search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • ஐ.டி.ஐ. விடுதிகள் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 11-ம் செயல்பட்டு வருகிறது.
    • 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசால் தஞ்சை மாவடடத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்கள் விடுதி 26-ம், மாணவிகள் விடுதி 11-ம், கல்லூரி அல்லது பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகள் மாணவர்களுக்கு 7-ம், மாணவிகளுக்கு 11-ம் செயல்பட்டு வருகிறது.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத்தகுதி உடையவர்கள் ஆவர்.

    இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எந்தவித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது. மலை பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரதுஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம் மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதி உடைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் பள்ளி மாணவர்களும், அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கல்லூரி விடுதி மாணவர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்க தேவை இல்லை. விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன.
    • உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன. அதன்படி உடுமலை அரசு பள்ளி மாணவர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவர் விடுதி, தாயம்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி, குண்டடம் அரசு பள்ளி மாணவர் விடுதி, எலுகாம்வலசு அரசு பள்ளி மாணவர் விடுதி, சின்னக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர் விடுதி, திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி, பல்லடம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர் விடுதி, அவினாசி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகியவை மாணவர்களுக்காக உள்ளன.

    இதுபோல் திருப்பூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தாராபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவியர் விடுதி, முத்தூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, சின்னகாம்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவை மாணவிகளுக்காக உள்ளன.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 4 சீருடைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    பள்ளி விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதிச்சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
    • நோக்கு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு வைக்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எழிலாரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகேசன், சத்தியா, ஜோதிலட்சுமி தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஜெயம், அன்னமேரி ஜான்சிலின் வரவேற்றனர்.

    விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்காள் தயாநிதி, நிறைவாணி, உமா, யோகா, அஸியா, சிவசங்கரி, சுவேதா, எழிலாரசி, பத்மா, கயல்விழி, ஆனந்தி, பிரதீபா, ஹேமமாலினி, சுகந்தி, பிரியா, கலைச்செல்வி, பங்கேற்றனர்.

    திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் பிரகாஷ் மேனன், அனுப்பிரியா, பித்தௌஸ் பர்வின், தயாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித நுணுக்கங்களை விளை யாட்டின் மூலமாகவும், பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்றுக் கொடுத்தனர்.

    மாண வர்களின் உற்று நோக்குத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைஞர்கள் ஆர்த்தி, ஆஷா, ஹரிணி ஆகியோர் பொம்மலாட்ட கலையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி மீண்டும் மஞ்சப்பை எனும் கருத்தை அவர்களுக்கு கண் முன் நிறுத்தினார்கள்.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நிறைவாணி நன்றி கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
    • பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    கோவை:

    கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

    கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    • மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.

    • ஜூன் 9-ந்தேதி பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    • அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

    பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு 2023-24 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து ஜூன் முதல் தேதி பி.காம் ,பிபிஏ பிரிவுகளுக்கும் ,ஜூன் 8-ம் தேதி பி.எஸ்.சி.கணினி அறிவியல் பிரிவுக்கும், ஜூன் 9-ஆம் தேதி பிஏ தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பிய விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரும் பொழுது தங்களின் கல்வித் தகுதி குறித்த 10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் ,மாற்றுச் சான்றிதழின் அசல் மற்றும் நகல், இனச் சான்றிதழ், ஆதார் அட்டை மாணவர்களின் புகைப்படங்கள் இரண்டு, சிறப்பு ஒதுக்கீடு கோருப வர்கள் அதற்கான சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நடப்பு ஆண்டு மொத்தம் 3376 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

    இதில் கணினி அறிவியல் பிரிவு கோரி 753 விண்ணப்பங்களும், இளங்கலை தமிழ் படிக்க 751 விண்ணப்பங்களும், வணிக நிர்வாகவியல் (பிபிஏ) படிக்க 648 விண்ணப்ப ங்களும், வணிகவியல் (பிகாம்) படிக்க 585 பேரும், பி.ஏ.ஆங்கிலம்படிக்க 4 54 விண்ணப்பங்களும், சிறப்பு பிரிவினர் 185 பெரும் விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் உடன் இரண்டு புகைப்படங்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
    • துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
    • சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது.

    திருப்பூர்:

    அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில், முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மாவட்ட வாரியாக, முன்னாள் மாணவர் சங்கம் சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது. கோவை மண்டல அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள் தங்கள் பள்ளிகளில், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்த விதம் குறித்து, கருத்துக்களை பகிர்ந்ததோடு, இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், விரிவாக்குவதற்கான செயல் திட்டங்களையும் முன் வைத்தனர்.

    • நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட்டது.
    • கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் (2022-2023) பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ 10,000 ,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.7500,மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, பொருளியல் ,கணக்குப்பதிவியல் வரலாறு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 3000 மும் ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ஏ.வி.ஏ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தின சபாபதி , பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மோகன்குமார், ஆடிட்டர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
    • பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    திருப்பூர் :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லாத இடங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு கல்வி கற்பதற்கான வழி ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பின் இத்திட்டம் மாணவர்களுக்கு பயனில்லாத வகையில் பெயரளவில் மாறியுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிளஸ்- 2 வகுப்புக்கு வந்த பின்தான் சைக்கிள் வினியோகிக்கப்பட்டது.தொடர் கோரிக்கைக்கு பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும்போதே சைக்கிள் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.தற்போது சைக்கிள்கள் வினியோகிக்க தாமதமாவதோடு மேல்நிலை வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைகிறது. இதனால் எந்த பயனும் இல்லை என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :- மேல்நிலை வகுப்புகளுக்கு தடையாக இருப்பதில் முக்கியமானது போக்குவரத்து வசதிதான். அரசின் சார்பில் சைக்கிள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.இதுதவிர அவர்கள் சிறப்பு வகுப்புகள் செல்வதற்கும் தேர்வு நேரம் என பல்வேறு வழிகளில் சைக்கிள் பயணம் உதவுகிறது.ஆனால், அதையும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த பின் வழங்குவதில் எந்த பலனும் இல்லை.மாணவர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வர அறிவுறுத்தும் அரசு அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலையின் கீழ் அனைத்து எம்.பில்., பி.எச்டி., மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகள் மே 29, 31 மற்றும் ஜூன் 2-ந் தேதி நடைபெறவுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை மாணவர்களுக்கான தேர்வு மையம் பல்கலையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களை சேர்ந்த மாணவர்களுக்கு என்.ஜி.பி.,கல்லூரியில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×