search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலினம்"

    ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு ரூ.1 கோடி 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை 210 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 25 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி போன்ற எல்லைப் பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தாய்மார்கள் ஆர்வம் காட்டுவது இல்லை என்று தெரிகிறது.

    ஸ்கேன் மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து விடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் புதிதாக 1 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தேசித்து உள்ளோம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ., தாசில்தார் இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசிலன், தலைமை எழுத்தர் ரவி கலந்து கொண்டனர்.

    ×