search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பதிவு"

    அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். #Jallikattu #AlanganallurJallikattu
    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது.

    இதற்கிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் ஒரு தரப்பிரனருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியில் தனிப்பட்ட குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது எனவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    இதே பிரச்சினை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரித்தபோது அலங்காநல்லூர் விழா கமிட்டியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 35 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 3 இடங்களில் வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடந்தது. அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முன்பதிவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அலங்காநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் 10 டாக்டர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தகுதியில்லாதவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

    தேர்வான இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். மாடுபிடி வீரர்கள் முன்பதிவையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு நாளை (13-ந் தேதி) நடக்கிறது.  #Jallikattu #AlanganallurJallikattu
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #SabarimalaTemple #WomenDevotees
    திருவனந்தபுரம்:

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி இங்கு தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.



    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 2 முறை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம்பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அய்யப்பன் கோவில் வளாகத்தில் முதல் முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும். 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளா மட்டும் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள். அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்காக அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் மண்டல, மகர விளக்கு பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான இளம்பெண்கள் வர வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே கேரள போலீஸ் துறை சார்பில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. அப்படி முன்பதிவு செய்யும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த முன்பதிவு தரிசனத்திற்கு பக்தர்கள் இடையே அமோக வரவேற்பு உள்ளது. எனவே முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள இதுவரை 3½ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதிலும் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில் இதுவரை 539 இளம்பெண்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த பெண்கள் அனைவரும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மண்டல, மகரவிளக்கு பூஜையின் போதும் இளம்பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    எனவே கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. 
    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. #PongalFestive #TrainTicket

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். கடைசி நேர கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது ரெயில் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டி திட்டமிட்டு செல்லும் வகையில் 120 நாட்களுக்கு முன்கூட்டியே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) வருவதால், 3 நாட்களுக்கு முன்கூட்டி, அதாவது ஜனவரி 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று(வியாழக்கிழமை) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களான நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு நீண்டது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13-ந் தேதிக்கு முன்பதிவு இன்று(வெள்ளிக் கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. #PongalFestive #TrainTicket
    தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்கள் அரசு விரைவு பஸ்களில் இன்றும், நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். #TNGovtBus
    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1000 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பெரும்பாலனவை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள்.

    நீண்டதூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்தநிலையில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு ‘பாடி’ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 புதிய பஸ்கள் விடப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 40 பஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுக்கை வசதியுடன் முதன் முதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசிநேர பயணமாக பஸ் பயணத்தை மேற்கொள்கிறார்கள்


    தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடிய நிலை இருப்பதால் அவற்றில் இருந்து தப்பிக்க அரசு பஸ்களில் முன்பதிவு இப்போதே செய்து கொள்ளலாம். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் தீபாவளி முன்பதிவு சிறப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.

    300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில் சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.

    இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். #TNGovtBus
    தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
    சென்னை:

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

    இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

    முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×