search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூர்"

    ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்டமசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி மாநகராட்சியாக நாகர்கோவில் செயல்படும்போது நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்து முறைப்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இதேபோல் ஓசூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கும் சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சியின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. மாநகரட்சிகள் விவரம் வருமாறு:-

    1. சென்னை
    2. மதுரை
    3. கோவை
    4. சேலம்
    5. நெல்லை
    6. வேலூர்
    7. திருச்சி
    8. தூத்துக்குடி
    9. ஈரோடு
    10. தஞ்சாவூர்
    11. திருப்பூர்
    12. திண்டுக்கல்
    13. நாகர்கோவில்
    14. ஓசூர் #TNAssembly

    ஓசூரில் 20-ந்தேதி ஆணவக்கொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HonourKilling #Thirumavalavan

    சென்னை:

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓசூரில் நடந்துள்ள ஆணவப்படுகொலைகளைக் கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும்.

    ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்- சுவாதி ஆகிய இருவரையும் கடந்த பத்தாம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனிடையே நந்தீஸ்- சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கம்பியால் கைகள் பின் புறமாக வைத்து கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையை வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டதாகவும், மகராஷ்டிரா கர்நாடகா முதலான மாநிலங்களில் அதற்கெனக்கடுமையாக சட்டம் இருப்பதைபோல தமிழ் நாட்டிலும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருதி செய்து வரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு இதில் காட்டி வரும் மெத்தனம் அப்படியானவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

    2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டில் நடைபெற்ற 47 ஆணவக்கொலைகளை தேதிவாரியாகப்பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருந்தார்.

    27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில்,“கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.

    ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய வழி காட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின் பற்றவில்லை.

    இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HonourKilling #Thirumavalavan

    ஓசூர் அருகே பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வி‌ஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் சிச்ருகானபள்ளியில் பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் கழிவுநீரை சுத்திகரிக்க மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டேங்க் ஒன்றை அமைத்து பேட்டரி தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன கழிவுநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனை ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் அகற்றி சுத்தப்படுத்துவது வழக்கம்.

    நேற்று இரவு பாகலூர் அருகே உள்ள கொத்தபள்ளியை சேர்ந்த நாகேஷ் (வயது 25) என்பவர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று பராமரிப்பு பணியை செய்தார்.

    அப்போது அங்கு இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தார். உடனே அதில் இருந்து வி‌ஷவாயு கசிந்ததால் நாகேஷ் மயங்கி அங்கேயே கீழே விழுந்தார். இதனை கண்ட பாகலூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் நாகேஷின் உடல் அருகே ஓடிவந்தார். அப்போது மஞ்சுநாத்தும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் 2 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஓசூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பான முறையில் மூடிவிட்டு நாகேஷ், மஞ்சுநாத் உடலை மீட்டனர்.

    நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் வி‌ஷவாயு தாங்கி இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தெரியவந்ததும் உடனே கம்பெனியில் திரண்டனர். அப்போது போலீசார் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    உடனே உறவினர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க மறுத்து போலீசாரை முற்றுகையிட்டனர். இறந்தவர்களின் 2 பேரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடல்களை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. உடனே அங்கு விரைந்து வந்த ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி, தாசில்தார் முத்துபாண்டி உள்பட அதிகாரிகள் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.

    இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.

    இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×