search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135158"

    கடையநல்லூர் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கடையநல்லூர்:

    தமிழக பட்டதாரி காங்கிரசின் துணைத் தலைவரும்,நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவருமான அப்துல்காதர் தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் மேம்பாட்டிற்காக நகராட்சிகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒளிவு மறைவின்றி நகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து வெளியிடவேண்டிய கடமையாகும். மக்கள் நலனுக்காக திட்டம் மற்றும் தீர்மானங்கள் குறித்து தகவலறியும் வகையில் நகராட்சி நிர்வாக இணையதளம், அறிவிப்பு பலகை ஆகியவைகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

    ஆனால் கடையநல்லூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஏதும் முறையாக இணையதளம் மூலமாகவோ அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரிவிக்காமலிருந்து வந்தது. இது குறித்து தமிழ்நாடு தகவலறியும் உரிமைச்சட்டம் கீழ் தகவல் கேட்டு விண்ணபித்திருந்தேன். ஆனால் நகராட்சி நிர்வாகம் தட்டிகழிக்கும் வகையில் மனுவில் எனது கையெழுத்து சரியில்லை என நிராகரித்தது.

    இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில் ஒரு தீர்மானத்திற்கு ரூ.100 வீதம் 437 தீர்மானங்களுக்கு ரூ.43ஆயிரத்து 700 ரூபாய் கட்ட அறிவுறுத்தியது. நகராட்சி நிர்வாகம் தானே முன்வந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிர்வாக தகவல்களை எங்கே நிர்வாக சீர்கேடுகள் தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தீர்மான நகல்களை வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே பவானி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் மொத்தம் 1180 உறுப்பினர்கள் உள்ளனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் நகலும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. உதாரணமாக டீசல் வாங்கியதில் ஆட்டோ மொபைல்ஸ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வாராக்கடன் என பல்வேறு வகையில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே தாங்கள் ,இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இது பற்றி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘இந்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர். #tamilnews
    அண்ணா தொழிற்சங்க நிதி கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். #ADMK #Chinnasamy
    சென்னை:

    அண்ணா தொழிற்சங்க பேரவை நிதியில் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில் தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளர் சின்னசாமி (வயது 70) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதே அவரது தொழிற்சங்க பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். தற்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார்.

    இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. . #ADMK #Chinnasamy 
    அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் 3 ஆண்டு காலங்களில் ரூ.240 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #AnnaUniversityScam
    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள ஊழல்கள், தமிழக கல்வித் துறையில் இதுவரை நடந்துள்ள ஊழல்கள் அனைத்தையும் மிஞ்சுவதாக உள்ளது.

    விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் நவீன முறையில் ஏமாற்றி, மிக நூதனமாக இந்த முறைகேடு நடந்துள்ளது.

    அண்ணா பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.700 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அந்த 700 ரூபாயில் ரூ.300 விடைத்தாள் போட்டோ காப்பிக்கும் ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும்.


    ரூ.700 பணம் கட்டி விண்ணப்பித்ததும், அந்த பாடத்துக்குரிய நிபுணர், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு அந்த விடைத்தாள் உகந்ததா? என்று ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மறுமதிப்பீடு நடக்கும் மையம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் 23 மையங்களில் மறுமதிப்பீடு பணி நடக்கும்.

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரடியாக இதற்கான அதிகாரிகள் மற்றும் மறு மதிப்பீடு செய்பவர்களை முடிவு செய்து நியமிப்பார். மறுமதிப்பீட்டின் போது ஏற்கனவே எடுத்த மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் வந்தால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

    மறுமதிப்பீடு செய்த பிறகு ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணை விட 15 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றால், மேலும் ஒரு நபரிடம் மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும். அவர்கள் இருவரில் யார் அதிக மதிப்பெண் அளித்துள்ளாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இந்த இடத்தில்தான் தில்லுமுல்லு நடத்தப்படும். குறிப்பிட்ட மாணவருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் செய்து விடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தையே சுற்றி, சுற்றி வருபவர்களாக உள்ளனர்.

    இந்த இடைத்தரகர்களுக்கும் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யும் பேராசிரியர்கள் சிலருக்கும் நெருக்கமான நட்பு உண்டு. இந்த கும்பல்தான் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்துள்ளனர்.

