search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து"

    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். #HardikPandya #BCCI #LokeshRahul
    புதுடெல்லி:

    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



    இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.
     
    இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. #HardikPandya #BCCI #LokeshRahul
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், திருவாரூர் தேர்தல் தொடர்பாக கருத்தினை பதிவிட்டுள்ளார்.

    அதில், “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும்’’ வேண்டுகோள் விடுத்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும், மாநில கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்று அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #Congress #Manufacturing
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமருக்கும், அவருடைய போட்டியாளர்களுக்கும் இடையிலான புகழ் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது.

    மொத்த மக்களவை தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. அல்லது, 3-வது, 4-வது இடத்தில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 225 தொகுதிகளில்தான் போட்டியிடும் நிலையில் உள்ளது. அங்கெல்லாம் பா.ஜனதாவுடன்தான் நேரடி போட்டி நிலவும்.

    எனவே, தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும்.

    காங்கிரஸ் கட்சி, ஊழல் புகாரில் சிக்கித் தவித்த கட்சி. ஆனால், பிரதமர் மோடியோ ஊழலற்ற ஆட்சியை தந்து வருகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சி கண்டுபிடித்த உத்திதான், இட்டுக்கட்டுவது. உண்மையான பிரச்சினை இல்லை என்றால், புதிதாக உருவாக்குவது. அப்படி போலியாக உருவாக்கியதுதான், ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த விவகாரம். ஆனால் அது எடுபடவில்லை.

    அது, அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில், தனிநபர் சம்பந்தப்படவில்லை. தங்களது போர் திறனுக்கு அந்த விமானம்தான் ஏற்றது என்று ராணுவப்படைகள் விருப்பம் தெரிவித்தன. ரபேல் போர் விமானங்களின் விலையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிகளும் சொல்லவில்லை. ஏனென்றால், இது தேசநலன் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தபோது, அவர் இது ரகசிய ஒப்பந்தம் அல்ல என்று தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்த கூற்று, உடைத்து எறியப்பட்டு விட்டது.

    முன்பு, போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் கட்சி சிக்கி தவித்தபோது, அதை திசைதிருப்ப வி.பி.சிங் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவில் போலியாக ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டது. ‘நாங்கள் ஊழல்வாதி என்றால், நீங்களும் ஊழல்வாதிதான்’ என்று காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி அப்படி செய்தது. அதுபோன்றுதான் இப்போதும் செய்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வியூகம், மதச்சார்பின்மைக்கு புதிய அர்த்தம் கொடுத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவது. ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரும், தலீபான்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதும் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்கான நோக்கம்தான். அதன்மூலம், இந்துக்களுடன் பகையை உண்டாக்க பார்க்கிறது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை உண்டாக்கி விடும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  #ArunJaitley #Congress #Manufacturing  #tamilnews 
    போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். #Helmet #Seatbelt
    சென்னை:

    சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.

    2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.

    மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.

    இந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கூறியதாவது:-

    ஹெல்மெட் சட்டத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதால் 2017-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விபத்தில் மனித உயிர் பலியாகவில்லை என்ற நிலை வரவேண்டும் என்று மனுதாரர் நினைக்கிறார்.

    இதற்காக போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.

    இதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கூடுதல் அரசு பிளடர் இ.மனோகரன், இந்த சட்டத்தையும், விதிகளையும் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்துகின்றனர். அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்துகின்றனர் என்று கூறினார்.

    தற்போது நவீன வாகனங்களில் முகப்பு விளக்கின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. அந்த முகப்பு விளக்கில் கருப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவது இல்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது.

    புதிதாக தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் பகல் நேரங்களில் முகப்பு விளக்கு எரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை இயக்கியவுடன் தானாக முகப்பு விளக்கு எரிவதுபோல புதிய வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட விளக்குகளில் பொருத்தப்படும் பல்புகள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும்.

    ஆனால், சிலர் சந்தையில் இருந்து கலர் கலராக எல்.இ.டி. பல்புகளை வாங்கி முகப்பு விளக்கில் பொருத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இதுதொடர்பாக எடுத்துள்ள, இனி எடுக்கப்போகின்ற நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 27-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 
    கர்நாடக முதல்-மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த போலீஸ்காரர் அருண் டோலினை மாநகர போலீஸ் கமிஷனர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். #Kumaraswamy #Constable #Suspended
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Kumaraswamy #Constable #Suspended
    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி கூறியுள்ள துணிச்சலாக கருத்து வரவேற்கத்தக்கது என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan
    கோவை:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்க மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் இன்று கோவை வந்தார்.

    அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் மத்திய மந்திரிகள் விளக்க இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து எதிர்கருத்துகள் வந்தால் அதை தாங்கி கொள்ளாமல் மிக மோசமான விமர்சனம் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி வரம்பு மீறச் செய்து அதை அபாயக்கட்டத்தில் கொண்டு போய் விடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    போராட்டத்தின் போது சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. மற்றும் ரஜினி சொல்லும் போது மற்ற கட்சிகள் ஏன் எதிர்த்து பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களை கொச்சைப்படுத்துவதாக சொல்லி கொந்தளிக்கிறார்கள்.

    பஸ் மீது, கலெக்டர் அலுவலகம் மீது தீ வைத்தது மற்றும் ஆயுதம் ஏந்தி போராடியதெல்லாம் மக்கள் தானா? அப்படியென்றால் நீங்கள் தான் மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்று தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் பேசி வருகிறார்கள். இது தவறு.



    ஸ்டெர்லைட்டில் அபாயம் இருப்பதற்கு காரணம், 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பெற்ற ஊக்கம் தான். அதுதான் அவர்களை 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்ததன் விளைவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தி.மு.க. ஒப்புக்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் சொன்னது போல தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்தது உண்மை தான். அதை மறைக்க அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம் மட்டுமே தமிழகத்தில் சோறு போடும் என எல்லா கட்சிகளும் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியாக வாழக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் நாடகத்தை எல்லா கட்சிகளும் நடத்தினால் தமிழக மக்கள் அதை புறக்கணிப்பார்கள். மிக மோசமான முன் உதாரணத்தை தமிழக அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார். இப்படி வெளிநடப்பு செய்தால் தமிழக மக்கள் நலன் புறக்கணிப்படுகிறது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டம் இந்த நிலைக்கு மாறியது சமூக விரோதிகளால் தான். தற்போது எனக்கு கடுமையாக விமர்சனங்கள் வருகிறது. தொலைபேசியில் மிரட்டல்கள் வருகின்றன.

    யாரெல்லாம் சமூக விரோதிகளை சொன்னால் கோபப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்கள். ரஜினி துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது. உடனே அவர் பின்னால் பா.ஜ.க., அ.தி.மு.க. இருக்கிறது என்று சொல்லக் கூடாது. சினிமாவில் வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் பேசலாம். உண்மையான அரசியலில் அப்படி இருக்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அதற்கு முழு பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்த பிறகு வேறு எந்த பிரச்சினையை தேடலாம் என்று எதிர்கட்சிகள் யோசிப்பார்கள். இதனால் தான் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடி இருக்கின்றன. இனிமேல் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும்.

    விஞ்ஞான பொருளைக் கண்டுபிடிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள். கெயில் திட்டத்தை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றத்தான் பல போராட்டங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பல உதவிகளை செய்தார். மக்களுக்கு பாதிக்கப்படுகின்ற திட்டங்களை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விடும் என்பதால் சமூக வலைதளங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறி தரக் குறைவாக விமர்சனங்களை செய்கின்றனர்.

    இதை நாங்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். எங்கள் வேலையை திறம்பட செய்வோம். என்னை பற்றி வரம்பு மீறி பேசினால் அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan

    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவானதாக இல்லை என்று நீதிபதிகள், மூத்த வக்கீல் கருத்து கூறியுள்ளனர். #BanSterlite
    சென்னை:

    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் போராட்டம், கடந்த மே 22-ந்தேதி நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர்.

    இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை இழுத்து மூட மே 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இத்துடன் பிரச்சினை முடிந்ததா?, இனி இந்த நிறுவனம் செயல்படாதா? அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து விடுமா?, அரசாணை ரத்தாகி விடுமா? அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்குமா? என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் கேட்டால், தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம். அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘இப்படி ஒரு அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியின்போது விதிக்கப்படும் விதிமுறைகளை மீறினால், அந்த அனுமதியை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த விதிமீறலை சரி செய்துவிட்டு, மீண்டும் அனுமதி கேட்க அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு அதிகாரமே கிடையாது’ என்றார்.

