search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • நவராத்திரி உற்சவம் வருகிற 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 26-ந் தேதி தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியில் தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. மேலும் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

    ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். அதன்படி இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, வைரபதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்கக்கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.

    • ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை அக்டோபர் 2-ந்தேதி நடக்கிறது.
    • 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான நாளை பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைகிறார்.

    இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறுகிறது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 1-ந் தேதி மற்றும் 8-ம் திருநாளான 3-ந் தேதி ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 2-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.

    விழாவின் 9-ம் நாளான 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடத்தப்படும்.. இந்த ஆண்டுக்கான பவித்ரஉற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக்கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ரஉற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்த பேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ரஉற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
    • 15-ம்தேதி ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

    உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் எதிரே உள்ள கருடமண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 12-ந்தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார்.
    • 14-ந்தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசித்தனர்.

    பூச்சாண்டிசேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 12-ந்தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார், உற்சவத்தின் 9-ம் நாளான 14-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
    • தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ெரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.

    மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

    இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர்.

    சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு பச்சைக்கொடி காட்டி விட்டதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.

    அமைச்சர் தேர்வு செய்துள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

    மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை யாத்திரி நிவாஸ் எதிர்ப்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டு ெரங்கநாதர் கோவில் அறநிலைய துறையிடம் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு இடம் தருவதாக அப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.

    அந்த அடிப்படையில் யாத்திரி நிவாசுக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தை கேட்போம். அதனை அவர்கள் தர ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தரை வாடகைக்கு கேட்டு சுற்றுலா பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். அதன் மூலம் கோவில் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

    ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதேபோன்று அடிமனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பானை உடையும் போது கீழே சிதறும் பால், தயிர், வெண்ணெயை பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர்.
    • உறியடி உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.

    உறியடி உற்சவத்தையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சி விகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மா மண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 7 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சி விகையில் மற்றும் கிருஷ்ணன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளினர்.

    உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலக்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணை நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியில் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.

    இந்த உறியடி உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பானை உடையும் போது கீழே சிதறும் பால், தயிர், வெண்ணையை ஆகியவற்றை பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நெய்வேத்தியம் நடைபெற்றது.
    • ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் 22-ந் தேதி நடைபெற்றது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 11-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் 22-ந் தேதியும் நடைபெற்றது.

    நேற்று கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் மற்றும் 20 வெள்ளிக்குடங்களில் கோவில் பணியாளர்கள் மூலமும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    பின்னர் புனிதநீர் மூலம் காலை 10 மணிக்கு சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நெய்வேத்தியம் மாலை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. சிங்கர்பெருமாள் கோவிலில் அழகிய சிங்கருக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பழுது நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு, எடை சரிபார்க்கப்பட்டது.

    நேற்று முழுவதும் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லிதாயார், சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    • இன்று தாயார் சன்னதியில் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இன்று மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி. இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 11-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் இருந்து ஒரு தங்ககுடம் மற்றும் 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.30 மணிக்கு தங்க குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் நேற்று முழுவதும் மூலவர் சேவை இல்லை.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    • ஸ்ரீரங்கம் அதிகாரிகள் வஸ்திர மரியாதைகளுடன் புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
    • ஸ்ரீரங்கம் அதிகாரிகள் வஸ்திர மரியாதைகளுடன் புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.

    மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1-ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று (15-ந் தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஒரு தட்டை யானை மீது வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.

    இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் நேற்று இரவு புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீரங்கம் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை.
    • ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணி அளவில் கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் ஒரு தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு காலை 9.15 மணிக்கு கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு காலை 9.30 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெற்றது.

    மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்புவிக்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.

    இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும்.
    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வருவர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்படும்.

    பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும். அங்கிருந்து தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்படும். பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

    மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்படும். அதன் பின் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு ஒப்புவிக்கப்படும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது.

    இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு இன்று மற்றும், நாளை மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×