    அதாவது விடைத்தாள் திருத்தத்துக்கு ஏற்ப இந்த கும்பல் லஞ்சம் வாங்கியுள்ளது. பாசானால் போதும் என்ற மாணவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் வேண்டும் என்று விரும்பும் மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கியுள்ளனர். சராசரியாக அவர்கள் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த லஞ்சப் பணம் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளின் கைகளுக்கும் சென்று சேர்ந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். அதை உறுதிப்படுத்தவே நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    பொதுவாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் அதிகாரியாக நியமனம் செய்யப்படுபவர்கள் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார்கள். அதாவது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக ஒருவர் நியமனம் செய்யப்பட்டால் அவர் 6 செமஸ்டர்களை நடத்தும் பொறுப்பை ஏற்பார்.

    6 செமஸ்டர்களின் தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வது உள்ளிட்ட அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில்தான் நடைபெறும்.


    இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகே சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் லஞ்சம் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி ஒரு செமஸ்டருக்கு ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

    தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தங்களது 3 ஆண்டுகள் பணிக்காலத்தில் 6 செமஸ்டர்களிலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சந்தேகம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.240 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    தனிப்பட்ட வகையில் சிலர் மட்டுமே இந்த முறைகேடுகளை செய்ய இயலாது. அனைத்து மறுமதிப்பீடு மையங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் இந்த ஊழல் ஜாம்...ஜாம் என்று நடந்துள்ளது.

    போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் எப்படி நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கறுப்பு ஆடுகளும் யார் என்பது தெரிந்துவிடும்.  #AnnaUniversityScam
    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. #Homeopathy #LokSabha
    புதுடெல்லி:

    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews 
    கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்வாய் கிராம பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு உள்ளதாக கலெக்டரிடம் அ.ம.மு.கவினர் புகார் அளித்துள்ளனர்.
    செய்துங்கநல்லூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்வாய் ஊராட்சி கால்வாய் மற்றும் திருவரங்கப்பட்டி கிராமங்களில் ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் போலியான நபர்கள் பெயரில் அடையாள அட்டைகளை உருவாக்கி செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு காட்டி வங்கிக் கணக்குகள் மூலம் அரசுப்பணத்தை கையாடல் செய்கிறார்கள்.

    ஒன்றிய அலுவலகத்தில் எங்களது ஊராட்சிக்கென வழங்கப்பட்ட தெரு விளக்குகளை வெளிமார்க்கெட்டில் விற்று விட்டு மின் கம்பத்தில் மாட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளனர். தனிநபர் கழிவறை திட்டத்தில் கட்டாத கழிவறைகளை கட்டியதாக வேறு இடத்தில் உள்ள கட்டிய கழிவறை முன் போட்டோ எடுத்து அதன் மூலம் அரசுப்பணத்தை கையாடல் செய்துள்ளனர். எனவே பஞ்சாயத்து கிளார்க் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #TamilnaduHighWays #MinisterJayakumar
    சென்னை:

    மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2012-2013-ம் ஆண்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி. எம்.சி.) என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுதுபார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், அவசரகால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்பு சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;

    மேலும், சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லைக் கற்கள் அமைத்தல், விபத்துகளை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியீடுகளை அமைத்தல்,

    சாலை ஓரப்புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத்தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

    மழைக்காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன.

    எனவே மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டு இருப்பதுடன் பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அந்தச் செய்தியில், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 5 கோட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு பதிலாக ரூ.2,083 கோடி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நடை முறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு என்பது தவறான தகவல் ஆகும்.

    அனைத்து பணிகளையும் உள்ளடக்கிய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில், சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூறு மதிப்பீட்டை மட்டும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) மூலம் பணியை மேற்கொள்ளாமல் தனித்தனியாக திட்டப் பணிகள் மூலம் சாலைகளை மேம்படுத்தி இருந்தால் ரூ.278 கோடி நிதி தேவைப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பி.பி.எம்.சி. மூலம் ரூ.55.46 கோடியை அரசு சேமித்துள்ளது.

    அந்த வகையில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருது நகர் கோட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilnaduHighWays #MinisterJayakumar
    நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #CPIReport #Coal
    சென்னை:

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-2017-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற்கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

    மாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016-2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.

    அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.க. எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

    நாங்கள் எந்த சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தோமோ, அதே சட்டமன்றத்திலிருந்து பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார்,லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது? மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகையாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் ஜெயக்குமார்.

    இதே சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தி.மு.க. பேசிய போதெல்லாம், மத்திய அரசின் லோக்பால் சட்டத்திருத்தத்திற்காகக் காத்திருக்கிறோம் என்று காலங்கடத்தியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது உச்சநீதிமன்ற நெருக்கடியால், பெயரளவிற்கு ஒரு சட்டமுன்வடிவு, கூர்மையும் வலிமையும் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகையில் பல்பு இல்லையென்றால் இருண்டுதான் கிடக்கும். அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் பல்பு மட்டுமில்லை, மெயின் ஸ்விட்ச்சும் இல்லை, மின் இணைப்பும் இல்லை.

    முழுமையான வலிமைமிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் தி.மு.க. வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.

    ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்துவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?.உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவினால் விரைந்து வரும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 
    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் முட்டை வினியோகிக்கும் பொறுப்பை காண்டிராக்ட் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப முட்டைகளை வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம், அரசு நிர்ணயித்த முட்டையை விட, ‘புல்லட்’ எனப்படும் எடை மற்றும் தரம் குறைந்த முட்டைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குவதாக தெரியவந்தது. இதனால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமானவரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    போலியான நிறுவனங்கள் மூலம் முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்தது போன்று போலி கணக்குகள் தயாரித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, ‘கிருஷ்டி பிரைடு கிராம்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததால் அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அங்கு வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் உள்ள அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தில் வருமானவரித்துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகள் கோட்டூர்புரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ளன. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடந்தது.

    திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மட்டும் இன்றி அதிகாரிகள் குடியிருப்பு, குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள அந்த மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீடு, திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீடு மற்றும் ராசிபுரம் பகுதியில் உடுப்பத்தான்புதூர் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள சத்துமாவு நிறுவனம் மற்றும் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல் வேப்பநத்தம் பகுதியில் உள்ள முட்டை குடோன்களிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களிலும் நடந்த சோதனையில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளாக வினியோகம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது சென்னை, கோவை, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டோம்.

    இந்த சோதனையின் போது ரொக்கப் பணமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆய்வுக்கு பின்னர்தான் ரொக்கம் மற்றும் ஆவணங்களின் துல்லியமான மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையில் இறங்க உள்ளோம். வரிஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    அருப்புக்கோட்டையில் விசைத்தறி கூடம் அமைக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் நகராட்சி அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல் முருகன்.

    அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். 
    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju
    திருச்சி:

    திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 63-வது கிளை கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய கிளையை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைபெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நடப்பாண்டில் விவசாய கடனுக்கு ரூ.8ஆயிரம் கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக 8 டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்ய உள்ளேன். 8ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பாரபட்சமில்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளை தடுக்க விஜிலென்ஸ் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடந்தது போல் அல்லாமல் தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும். முதல்வரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலபடுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமை சாலை உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMminister#SellurRaju
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju
    சென்னை:

    கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறையினர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்க்கடன், உரம் வினியோகம், ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    கூட்டுறவு சங்கம் அ.தி.மு.க. அரசால் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு அரசியல் இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த முறைதான் சக்கரபாணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதுவும் கூற முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை.


    18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைவது பற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார். அதனால் நான் எதையும் கூற விரும்பவில்லை. கூட்டுறவு அச்சகங்களில் பழைய மிஷின்கள் இருக்கிறது. அதனை மாற்றி நவீன ரக மிஷின்கள் வாங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு வழங்கியது. இது ஊழியர்களுக்கு தெரியும். 5 ஆண்டு முடிவுற்று இருக்கிறது. சம்பள உயர்வு குறித்து முதல்வரே அறிவிப்பார். மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் இந்த அரசு எடுக்காது.

    நடப்பாண்டில் 8 ஆயிரம் கேடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.102.79 கோடிக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 281 அம்மா மருந்தகம் மூலம் ரூ.700 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவிரைவில் 61,851 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #SellurRaju
    ×