    மேலும் அவர், ‘வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டினால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் இருக்கிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த நிறுவனம் மூடப்பட்டால், அதற்கான இழப்பீடு அனைத்தையும் மாநில அரசான தமிழக அரசுதான் வழங்க வேண்டும்’ என்றார்.

    ஆனால், இந்த அரசாணையே பலவீனமானது என்கிறார் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன். அவர் கூறியதாவது:-

    நான் வக்கீலாகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்தவன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர்அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங்களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணையை வெளியிட்டு இருக்கவேண்டும்.

    ஆனால், 2 பக்கம் கூட அரசாணை இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டு காரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும்.

    அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொதுமக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.

    அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்த காரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யாமல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள்.

    உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டசபை நடக்கிறது. சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.

    ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா? நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம் என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் பேட்டியில் கூறியது உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா?

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பேர் மக்களுக்கு எதிராக உள்ளனர். 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விரிவாக தீர்ப்பு அளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அப்போது மத்திய அரசும், மாநில அரசும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படாததால், மீண்டும் அந்த தொழிற்சாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.

    எனவே, வலுவில்லாத அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, பழியை நீதித்துறையின் மீது போட தயாராகி விட்டது.

    இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்.

    இந்த அரசாணை குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல், வனம், வன விலங்குகளை பாதுகாக்க மாநில அரசுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 48ஏ வின்படியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1)(பி)யின்படியும், பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், இந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரு தொழிற்சாலையை மூட அரசு கூறும் காரணமா?

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்கள்.

    ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிருந்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு சென்றார். ஆய்வு செய்தார். அங்குள்ள தண்ணீர், நிலம் மாசு அடைந்திருப்பதை உறுதி செய்தார். அங்கிருந்த போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நாற்றத்தை உணர்ந்தார். அதன்பின்னர், நீதிபதிகள் இருவரும் விரிவான தீர்ப்பை கூறி, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டார்கள்.

    அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தெந்த விதிகளை மீறியுள்ளது? எதற்காக இந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடுகிறோம்? என்று பல பக்கங்களுக்கு பல காரணங்களை கூறி, தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள காரணங்களை கூறி, இப்போது கூட தமிழக அரசு விரும்பினால், புதிதாக கூடுதல் அரசாணை ஒன்றை பிறப்பிக்க முடியும். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம், அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு முன்பாக, கூடுதல் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BanSterlite
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Rajinikanth #ThoothukudiFiring
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி நேற்று தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறு தல் கூறி, நிதி உதவியையும் அளித்த பிறகு தூத்துக்குடியிலும், சென்னையிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ஆவேசமாக காணப்பட்டார்.

    ரஜினி கூறுகையில், “தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கு வி‌ஷக் கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம். போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது.

    போலீசை தாக்கியவர்கள், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சமூக விரோதிகள்தான். இப்படி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்துக்கு பரவலாக கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தோன்றியுள்ளது. நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு, நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்தையே இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கு ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கள் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. “ஆறுதல் சொல்ல வந்தவர் ஏன் இப்படி எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்?” என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

    ரஜினி ரசிகர்களும், ரஜினி மன்றத்தினரும் கூட “சமூக விரோதிகள்” என்ற பேச்சில் உடன்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். ரஜினியின் கருத்துக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    குறிப்பாக தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும் என்ற ரஜினியின் ஆவேசவார்த்தை ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் சாமானிய மக்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறி உள்ளது. மக்களின் இத்தகைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரஜினி தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ரஜினியை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெற, போராட்டம் மூலம் தானே தீர்வு காணப்பட்டது. இது ரஜினிக்கு தெரியாதா? அவர் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்ட ரஜினி தயாரா?” என்றார்.



    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், “வாழ்க்கையே போராட்டம் தானே. போராட வேண்டிய சூழ்நிலை உருவானால் போராடி தானே ஆக வேண்டும். ரஜினியே போராட வேண்டும் என்றுதானே புத்தாண்டு வாழ்த்தில் சொன்னார். இப்போது சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டாவிட்டால் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “எங்கள் போராட்டத்தை தடுக்க நினைத்தால் எரிமலை வெடிக்கும். போராட்டம் பற்றிய எந்த அரிச்சுவடியும் ரஜினிக்கு தெரியாது. தமிழகம் சுடுகாடாக மாறாமல் இருக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி இது தெரியாமல் பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளார்” என்றார்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்வது வி‌ஷம கருத்து. தன்னெழுச்சியாக நடந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் ரஜினி பா.ஜ.க. வின் குரலை எதிரொலித்துள்ளார். பாசிச சக்திகளின் ஏஜெண்டு போல செயல்படும் நடிகர் ரஜினி காந்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.


