search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • மார்கழி பிறப்பு இன்று தொடங்கி ஜனவரி 14-ந்தேதி முடிகிறது.
    • ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    தமிழ் மாதமான மார்கழி பிறப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் மார்கழி மாத்தில் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும். இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

    • ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிறந்து, அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கின்றது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதியவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    வளர்ந்து வரும் நகரமான திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு ெரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பல ஊர்கள் சுற்றி பல மணி நேர பயணத்திற்கு பின்பு சென்னை செல்கிறது.இதனால் கூடுதலாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக புதியதாக விரைவு ரெயில் ஒன்று இயக்க வேண்டும்.அதுவும் நேர்வழியில் இயக்க வேண்டும் குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று குறிப்பிட்ட நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்படி புதிய ரெயில் இயக்கும்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 2 தொகுதியில்உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் தொழில் செய்வதால் கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வர வசதியாக இருக்கும். அதனால் புதிய ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கனிமொழி எம்.பி. இதுசம்பந்தமாக அதிகாரியுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் கட்டுக்கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசினார்.
    • ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வின் துணை பொதுச்செய லாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கனவு பலிக்காது

    அப்போது கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரண்டு, மூன்றாக பிரிந்து போனவர்கள் மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் எல்லோரும் தி.மு.க.வை எந்த வகையிலாவது வீழ்த்தி விடலாம் என நினைத்து வருகிறார்கள். அந்த கனவு பலிக்காது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்டுக்கோட்பாக இருந்து தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசினார்.

    கனிமொழி எம்.பி.

    இதனை அடுத்து கனிமொழி எம்பி பேசியதாவது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது. தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற யாராலும் இயலாது.

    நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினை கள், பிரச்சினைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனை புரிந்து கொண்டு தேர்தல் பணியில் நாம் செயல்பட வேண்டும்.

    நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி.

    தமிழ்நாட்டை பாதுகாப் பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தி.மு.க. ஆகும். திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. திராவிட இயக்கமாக இல்லை. தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை தி.மு.க.வில் உள்ள அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டை காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த கோவில் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடு.
    • தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார்.

    குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.

    இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    • பயிற்சி பாசறைக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார்.
    • திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுயில் உள்ள இளைஞர்களுக்கு திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.

    இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,

    திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் பயிற்சி ஆசிரியர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.

    முன்னதாக மாநில சுயாட்சி குறித்து எழுத்தாளர் மதிமாறன் விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், யூனியன் தலைவர்கள் ஜனகர் (ஆழ்வார்்திருநகரி), பாலசிங் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், கானம் நகர செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமார் ரூபன் முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நன்றி கூறினர்.

    • சிவந்தி அகாடமியில் ‘கேம்பிரிட்ஜ் ஆப் ஸ்கில்’ என்னும் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது.
    • பேராசிரியர் பென்னட் முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும், எளிதல் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளவும் உதவும் சிறப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் 'கேம்பிரிட்ஜ் ஆப் ஸ்கில்' என்னும் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையவழி பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில அறிவுத்திறன் பயிற்சியின் வணிக மேம்பாட்டின் மேலாளர் சாமுவேல் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் பென்னட் பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.

    இதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில், சிவந்தி அகாடமி, கேம்பிரிட்ஜ் ஆங்கில அறிவுத்திறன் பயிற்சிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் சிம்ஸ்டன் தங்கராஜ் நன்றி கூறினார்.

    • மருத்துவ முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
    • பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். துளீர் அமைப்பு சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி டாக்டர் தர்மராஜ் செல்லையா தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கண்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன், முனைப்பு அலுவலர் புலவர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை மற்றும் சமூக ரெங்கபுரம் பைன்டெக் நிறுவனம் சார்பில், பொருளியல் மன்ற கலை இலக்கிய விழா நடந்தது. இதில் பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம், கழிவுகளில் இருந்து கலை, அடுப்பில்லா சமையல் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளை பொருளி யல் துறை தலைவர் சி.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் படி வினாடி-வினாவில் பொருளியல் இளங்களை 3-ம் ஆண்டு மாணவர்கள் செல்வம், ஞான அபினாஷ் முதல் பரிசு பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், பேச்சுப்போட்டியில் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் செல்வம் முதல் பரிசை பெற்றார்.

    கழிவுகளில் இருந்து கலை என்ற போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி வேலம்மாள் என்ற பொன்திவ்யா முதல் பரிசும், பாட்டுப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், அடுப்பில்லா சமையல் போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் சுந்தர்ராஜ், ஆகாஷ் முதல் இடத்தை பிடித்தனர்.

    பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும் பெருமாள், கணேசன் மற்றும் உமா ஜெயந்தி ஆகி யோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழா அமைப்பாளர் உதவி பேராசிரியர் ச.சிவமுருகன் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உதவி பேராசிரியர் பே.மருதையா பாண்டியன் விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அசோகன், பிரியதர்ஷினி மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ், முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.உதவி பேராசிரியர் சி.முரு கேஸ்வரி நன்றி கூறினார்.

    • திருவிழா காலங்களில் 50 லட்சம் மக்கள் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டு என வைகோ கூறியிருந்தார்.

    தூத்துக்குடி:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ எம்.பி. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை யின் நீளத்தை அதிகரிக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் அதிக ரெயில் சேவைகளை இயக்க பொதுமக்கள் மற்றும் ரெயில் பயனாளி களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

    தற்போது, திருச்செந்தூர் 3 நடைமேடைகளை கொண்டுள்ளது. நடைமேடை எண் 1-ல் 18 பெட்டிகளும் மற்ற 2 நடைமேடைகளில் 12 ரெயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, 24 பெட்டி ரெயில்கள் நிறுத்தும் வகையில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக 2 நடைமேடைகளையும் அமைக்க வேண்டும்

    50 லட்சம் மக்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழா காலங்களில் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும். எனவே, நடைமேடைகளின் நீளத்தை அதிகப்படுத்துதல், கூடுதலாக 2 நடைமேடைகள் அமைத்தல், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக ரெயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்
    • திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் 234 சட்ட மன்ற தொகுதியில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் (நிலை-2) நேற்று மாலை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், யூனியன் தலைவர்கள் பாலசிங்(உடன்குடி), ஜனகர்(ஆழ்வார்திருநகரி), மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, நகர செயலாளர்கள் வாள் சுடலை, ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது.
    • 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின்படி திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலக் நடைபெற்றது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷீத்குமார் தலைமையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி.வரதராஜன் முன்னிலையில் 286 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    இதில் இந்து திருமண அசல் வழக்கு, வங்கி வராக்கடன், பயிர்கடன், கல்வி கடன் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உட்பட 286 வழக்குகளுக்கு ரூ.3,21,59,053-க்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் 4 வழக்குகளில் விவாகரத்து கோரியிருந்த தம்பதியினர் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×