search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர்.
    • இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    அவிநாசி:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த, விற்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    எச்சரிக்கை விடுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உத்தரவை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சில கடைகள் செயல்பட்டு வருவதாக சுகாதரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த, மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கப்புகள், துணி பைகள் என மூட்டை மூட்டையாக குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளோடு வருபவர்களுக்கு இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர். அதே போல் அக்கடையின் அருகே செயல்பட்டு வந்த மற்றொரு கடையில் இருந்த இதே போல் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள பறிமுதல் செய்யப்பட்டு மொத்த விற்பனை கடைக்கு அபராதமும், மற்றொரு கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்சு நிறு வனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜேஸ். இவர் ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்திடம் 'ஹெல்த் இன்சூரன்சு பாலிசி' எடுத்திருந்தார்.

    அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்க ப்பட்ட அருள் ராஜேஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார். சிகிச்சைக்காக ரூ. 24,450 செலுத்திய அவர், இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் கேட்டார். ஆனால் இன்சூரன்சு நிறு வனம் சரியான காரண ங்களை கூறாமல் சிகிச்சை க்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் ராஜேஸ் வழக்க றிஞர் மூலம் இன்சூரன்சு நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சை க்காக ஏற்கனவே செலவ ழித்த ரூ. 24 ஆயிரத்து 785, நஷ்ட ஈடாக ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.59ஆயிரத்து 755-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், புதுச்சேரி மாநிலம் முழுவதும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் ஹெல்மெட்டை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  காரைக்காலில் உள்ள போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசார், தினசரி ஹெல்மெட் அணியாமல் செல்லும் 100-க்கு மேற்பட்டோரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், காரை க்காலில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாயிலில் போலீசார் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஹெல்மெட்டுடன் பங்கேற்றனர். இந்த பேரணி, காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில் நிறைவு பெற்றது. பேரணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:- சாலை விபத்துகளில் எற்படும் உயிர்பலி மற்றும் பெரும் காயங்களை தவிர்க்க, ஹெல்மெட் மிக அவசியம். அதனால், அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். போலீசாரை பார்த்துதான் பொதுமக்களும் ஹெல்மெட் அணிவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும். என்றார்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு அரசு வங்கி ஒன்றில் கடந்த 2010 -ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் வீட்டுக்கடன் பெற்றார்.
    • சொத்து அடமான வைத்தவர்கள் விரும்பினால் மட்டுமே பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் செய்வது நடைமுறையாகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படைவீடு அருகே உள்ள பச்சம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சந்திரமதி . இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு அரசு வங்கி ஒன்றில் கடந்த 2010 -ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் வீட்டுக்கடன் பெற்றார் . பின்னர் கடன் தொகை முழுமையாக செலுத்தி விட்டதால் கடந்த 2016 -ம் ஆண்டில் கடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே சந்திரமதி கடந்த 2011 -ம் ஆண்டு லாரி வாங்க, அந்த வங்கியில் ரூ.20 லட்சம் கடனாக பெற்றார்.அப்போது வங்கியில் சொத்து ஆவணம் இருப்பதால் வேறு ஆவணம் தேவையில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்தது. கடன் முழுவதையும் கட்டிவிட்டு வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்த போது கடனுக்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 வங்கி வசூல் செய்து கணக்கை முடித்துள்ளது தெரியவந்தது.

    சொத்து அடமான வைத்தவர்கள் விரும்பினால் மட்டுமே பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் செய்வது நடைமுறையாகும். ஆனால் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து அடமானத்தில் இருக்கும் போது வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக தேவை இன்றி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 இன்சூரன்ஸ் பிரிமியத்திற்காக பிடித்தம் செய்து கூடுதலாக செலவு வைத்துள்ளனர்.‌

    இதுகுறித்து வாடிக்கையாளர் கேட்டபோது வங்கி நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயணிட்டாளர் சங்கத்தில் சந்திரமதி புகார் கொடுத்தார். சங்க செயலாளர் சுப்பராயன் இது குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதில், வாடிக்கையாளர் விருப்பமின்றி இன்சூரன்ஸ்சிற்காக வங்கியில் வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு முழுமையாக திருப்பி வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ. 50,000 வழங்கவும், வழக்கு தொகையாக ரூ.5000 கூடுதலாக வழங்கவும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அரசு வங்கி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 40 வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

    • சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
    • ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

    கடைவீதிகளிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலை பகுதிக்கு கொண்டுவிட்டு, அதன் செலவையும் வசூலித்து அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து நகர மன்ற தலைவர் பேசுகையில்:-

    வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது தமிழக அரசால் தலைஞாயிறு பகுதிக்கு ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    இதில் வேதாரண்யம் நகராட்சியையும் இணைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வரும் 2 ஆண்டுகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.

    மேலும் தற்போது உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பத்திர பதிவாளர், சார் பதிவாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தனலட்சுமி. இவர் பெரம்பலூர் தெற்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை கிரையம் பெற்று அதனை பதிவு செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம்தேதி பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய பத்திரம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தினார்.

    ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு பதிவு செய்யவில்லை. ஏன் என கேட்டதற்கு அந்த வீட்டை விற்பனை செய்ய மணிவண்ணன் என்பவர் தடை மனு அளித்துள்ளார். ஆகையால் பதிவு செய்ய இயலாது என சார்பதிவாளர் கூறியுள்ளார்.

    தான் வாங்கிய சொத்திற்கு சரியான மார்க்கெட் மதிப்பினை செய்து முத்திரை கட்டணம் செலுத்தியும் பத்திரபதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துவிட்டு அலைகழித்ததால் தன்னுடைய பத்திரம் மற்றும் ஆவணங்களை திரும்பி தருமாறு சார்பதிவாளரிடம் தனலட்சுமி கேட்டுள்ளார். பலமுறை எழுத்து பூர்வமாக கேட்டும் ஆவணங்களை சார்பதிவாளர் திருப்பி தரவில்லை.

