search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 153498"

    • ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை
    • சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என மத்திய அரசுக்கு கேள்வி

    சென்னை:

    விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது பேசிய நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பகுதியின்கீழ் கொண்டு வரப்பட்டன? என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

    • லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது.
    • செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்

    கோவை:

    நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது.

    நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனி மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச் சிறப்புமிக்க ஒரு கொண்டாட்டமாகும். ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது.

    அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் தேவியின் உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின் முன் மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல், லிங்க பைரவி தேவி செப்.29 முதல் அக்.1 வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக மஞ்சள் அபிஷேகத்திலும், அக்.2 முதல் 4 வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும் காட்சியளிப்பார். மேலும், செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்.

    இதுதவிர, இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி நடைபெறும். முதல் நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 'த்ரிநயணி' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் ஈஷா சார்பில அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 
    • ஈஷா அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் க்கு வைஸ் ஊடகத்தினரிடம் இருந்து முறையான பதில் ஏதும் வரவில்லை

    அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன் மூத்த நிருபர் பல்லவி பண்டிர், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய ஆன்லைன் செய்தி கட்டுரையின் URL-ஐ, அடுத்த உத்தரவு வரும் வரை முடக்கி வைக்குமாறு கடந்த செவ்வாயன்று, விஜயவாடா 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை வருகின்ற 23 செப்டம்பர், 2022 அன்று நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட, பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்டதாக, VICE ஊடக குழுவிற்கும் அதன் மூத்த நிருபருக்கும் எதிராக ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா அவுட்ரீச் செப்டம்பர் 1 அன்று அவதூறு வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஜூன் 23 தேதியிட்ட செய்தி, தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளால் நிறைந்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை வாதிட்டது. உண்மையை அணுகுவதற்கான நேர்மையான முயற்சி எதுவும் இல்லை. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் ஆர்.டி.ஐ.களின் அதிகாரபூர்வ பதில்கள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொதுத்தளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறையின் ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஈஷா அறக்கட்டளை வழங்கியது.

    பல்லவி பண்டிர் மற்றும் வைஸ் மீடியா எல்.எல்.சி.க்கு ஈஷா சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட கட்டுரையை முழுவதுமாக திரும்பப் பெறவும், இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும், அப்பட்டமான தவறான தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தவும் மற்றும் தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 

    ஈஷா அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் க்கு வைஸ் (VICE) ஊடகத்தினரிடம் இருந்து முறையான பதில் ஏதும் வராததால், பத்திரிகை என்ற பெயரில் செய்தியாளர் மற்றும் வைஸ் மீடியா குழு பத்திரிகை நெறிமுறைகளை தவறியதையும் தவறான தகவல்கள் அளிப்பதையும் அதன் வாசகர்களுக்கு அம்பலப்படுத்த, நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஈஷா அறக்கட்டளை கூறி உள்ளது.

    • இயற்கை நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் எடுக்கும் முறைகள் குறித்து வல்லுனர்கள் விவாதிக்க உள்ளனர்.
    • கால்நடை இல்லாதவர்களும் இயற்கை முறையில் நெல் சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

    ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    நமது வாழ்வில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் முக்கிய உணவு பொருளான அரிசியானது வெறும் உணவுப் பொருளாக மட்டுமே அல்லாது நமது கலாச்சாரம் மற்றும் ஒவ்வொரு பாரம்பரிய நிகழ்வுகளிலும் நம்முடன் தொடர்ந்து பயணித்து வருகிறது. ஆனால் அதைப் பயிரிடும் நெல் விவசாயிகளின் இன்னல்கள் மட்டும் இன்றும் தீர்ந்தபாடில்லை. இதைக் களையும் விதமாக நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஈஷா சார்பில் வேளாண் வல்லுனர்களின் கருத்தரங்கமும் கண்காட்சியும் திருச்சியில் நடைபெற உள்ளது. முக்கியமாக இயற்கை நெல் விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களில் நல்ல மகசூல் எடுக்கும் முறைகளும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகளையும் இந்நிகழ்வில் வல்லுனர்கள் விவாதிக்க உள்ளனர்.

    பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் அவர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார். திரு. பூச்சி செல்வம் அவர்கள் நெல் பயிரில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். திரு. கோ. சித்தர் அவர்கள் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து திரு. ஆலங்குடி பெருமாள் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.

    இது தவிர இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், நெல்லுக்கு உகந்த இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் செலவில்லா பயிர் மேலாண்மை, இதுமட்டுமின்றி கால்நடை இல்லாதவர்களும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். அத்துடன், இந்நிகழ்வில் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.

    இந்த ஒரு நாள் நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரவீன்குமார் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

    • இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது
    • புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா யோகா மையம் நம்பிக்கை

    கோயம்புத்தூர்:

    கோவை ஈஷா யோகா மையம், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.2.5 கோடிக்கு பதிலாக, ரூ.44 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பாய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தீர்ப்பாயத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 2018 - ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ 2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில் இந்த கட்டண விதிப்பு தவறானது என பி.எஸ்.என்.எல்லிடம் ஈஷா முறையிட்டது. இதற்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையத்தின் மாதந்திர தொலைபேசி கட்டணம் வெறும் ரூ.22,000-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.

    ஆனால், மேற்குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல் அச்சுறுத்தியதால், ஈஷா யோகா மையம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி. பத்மநாபன் அவர்களை தனி நபர் ஆர்பிட்ரேட்டராக நியமித்து இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    விசாரணையின் முடிவில் பி.எஸ்.என்.எல்லின் வாதத்தை ஏற்க மறுத்த ஆர்பிட்ரேட்டர் பத்மநாதன், டிசம்பர் 2018 - ஜனவரி 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல் மேல்முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

    • ஈஷாவின் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சிறப்புரை
    • மனிதர்களை வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர முடியாது என்றார் சத்குரு

    கோவை:

    ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், "ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென்று நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும். இதற்கு மேற்கு இந்திய கிரிக்கெட் அணியையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் உதாரணமாக சொல்லலாம். ஆஸ்திரிலேயாவில் கிரிக்கெட்டிற்கென்று அகாடமி உள்ளது. அவர்கள் வீரர்களின் திறமைகளை நன்கு ஊக்குவிக்கிறார்கள். இன்றும் கூட அந்நாட்டில் ஒருவருக்கு 38 வயது ஆகியிருந்தாலும் அவரிடம் திறமை இருந்தால், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முடியும். அவர்கள் வயதை ஒரு தடையாக பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து நிலையான வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளார்கள்.

    இதேபோல், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஒருவர் தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோலியை கூறலாம். உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அவரை போன்றவர்கள் மீண்டும் வெற்றியின் உச்சத்தை தொடுவதற்கு நீண்ட கயிறை(வாய்ப்பினை) வழங்க வேண்டும். நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு அளவுகோலை பின்பற்ற கூடாது" என்றார்.


    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்குருவின் அறிமுக வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. அதில் சத்குரு கூறுகையில், "மனிதர்களை ஒரு வளமாக பார்க்க கூடாது. மனிதர்களை ஒரு சாத்தியமாக பார்க்க வேண்டும். சாத்தியத்திற்கும் எதார்த்ததிற்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். நாம் அந்த சாத்தியத்தை வெளிகொணர்கிறோமா இல்லையா என்பதை பொறுத்தே மனிதர்களின் வளர்ச்சி இருக்கும்.

    மனிதர்கள் ஒரு விதையை போன்றவர்கள். வளமான மண்ணை கண்டறியும் போது தான் அந்த விதை அதன் சாத்தியத்தை உணரும். சரியான வளமான மண்ணில் விதைக்கப்படும் ஒரு விதையால் இந்தப் பூமி முழுவதையும் பசுமை ஆக்க முடியும். எனவே, மனிதர்களை நீங்கள் சாத்தியமாக பார்க்காமல் வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை உங்களால் வெளிகொணர முடியாது" என்றார்.

