search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர்"

    கடலூர் அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜுலு (வயது 55). விவசாயி.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை மற்றும் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் இவரது நிலத்தில் இருந்த தர்ப்பூசணியை திருடி கொண்டு இருந்தனர்.

    இதனை கோவிந்த ராஜூலு உறவினர் தினேஷ் பார்த்து, அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் தினேசை சரமாரியாக தாக்கினார்கள். இதில் தினேஷ் காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜுலு மற்றும் அவருடைய மனைவி ஜோதி ஆகியோர் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கோவிந்தராஜூலு மற்றும் ஜோதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

    பின்னர் வீட்டில் இருந்த கார், டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் முன்விரோதம் தொடர்பாக நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா? என்று கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    சிதம்பரம் அருகே இன்று காலை மினிலாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்திரன்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் காசியம்மாள் (வயது 54) மற்றும் அமுதா (53). இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர்.

    இன்று காலை அகரநல்லூர் கிராமத்தில் வயலில் வேலை செய்ய காசியம்மாள், அமுதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் ஒரு மினிலாரியில் புறப்பட்டனர். மினிலாரியை வல்லம் பகுதியை சேர்ந்த ரெங்கபாட்ஷா ஓட்டி சென்றார். இந்த மினிலாரி சிதம்பரம் புறவழிச்சாலையில் கூத்தங்கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினிலாரியின் இடிபாடுக்குள் சிக்கி காசியம்மாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அமுதா, அலமேலு, குமுதவள்ளி, வசந்தா உள்பட 21 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதா இறந்தார். காயம் அடைந்த 20 பெண்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரெங்கபாட்ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிதம்பரம் புறவழிச்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சேத்திரன்கிள்ளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    கடலூர்:

    கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் திடீரென ஏறினார்.

    அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுந்தரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    சுந்தரின் மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவரை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர்.

    இதையடுத்து டவரில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிரோடு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, ஆல்பேட்டையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர துணை செயலாளர் சிலம்பு என்கிற சிலம்பரசன் அங்கு வந்தார்.

    கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கோ‌ஷமிட்டார். பின்னர் அவர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது பற்றி பஸ் டிரைவர் மணவளவன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி சிலம்பு என்கிற சிலம்பரசன் மீது போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அசானா(வயது 20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை அசானா வழக்கம்போல் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வேலை பார்க்கும் இடத்திற்கு தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். சரோஜினி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தினார்.

    பின்னர் அவர் அசானாவை பின்தொடர்ந்து சென்றார். அந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து திடீரென அசானாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அசானாவின் தோழி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் அந்த மர்மநபர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் படுகாயமடைந்த அசானாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அசானாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அசானா கூறியதாவது:-

    எனக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்குராயப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபரை எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டேன். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன்.

    இந்தநிலையில் என்னை மர்மநபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபருக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews

    குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் தொடர்புடைய 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இறந்தார்.

    குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், திருநாவலூர், கள்ளக் குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் தனியார் பஸ்கள் உள்பட 20 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

    மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி போன்ற பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றன.

    நேற்று மாலையில் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில், கடலூர், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், ரெட்டிச் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் 16 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    மேலும் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, போன்ற பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பஸ்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

    சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) உள்ளது. இங்கு சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசந்தர் என்பவர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அதே ரெயிலில் சிதம்பரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் கடலூரை சேர்ந்த 20 வயது மாணவியும் சிதம்பரம் செல்வதற்காக ஏறி பயணம் செய்தார். அப்போது ஜெயசந்தர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ. முதல்வரிடம் புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் ரவிச்சந்திரன் நடத்திய விசாரணையில், பயிற்றுனர் ஜெயசந்தர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பயிற்றுனர் ஜெயசந்தரை சஸ்பெண்டு செய்து, முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1.3.2018 முதல் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 29 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக கடலில் கலக்கிறது. ஆகவே இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, முதல்- அமைச்சர் எங்களை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை கோவையை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) ஓட்டினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல்(25) உதவியாளராக இருந்தார்.

    இந்த ஆம்னி பஸ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி டிரைவர் கமலக்கண்ணன் மற்றும் உதவியாளர் சக்திவேல் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. #Tamilnews
    சென்னையில் போராட்டம் நடத்திய முகஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் திவ்யா(வயது22).

    இவர் நர்சிங் படித்துவிட்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று காலை திவ்யா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தாய் சுமித்ரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யா எங்கு சென்றார் என தேடிவருகிறார்.
    ×