    இதனால் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 22ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் சேவை குறைபாடு புரிந்து சார்பதிவாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    • திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக சுப்பிரமணியன் கணக்கு வைத்துள்ளார்.
    • வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தென்னக ரெயில்வேயில் பணிபுரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

    மேலும் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் ரூ.18 ஆயிரத்து 226 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27.5.2020 இல் இவரது வங்கி கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டது. இதனை எடுப்பதற்காக அடுத்த நாள் சுப்பிரமணியன் வங்கிக்கு சென்றபோது இவர் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரின் கடனுக்காக போட்ட ஜாமீன் கையெழுத்து காரணமாக இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த மாதம் கொரோனா ஊரடங்கு என்பதால் அவரது மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் தாமதமாக தான் வந்தது.

    இந்த நிலையில் அதை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் அவர் அந்த ஓய்வூதியம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பலமுறை இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த சுப்பிரமணியன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிட்ட அளவு பணத்தை விடுவிப்பது மீதமுள்ள பெருமளவு பணத்தை நிறுத்தி வைப்பதுமாக தொடர்ந்து அந்த வங்கி நிர்வாகம் செய்து வந்துள்ளது.

    இதுகுறித்து அவர் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, புகார்தாரர் மேற்கோள் காட்டிய இரண்டு தீர்ப்புகள் மற்றும் சட்ட பிரிவுகள் அனைத்தும் புகார்தாரின் கூற்றிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த மேற்கோள்களின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டியை நிறுத்தி வைக்க கூடாது என்பது தெளிவாகிறது.

    மேலும் புகார்தாரருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தும் பணத்தை வங்கி நிறுத்தி வைத்துள்ளது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் கருதுகிறது. அவரது பணத்தை நிறுத்தி வைத்து வங்கியில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணத்தை எடுக்க விடாமல் வங்கி தடுத்துள்ளது.

    எனவே புகார்தாரருக்கு வங்கி சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்ததற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

    மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு இந்த தொகையினை வங்கி கிளை வழங்காவிட்டால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    • ராஜபாளையத்தில் போலீசார் அபராதம் விதிப்பதை கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளான தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, தேவதானம் , சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் காவல்துறை அத்து மீறி அபராதம் விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஜவகர் மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபாளையம் காவல்துறை தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு 2 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் நின்று ஆன்லைன் அபராத கட்டண வசூல் செய்கின்றனர் என குற்றம் சாட்டினர்.

    ராஜபாளையத்தில் சாலை வசதிகள் சரி செய்யவில்லை. ஆனால் வசூலில் தீவிரம் காட்டும் காவல்துறை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் நூற்பாலைகள் அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் டீக்கடைகள் திறந்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் எனக்கூறி டீக்கடைகளை திறங்க எதிர்ப்பு தெரிவிக்கும் காவல்துறை நகர் முழுவதும் டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ கத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    • டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால், சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், திருநள்ளாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதை நிறுத்தி டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹஸ்டா சிங் (வயது39) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர், அவரை, காரைக்கால் கேர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி லிசி, மது போதையில் கிரேன் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    • நாமக்கல், திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் காவல் துறை சார்பில் கூடுதலாக அபராத கட்டணம் விதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர் .

    இதனால் கந்தசாமி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகராட்சி பணியாளரான என்மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என கூறினார். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. அரசு விதிப்படி அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமி நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றார் .

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார். அவரை அழைத்து விளக்கம் கேட்டதுடன் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.

    • குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் என மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்.

    மதுரை

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், 14 வயது நிரம்பாத குழந்தைகளை வேலையிலும், 18 வயது நிரம்பாதவர்களை அபாய மான தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.

    மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர்.
    • பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான பழைய இரும்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கடையில் சேர்த்து பின்னர் புதிய இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் இரும்பு பொருட்களை எடை போடும் பகுதிக்கு, கடைகளில் இருந்து வாகனங்களில் இரும்பு கடை உரிமையாளர்கள் எடுத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இவ்வாறு இரும்பு பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை, எடை போடும் நிறுவனத்திற்கு சற்று முன்பாக நின்று கொண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் மடக்கி பிடிக்கிறார்கள். பின்னர் முறையான பில் உள்ளதா? எவ்வளவு எடை உள்ளது? என்று கேட்டும், ஏதாவது ஒரு காரணத்தை கூறியும் பணம் பறிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். மேலும் அதிக அளவில் அபராதமும் விதித்து வருகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த நிலையில், இரும்பு கடைகளின் அருகே நின்று அபராதம் விதித்து வரும் சம்பவத்தால், தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளி விட்டதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள், லாரியை மறித்தனர். பின்னர், பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    அப்போது பின்னால் வந்த வாகன உரிமையாளர், பொருட்களுக்கு பில் தன்னிடம் இருப்பதாகவும், எடை போட தான் பொருட்களை கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர் அதை செலுத்த மறுத்ததுடன் மற்ற இரும்பு கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் பேசினர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. இதை அடுத்து அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் ரூ.1.5 லட்சம் அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று கூறிய அதிகாரிகள், அபராத பணத்தை கட்டினால் தான் வாகனத்தை விடுவிப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய வியாபாரிகள், அபராதத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டனர். இதை அடுத்து வாகனத்தை விடுவித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    சாலையில் செல்லும்போது வாகனங்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு முறையான பில் உள்ளதா, எவ்வளவு பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் குறிப்பாக பழைய இரும்பு கடைக்கும், எடை போடும் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று கொண்டு அதிகாரிகள் வேண்டுமென்றே வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்வது இரும்பு வியாபாரிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே விதிகளை மீறும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரும்பு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×