search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள்"

    கொடைக்கானலில் கன மழையால் ஏரி உடைந்து 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். #Gajastorm

    கொடைக்கானல்:

    கொடைக்கானலை புரட்டிப்போட்ட கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேல்மலை கிராமங்களில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை.

    கடந்த 16-ந் தேதி சுழற்றி அடித்த சூறாவளி புயலின்போது கன மழை கொட்டி தீர்த்தது. இதில் பூண்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்மடை பள்ளம் ஏரிக்கரை நிரம்பியது. இதனால் கடந்த 2 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    நேற்று மேலும் மழை பெய்யத் தொடங்கியதால் ஏரியின் மதகுகள் உடைந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைகிழங்கு, பூண்டு, பீன்ஸ் ஆகிய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.


    ஏற்கனவே அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல லட்சம் நஷ்டம் ஆகியது. தற்போது மீதி இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஏரியில் இருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேறியதால் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 150 அடி நீளம், 30 அடி அகலம், 19 அடி உயரம் உடைய கீழ்மடை பள்ளம் ஏரியில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

    இதனால் தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் விவசாயிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஏரியின் கரையை கான்கிரீட் சுவரால் நிரந்தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Gajastorm

    ×