search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரப்பன்"

    25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வீரப்பன் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Veerappan

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த சில மாதங்களில் 1457 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த மனிதநேயமற்றப் போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    வீரப்பனின் மூத்த சகோதரரான 70 வயது மாதையன் கடந்த 1987ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலோ அல்லது அவர் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலோ மாதையனுக்கு எந்த தொடர்பும் இல்லை.

    மாதையன் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில், பொய்யாக புனையப்பட்ட கொலை வழக்கில் மட்டும் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 1997-ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அந்த வழக்கில் விசாரணைக் கைதியாகவும், தண்டனைக் கைதியாகவும் கடந்த 25 ஆண்டுகளாக அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் பலமுறை விடுதலை செய்யப்பட்டனர்.

    அதற்கான தகுதிகளின்படி பார்த்தால் மாதையன் பத்தாண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

    வழக்கமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டு சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அந்த வகையிலும் மாதையனை தமிழக அரசு விடுவிக்கவில்லை. இதை எதிர்த்து மாதையன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி மாதையனை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி தமிழகம் அரசுக்கு 16.12.2015-ந்தேதி ஆணையிட்டது.

    ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு மாதையனை விடுதலை செய்ய மறுத்து விட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாதையனை விடுவிக்க சிறை நிர்வாகத்தின் பரிந்துரை வாரியம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அதனால் தான் மாதையன் விடுதலை செய்யப்பட வில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.

    ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாதையனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

    எனினும், உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் தமிழக அரசு மதிக்கவில்லை. இதனால் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் மாதையன் தமது இருண்ட சிறை வாழ்வு எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

    70 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த இரு ஆண்டுகளில் பலமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவரது மகன் ஓராண்டுக்கு முன் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    அதன்பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனதளவிலும் அவர் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் விடுதலையும், சொந்த ஊர் வாசமும் மட்டுமே அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

    ஆனால், ஏனோ இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள தமிழக அரசு மறுக்கிறது. சிறைத் தண்டனை என்பது குற்றம் செய்தவர்களை திருத்துவதற்காகத் தான். மாதையனைப் பொறுத்த வரை அவர் எந்த குற்றமும் செய்யவில்லை.

    அதுமட்டுமின்றி, 70 வயதைக் கடந்து, உடல்நலக் குறைவால் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண் ணிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை, 25 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அப்படி என்ன இன்பம்? என்பது தான் தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 1775 கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்து 1457 பேரை விடுதலை செய்த அரசு, மீதமுள்ளோரையும் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யவுள்ளது. அவர்களுடன் சேர்த்து மாதையனையும் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது? என்பது தான் புரியவில்லை.

    மாதையனின் வயது மற்றும் உடல்நிலையையும், அவர் செய்யாத குற்றத்துக்காக ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார் என்பதையும் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும். மாதையனைப் போலவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்தோரையும், வயது முதிர்ந்தவர்களையும் விடுதலை செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Veerappan

    கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan
    கோபி:

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

    108 நாட்கள் பிணைக்கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான்.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.



    இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த வழக்கு கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் 47 பேர் சாட்சி அளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan

    வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    பெங்களூரு:

    மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்றான்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் இருந்தபோது வீரப்பன் அவரை கடத்தினான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    108 நாட்கள் வீரப்பனின் பிடியில் இருந்த ராஜ்குமார் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் மீட்கப்பட்டார்.

    நக்கீரன் கோபால் இடைத் தரகராக இருந்த பேச்சு வார்தைகள் மேற்கொள்ள இறுதியாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தனர்.

    அப்போது கர்காடகாவில் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழ்நாட்டில் கருணாநிதியும் முதல்-அமைச்சராக இருந்து வந்தனர். ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவர் மீட்கப்பட்டபோது நடந்த பேச்சுவார்தைகள் அதில் எடுக்கப்பட்ட உடன்பாடுகள் போன்றவை பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியே வரவில்லை.பணம் கைமாறியதா? என்ற விவரமும் தெரியவில்லை.

    ஒருசில தகவல்கள் மட்டும் தான் வெளிவந்துள்ளன. இன்னும் பல ரகசியங்கள் அம்பலமாக வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளிவர உள்ளது.

    அதில், ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக விரிவான விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் இது சம்பந்தமாக பேசியது, நக்கீரன் கோபாலை தூதுவராக அனுப்பியது, வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், வீரப்பனுடன் எஸ்.எம். கிருஷ்ணாவே நேரடியாக பேசியது, பின்னர் மீட்பு குழுவினர் சென்று மீட்டு வந்தது போன்றவற்றில் நடந்த பல்வேறு ரகசியங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த புத்தகம் வெளிவந்தால் ராஜ்குமார் கடத்தலின் பின்னணி அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், எஸ்.எம். கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரசில் அவரது பணிகள், பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டது, பாரதீய ஜனதாவில் சேர்ந்தது போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

    எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக அரசியலில் 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ., மாநில மேல்சபை உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர், துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

    இவர் பல்வேறு அரசியல் ரகசியங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் நேற்று ஓய்வுபெற்றார். #Veerappan #Vijayakumar
    புதுடெல்லி:

    சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்-அமைச்சரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆனார்.

    அவர் போலீஸ் கமிஷனராக இருந்தபோது சென்னையில் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீஸ் கமிஷனராக இருந்த நிலையில் 2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண் டோ படையின் தலைவர் ஆனார். 2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

    2012-ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

    6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். #Veerappan #Vijayakumar #Tamilnews 
    ×