search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். #PMModi #AIIMS #Madurai
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. விஜயகுமார், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர் டி.ஐ.ஜி.க்கள், 15 எஸ்.பி.க்கள், 40 டி.எஸ்.பி.க்கள் உள்பட சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    விழா நடைபெறும் பகுதியில் பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள். இதற்காக மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கூடிய வாசல்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு பின்னர் வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சி நடைபெறும் மண்டேலாநகர், மதுரை விமான நிலையம் அருகே இருப்பதால் பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை 2 மணி நேரம் மதுரையில் விமானம் பறக்க தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மண்டேலா நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி பா.ஜனதாவினர் அந்த பகுதி முழுவதும் அலங்கார வளைவுகள், தோரண வாயில்கள் அமைத்துள்ளனர். பிரதமர் பங்கேற்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.  #PMModi #AIIMS #Madurai
     
    எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர் பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    மதுரை:

    மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை.

    இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    அந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வழிப்பறி ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திண்டுக்கல் ரோடு வரை விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பிடித்த பொதுமக்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்த வழிப்பறி ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் பறித்த செல்போனையும் மீட்டனர்.

    மர்மநபரை கைது செய்த போலீசார் இவருக்கு வேறு வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கியதால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள சாமநத்தத்தை அடுத்துள்ளது அய்யனார்புரம். அங்குள்ள தனியார் ஆலைக்கு பின் பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அந்தப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி முனீஸ்வரன், சிலைமான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை பார்த்து விசாரணை நடத்தினர்.

    அதன் அருகே கிடந்த ஒரு பையில் இருந்த முகவரியில், அறந்தாங்கியை அடுத்த சிலத்தூர், ரஞ்சன் (வயது 30) என்று இருந்தது.

    பிணமாக கிடந்த வாலிபர் ரஞ்சனா? என்பது குறித்து மேற்கண்ட முகவரிக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சிலைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×