    முதல் நாள் நிகழ்ச்சியில் ஓரியண்டல் ஹோட்டலின் இயக்குநர் நினா சட்ரத், டிரெண்ட் லிமிட்டெட் (Trent Limite) நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ரஸ்தோகி,  'ட்ரூநார்த் கன்சல்டிங்' நிறுவனர் ருச்சிரா சவுத்ரி உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

    ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் எச்.எல்.இ. க்லாஸ்கோட் நிறுவனத்தின் அதிகாரி அமித் கல்ரா, ஆல் கார்கோ நிறுவனத்தின் துணை தலைவர் வி.எஸ். பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

    • இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன
    • காவேரி கூக்குரல் இயக்க களப் பணியாளர்கள் விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

    சென்னை:

    காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூலை 22) கூறியதாவது:

    2019-ம் ஆண்டு சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் தொடர் விழிப்புணர்வு பயணங்கள் மற்றும் இவ்வியக்கத்தின் களப் பணியாளர்களின் முயற்சியால் விவசாய நிலங்களில் மரம் வளர்க்கும் ஆர்வம் விவசாயிகளிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, மரக்கன்றுகள் விநியோகமும் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

    அதன்படி, நடப்பு நிதியாண்டில் (2022- 2023) தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகளை விநியோகப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இருக்கும் 30 நர்சரிகளுடன் சேர்த்து கூடுதலாக 12 புதிய நர்சரிகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும், குறைந்த நீரில் அதிக விளைச்சல் எடுப்பதற்கும் மரங்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. தொடர் கனமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது பயிர்களின் சேதத்தை குறைப்பதிலும் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதுபோன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டுகளுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல் இயக்கம் பிரபலப்படுத்தி வருகிறது.

    வழக்கமான பயிர்களுடன் சேர்த்து வரப்போரங்களில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது நிலம் முழுவதும் என பல்வேறு வழிகளில் மரங்கள் வளர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு போன்ற டிம்பர் மரங்களை வளர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் தொகை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயாக கிடைக்கும்.

    இதற்காக காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். மேலும், அவர்களின் நிலங்களுக்கு நேரில் சென்று மண்ணின் தன்மை மற்றும் நீரின் தரத்தை பரிசோதித்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, மரம் சார்ந்த விவசாய முறைகளை விவசாயிகள் நேரடியாக பார்த்து கற்றுக்கொள்ளும் விதமாக முன்னோடி விவசாயிகள் தோட்டங்களில் நேரடி களப் பயிற்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஜூலை 24-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னோடி விவசாயி தெய்வசிகாமணியின் தோட்டத்தில் பிரம்மாண்ட களப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 9442590079, 9442590081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கல்பட்டு விவசாயி சுரேஷ் குமார், திருவள்ளூர் விவசாயி ஜெயச்சந்திரன் ராணிப்பேட்டை விவசாயி உமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • முக கவசங்களை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் அமைச்சர் பிரித்து வழங்கினார்.
    • மருத்துவமனைகளுக்கு வருகை தருவோர் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    சென்னை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது.

    சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார்.



    இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "4 லட்சம் கே.என். 95 முக கவசங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு ஈஷா அமைப்பினர் வழங்கி உள்ளார்கள். அந்த முக கவசங்கள் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட சுகாதார துறை இயக்குநர்களிடம் தலா 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆயிரம் முக கவசங்கள் பொது சுகாதார துறைக்கு வழங்கப்பட உள்ளது. இவை வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

    இதற்கு முன்பு, ஈஷா சார்பில் கொரோனா முதல் அலையின் போதும் இதேபோல் முக கவசங்களும், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆதியோகி சிலை பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
    • கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டு விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர். இவர்கள் இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12 :45க்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை விமானப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இதுவரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது" என்றார் வெள்ளாச்சியம்மா. மடக்காடு கிராமத்தை சேர்ந்த இவர், ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்கிறார்.