    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ரஜினியின் குரல் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது. சில மதவாத சக்திகளும் இதில் ரஜினிக்கு யோசனை கூறி இருக்கலாம். மக்கள் போராட்டம் நடத்தியபோது களத்துக்கு போகாத ரஜினி, இப்போது அங்கு சென்று சமூக விரோதிகள் என்கிறார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசும் ரஜினி நிதானம் இழந்துள்ளார்.

    இமயமலைக்கு சென்று தியானம் இருக்கும் பாவாவின் சீடரான அவர் ஒரு சாதாரண கேள்விக்கு உணர்ச்சிவசப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக விரோதிகள் என்று சொன்னதன் மூலம் அவர் தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவருக்கு இருந்த நன்மதிப்பு போய் விட்டது” என்று கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் நடந்தது மண்ணுக்கான போராட்டம். சிறுவர் - சிறுமிகள் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் சமூக விரோதிகள் என்றால் குடும்பத்தோடா களத்துக்கு வருவார்கள்? மக்கள் இப்படி போராடினால் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம்.

    ஸ்டெர்லைட் போராட்டம் பொழுதுபோக்குக்காக நடக்கவில்லை. கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்று மாமேதை அம்பேத்காரே கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீசுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பது ஏன்? போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாதீர்கள். அவரது இந்த அதிகார குரல் வெட்கக்கேடான குரல்” என்று கூறியுள்ளார்.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி திரை உலகப் பிரமுகர்களும் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் அமீர் கூறுகையில், “ரஜினி ஆவேசப்பட வேண்டியதில்லை. தன்னை பா.ஜ.க. என்று சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் மயில்சாமி கூறுகையில், “தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் சுதந்திர போராட்டம் மாதிரிதான். அதை வரவேற்காமல் ரஜினி கொச்சைப்படுத்தி விட்டார்” என்றார்.

    ரஜினிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் ரஜினிக்கு எதிரான தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியபடி உள்ளனர்.


    இதையடுத்து ரஜினிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். நேற்றிரவே ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    கதீட்ரல் சாலையில் இருந்து ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு திரும்பும் வழியில் சுமார் 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல ரஜினி வீட்டுக்கு திரும்பும் மற்றொரு வழியிலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.  ரஜினியின் வீட்டு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினி வீட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #ThoothukudiFiring 
    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    வைகைச்செல்வன் (அ.தி.மு.க.):-

    போராட்டத்தினுடைய வடிவம் சமீப காலமாக வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு திசையை நோக்கி சென்றது. காவிரி போராட்டமும் வேறு விதமாக நகர்ந்தது.

    இதேபோலத்தான் ஸ்டெர்லைட் போராட்டமும். போராட்டம் வேறு திசை நோக்கி சென்றதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):-

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். அப்பாவி மக்களை கொன்றது ஏன்? இறந்துபோன 13 பேரில் சமூக விரோதிகள் யார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை விட்டுவிட்டு போலீசார் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):-

    சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு சமூகவிரோதிகளையும், பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை. ரஜினிகாந்துக்கு வந்த தகவல்படி அவர் கூறியிருக்கலாம். ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.):-

    இந்த போராட்டம் பயங்கரமாக மாறியது பயங்கரவாதிகளால் தான். பஸ்களுக்கு தீ வைப்பது, கல் எறிவது போன்றவை பொதுமக்களின் எண்ணம் கிடையாது. ஆகவே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள். போராட்டம் எந்த திசையை நோக்கி திரும்பியது என்று பார்த்தாலே அங்கு சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

    பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):-

    தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் பிரவேசமும், அவருடைய கருத்துகளும் மர்மமாக இருக்கின்றன. எந்த கருத்துகளை பரப்புவதற்கு அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஒரு நாள் கூட அங்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து, அதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள ரஜினிகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் புரட்சிக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

    ஜி.கே.வாசன் (த.மா.கா.):-

    மக்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதகமாக இருக்கிற திட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்க நினைத்தால் அநீதி. அந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்டம் அவசியம். போராடுபவர்கள் வன் முறைக்கு காரணமானவர்கள் கிடையாது. அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுகிறது என்றால், யார் காரணம்? ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதற்கு அரசு தான் பொறுப்பு. அப்பாவி மக்கள் அல்ல.

    தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):-

    பொதுமக்களின் போராட்டத்தை ரஜினிகாந்த் வலதுசாரி பார்வையில் இருந்து பார்த்திருக்கிறார். அவர் ஆட்சியாளர்களை பாதுகாக்கவேண்டும். போலீசாரை பாதுகாக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் எடுத்த முடிவு சரிதான் என்ற நிலைபாட்டில் முன்கூட்டியே அவர் எடுத்த முடிவின்படி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்களோடு நின்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

    ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு):-

    போராட்டம் நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது? என்பதை ரஜினிகாந்த் முதலில் பார்க்கவேண்டும். வேண்டும் என்றே யாரும் போராடவில்லை. மக்கள் நடத்திய போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் தவறான முறையில் போலீசாரை வழிநடத்திய அரசை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடைய கருத்து இல்லை.

    கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-

    தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய நியாயமான போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று ரஜினிகாந்த் அடையாளப்படுத்துவது கண்டனத்துக்குரியது. போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காமல் அதை நியாயப்படுத்துகிறவராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று அவர் சொல்லி இருப்பது, போராடுகிற மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):-

    போராட்டம் ஏன் உருவாகுகிறது என்ற அடிப்படை கூட அறியாதவராக இருப்பது, ரஜினிகாந்த் அரசியலில் தான் உடனடியாக பதவி மாடத்தில் ஏறி அமர வேண்டும் என்ற ஆசையை மட்டும் தேக்கி வைத்திருக்கிறார். தூத்துக்குடி போராட்டகாரர்கள் விஷ கிருமிகள் தான் காரணம் என்றோ, சமூக விரோதிகள் தான் என்றோ பேசுவது அறியாமையின் உச்சம். மவுனமாக இருக்கும் போது மிகப்பெரிய அறிவாளியாக தோன்றுகிறார். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய உண்மை அடையாளம் வெளிப்படுகிறது. அவர் நிறைய பேசட்டும். மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

    ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):-

    மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் குரலை ரஜினிகாந்த் எதிரொலித்து வருகிறார். பா.ஜ.க. அனுப்பிய தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் முகவர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.

    தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மனிதநேய ஜனநாயக கட்சி):-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் குற்றம் சாட்டி இருப்பதை கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறினர். #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.

    இதற்காக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    அவர் தனது சமூக ஊடக பதிவில், “ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவை வாழ்த்துகிறேன். தேவே கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். இது பிராந்திய முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று குறிப்பட்டு உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்பட்டது. கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. எடியூரப்பாவின் பதவி விலகல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். இப்போது இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பு முறையை பா.ஜனதா சீரழித்துவிட்டது. அதே முயற்சியை கர்நாடகாவிலும் கையாண்டது. முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பா.ஜனதாவின் திட்டம் நிறைவேறி இருந்தால் அடுத்து ஆந்திராவைத்தான் குறி வைத்திருப்பார்கள்” என்றும் சாடினார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், “கர்நாடகாவில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜனதா தோல்வியைத் தழுவி உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அதிகார வெறி இதில் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் இதிலிருந்து பா.ஜனதா எந்த பாடத்தையாவது கற்றுக் கொள்ளுமா?... ”என்று கூறி உள்ளார்.

    எடியூரப்பாவின் பதவி விலகல் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அக்கட்சிக்கு இப்போதுதான் சரிவு தொடங்கி இருக்கிறது. ஒருங்கிணைந்து நின்றால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் கர்நாடக அரசியல் பாடம் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #NawazSharif #TreasonCase # PakistaniCourt
    லாகூர்:

    பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி லாகூர் ஐகோர்ட்டில் வக்கீல் அப்தாப் விர்க் நேற்று மனுதாக்கல் செய்தார். அதில், “நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேச பாதுகாப்புக்கும், மாநில அமைப்புகளுக்கும் எதிரானது. எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. 
    ×