search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது.
    • மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    புயல், மழை வெள்ளத்தில் சிக்கி தலைநகர் சென்னை தத்தளித்தது. இன்னும் முழு அளவில் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் 3 பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் சந்தித்து பெரும் துயரை அனுபவித்து உள்ளார்கள். வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பல கோடிகளை செலவிட்டு உள்ளதாக அரசு கூறினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக அரசை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடை பெறும் 3000 மழைக்கால மருத்துவ முகாமில் சென்னையில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.


    அப்போது அவரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான கட்டமைப்புகளை அரசு முறையாக செய்துள்ளது. இதில் நாங்கள் செய்தது தான் சரி. 20 செ.மீட்டர் மழையை தாங்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. ஆனால் ஒரே நாளில் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அது மட்டுமல்ல 4-ந்தேதி அடையாறு முகத்துவாரத்தை நேரில் பார்த்தேன். மழை தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை.

    மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    வெள்ளத்தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு எதிலும் கோட்டை விடவில்லை. எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்பட யாருடனும் நான் நேரில் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

    வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

    தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.

    சேலம்:

    மிச்சாங் புயலால் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சென்னைக்குள் செல்லும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பால், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் செல்ல தொடங்கி உள்ளன. இதனால் சேலத்தில் இருந்து சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட 60 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் தற்போது ஓட தொடங்கி உள்ளன. மேலும் 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் மேலும் பல பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .

    மேலும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி நிறுவனங்கள் இலவச வாகன சரிபார்ப்பு முகாம்கள் நடத்தி வாகனங்களை இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
    • புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.

    பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.


    பொன்னேரி அடுத்த சின்ன காவனம், பெரிய காவனம், உப்பளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர், மற்றும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு அவர்கள் மின்சாரம் வழங்க கோரி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பங்குகளில் பெட்ரோல் டீசல் இல்லாததால் பொன்னேரியில் இருந்து பாட்டில்களில் வாங்கப்படும் பெட்ரோலை சிலர் ஒரு லிட்டர் ரூ.140 -க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு மற்றும் அனுப்பப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 34 மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதானது. இதனால் 5 நாட்களாக கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பவில்லை. பழதடைந்த மின்மோட்டர்களை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சன்முகநாதன்,மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாகப் பொறியாளர் அமலதீபன், உதவிப் பொறியாளர்கள் சம்பத், தமிழ்மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் 784 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்திர் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புக்கு பிறகு மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முதல் சீரானது. ஆனாலும் ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதை மற்றும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 8 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. எண் 06061 தாம்பரம்-நாகர்கோவில், எண்.06044 தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.22652 பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல எண்.06062 நாகர்கோவில்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.06055 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் ஆகியவை நாளை (9-ந்தேதி) ரத்து செய்யப்பட்டு உள்ளது. எண்.06063 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை.
    • ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.


    சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் வெள்ள நீர் புகுந்தது. தரைக்கு அடியில் இருந்த டேங்கில் வெள்ள நீர் புகுந்து கலந்தது. மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை. ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.

    இந்த நிலையில் தண்ணீர் வடிந்த பிறகும் நிலையங்கள் செயல்படவில்லை. பெட்ரோல்-டீசலுடன் மழைநீர் கலந்ததால் அதனை தனியாக பிரித்த பிறகு தான் விற்பனை செய்ய வேண்டும். அந்த பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் கலந்த தண்ணீரை பிரிப்பது கடினம். ஆனால் டீசலுடன் கலந்த தண்ணீரை எளிதாக பிரித்து விடலாம். எனவே தண்ணீர் கலந்த எண்ணையை பிரித்து எடுத்த பிறகு தான் விற்பனை செய்ய முடியும் என்பதால் இன்னும் முழு அளவில் பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டது. நேற்று மாலையில் மின் வினியோகமும் சீரானது. வெள்ளம் புகுந்த வீடுகளில் மின் மோட்டார்கள் பழுதானது. நேற்று மின் மோட்டார்களை இயக்கியபோது ஓடவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சமையல், குளியல் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். சென்னையில் பல இடங்களில் மின் மோட்டார்கள் பழுதடைந்து மெக்கானிக் கடைகளுக்கு படையெடுத்தனர்.

    • மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பட்டரவாக்கம் பால்பண்ணையில் மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

    எனினும் அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் சப்ளை 6-வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கூடுவாஞ்சேரி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் மழை வெள்ளத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அருள்நகர், ஜெகதீஷ் நகர், 8-வது வார்டில் உள்ள காமாட்சி நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆதனூர், மாடம்பாக்கம், படப்பை, சோமங்கலம் செல்வதற்கான இந்த தரைப்பாலங்கள் உடைந்ததால் அந்தப் பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி வருவதற்கும் அதே போல் கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
    • மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

    புயல் மழை காரணமாக தாம்பரம் வரதராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலை, வெளிவட்டச் சாலையில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை ஆகியவற்றின் இடையேயான பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதில் ஏறி பலர் வெளியேறி தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் செல்கிறார்கள்.

    சி.டி.ஓ. காலனி, வசந்தம் நகர், ராயப்ப நகர், அஞ்சுகம் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் அந்த பகுதிகளுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் அந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.


    இதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் முழுமையாக வெளியேற இன்னும் சில நாட்கள் ஆகும். இதனால் அந்த பகுதியில் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் இன்னும் சில நாட்கள் படகு போக்குவரத்தும் நீடிக்க உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    தாம்பரம் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மழை ஓய்ந்த பிறகும் உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறோம். மின்சாரமும் இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் மருந்து மாத்திரை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏராளமான மக்கள் இன்னும் மொட்டை மாடிகளிலேயே உள்ளனர்.

    இங்குள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இந்த பகுதியில் இருந்து வெளியே செல்ல நினைப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.
    • மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் பாதிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமலேயே உள்ளது.

    குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்றும் முழுமையாக வடியாமல் இருக்கிறது. இதே போன்று சென்னை மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.

    புழல் விளாங்காடுப் பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாள்நகர், தர்காஸ், மல்லிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் மல்லிகா கார்டன் அருகே உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்புகளில் மார்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் கடந்த 5 நாட்களாக வடிந்தும் தற்போதுதான் முட்டளவுக்கு குறைந்துள்ளது.


    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஏற்படும் வெள்ளப் பாதிப்பை சரி செய்ய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோன்று செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கூளங்களும் தேங்க தொடங்கி உள்ளன. எனவே அவைகளை அப்புறப்படுத்தி மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    ×