    2017ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி  மக்கள், ஈஷா அவுட்ரீச் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர். இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

    "என் மனைவிக்கு எப்போதும் விமானத்தில பறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனால திருப்பதிக்குப் போக நாங்க தயார் பண்ணிட்டு இருந்தோம், அப்பதான் ஈஷா அவுட்ரீச்ச்லிருந்து ஒரு சுவாமி சென்னைக்கு போறத பத்தி சொன்னாங்க. நான் தினமும் அதப்பத்தி கேட்டுட்டே இருப்பேன். என் மனைவி ஆசை நிறைவேறிடிச்சுனு, எனக்கு சந்தோஷமா இருக்கு" என்கிறார் மடக்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி.

    முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.

    "இது வெறும் ஆரம்பம் தான்.  ஆதியோகிக்கு வருகின்ற மக்கள் கூட்டம் அதிகமாகும். அதனால் அடுத்த வருஷம் இன்னும் 100 பேர் விமானத்தில போவோம். இது எங்க எல்லாருடைய ஆசை" என்கிறார் முள்ளாங்காட்டை சேர்ந்த சூரியகுமார்.

    • ஈஷாவில் உள்ள தியானலிங்கம் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • நாத ஆராதனை எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது.

    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

    தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் 'அம் நமசிவாய' மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து 'புத்த மத உச்சாடனைகளை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அர்ப்பணித்தனர்.

    இதேபோல், அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன.

    அத்துடன் ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடாகம்','குரு பாதுக ஸ்தோத்ரம்' ஆகிய 2 சக்திவாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன. தேவார பாடல்கள் பாடப்பட்டன.

    இந்த உச்சாடனைகளில் ஈஷா ஆசிரமத்தில் வசிப்பவர்கள் பங்கேற்றனர். மாலை 6.10 மணிக்கு 'நாத ஆராதனை' எனும் இசை அர்ப்பணிப்புடன் மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது.

    ஒவ்வொரு வருடமும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றதைப்போலவே இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இது தான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சியை ஈஷா கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது.
    • விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம்.

    புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள வடகாடு கிராமத்தில் 'சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே' என்ற கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்றனர்.

    மிளகு சாகுபடி மலை பகுதியில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாத்தியம் என்பதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவை சேர்ந்த பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர்.

    முக்கியமாக பல வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வெற்றிகரமாக மிளகு உற்பத்தி செய்து வரும் பால்சாமி, ராஜாகண்ணு, பாக்கியராஜ், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராம சிவக்குமார் மற்றும் கூடுதல் இயக்குனர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




    காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீ முகா அனைத்து முன்னோடி விவசாயிகளையும் அதிகாரிகளையும் வரவேற்றார்.

    காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாள தமிழ்மாறன் மரம் சார்ந்த விவசாயத்தினால் விவசாயிகளில் பொருளாதாரம் மேம்படுதல், மண் மற்றும் நீர் வளம் மேம்படுதல் குறித்து விளக்கினார்.

    சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சியை ஈஷா கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது. இதுவரை இப்பயிற்சியில் தமிழகம் முழுவதுமுள்ள 5,000 க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்றுள்ளனர். அவ் விவசாயிகள் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் வருடா வருடம் வருமானம் பெற இயலும். மிளகு நட்டு 3முதல் 4 ஆண்டுகளில் மிளகு காய்க்கத் துவங்கும். 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகுகொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய இயலும்.

    ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டி நாளைத் தொடங்குகிறது.
    சென்னை:

    2018-ம் ஆண்டுக்கான 14-வது ஈஷா கிரா மோத்ஸவ விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்ட கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டிகள் நிறவடைந்துள்ளன.

    இந்த நிலையில், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தும் கபடி போட்டிகள் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிகள் மாவட்டம், மண்டலம், மாநிலம் என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களிலும் நடைபெறும்.

    இதையடுத்து, கோவை, வேலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்படும். மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் டிசம்பர் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த கபடி போட்டியில் 2,250 கிராமப்புற அணிகளும், 27 ஆயிரம் வீரர்-வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

    ஆண்களுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 2 லட்சம், ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

    இதேபோல், பெண்களுக்கான போட்டியில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

    இதுதவிர, மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
    ×