search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலபாரதி"

    பொதுமக்களிடம் கமி‌ஷன் கேட்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி வரும் பாலபாரதி மீது வழக்கு தொடருவேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    திண்டுக்கல்:

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல், பால கிருஷ்ணாபுரம் பகுதியில் தற்பொழுது ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இந்த மேம்பாலப் பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையினை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு, நான் கமி‌ஷன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்திற்காக கூறி வருகிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய். உண்மைக்கு புறம்பானது. கடந்த 2016 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் அப்போதைய சந்தை மதிப்பான, நகர்புறப் பகுதிக்கு 225 சதவீதமும் கிராமப்புறப் பகுதிக்கு 275 சதவீதமும் நில உரிமையாளருக்கு பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் சென்னை நில நிர்வாக ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இது வெளிப்படையான ஒன்று.

    அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கிக் கணக்கில் ரூ. 31 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்து வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017 ல் தமிழக அரசு தனது சந்தை வழிகாட்டி மதிப்பினை 33 சதவீதம் குறைத்து அறிவித்தது. அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் பாலப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளருக்கு கூடுதல் தொகையினை மாநில மேல் கூர்நோக்கு கமிட்டி முடிவு எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்திடம் மேல் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும் மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே நிர்ணயித்த தொகையினை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம்.


    மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில் நான் கமி‌ஷன் கேட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை தாமதப்படுத்தி வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்திற்காக கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களை திசைதிருப்புவதற்காக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் என் மீது கூறி வருகிறார். இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    ×