மே 21-ந் தேதி வெளியிட்ட அரசாணையை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீது பதில் தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். தமிழக அரசு 815 மதுக்கடைகளை திறக்க அவசரம் காட்டுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகும் கூட இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே 14 மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு மே 21-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த அரசாணை குறித்து எதிர்மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து ஆகிறது. இதனால் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்ட ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #KartiChidambaram #travelabroad
    புதுடெல்லி:

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் தேதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



    இந்நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

    பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது.

    இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் ஜாமீன் வாங்க பயன்படுத்த கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது. #KartiChidambaram #travelabroad
    ×