search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
    • ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேல் இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளது. இதில் நலிவடைந்த கோவில்கள் பல உள்ளது. கோவில்கள் பணம் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணம். இது போன்று பிரிப்பது வியாபார நோக்கமாக மாறிவிடும்.

    தூத்துக்குடி மாவட்டம் நானல்காடு பகுதியில் உள்ள திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த கோவில் ஆபத்தான நிலை இருப்பதால் கோவில் மூடப்பட்டுள்ளது. அது பாண்டியர் காலத்து கோவில். உடனடியாக சிதலமடைந்த கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    கோவில் பூஜைக்கு வயதான அர்ச்சகர்களை நியமித்துள்ளனர். அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

    கோவில்களை வரலாற்று பொக்கிஷங்களாக பார்க்க வேண்டும். கோவில்கள் தமிழ் பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் உடனடியாக அதனை காப்பாற்ற வேண்டும். ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது. உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்ட அளவீடுகளில் கட்டப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக சொல்லி வருகின்றனர்.

    தமிழகத்தை ஆளுகின்றவர்களும், முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்களும் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



    இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
    பக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் 20 லட்சம் இந்துக் கோவில்களும், 3 லட்சம் மசூதிகளும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

    இவற்றின் சொத்துக்களை பராமரித்தல், பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள், சுகாதார வசதிகள், கணக்கு வழக்கு பராமரிப்பு போன்றவற்றில் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமலேயே இருக்கின்றன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோவில், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்களை தவிர, மற்ற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரினாலினி பத்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் மட்டுமல்லாமல் வழிபட விரும்பும் அனைவரையும் அனுமதிப்பதற்கு ஆலய நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இது சம்பந்தமாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேசி உரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

    மேலும் நாட்டின் அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலய நடைமுறைகள் குறித்து தன்னிச்சையாகவே நீதிபதிகள் தங்கள் கவனத்துக்கு எடுத்து கொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.

    அதில், கோவில், மசூதி, தேவாலயங்களில் ஏதேனும் சர்ச்சைகள் தொடர்பாக மாவட்ட கோர்ட்டுக்கு மனு வந்தால் மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று கோவில், மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    அங்கு வரவு- செலவு, சுகாதார வசதி, பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் போன்றவைகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    ஐகோர்ட்டு அதை ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்புகளை கூற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இது சம்பந்தமாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இந்திய கோர்ட்டுகளில் சுமார் 3 கோடியே 10 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டுகளில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது கோவில், மசூதி, தேவாலயங்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும் என்று கூறினார். #SupremeCourt
    சிலைகள் குறித்து பேசிய ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கருத்து வருத்தமளிக்கிறது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். #hraja #gst #tamilnadustatue

    நெல்லை:

    நெல்லையில் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இதை அமல்படுத்தும் முன்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று கூறி தான் ஜி.எஸ்.டி.யை அமுல்படுத்தினோம். ஆனால் இப்போது தமிழக அரசுக்கு மறைமுகமாக 6 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் தங்களது நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியுள்ளது வருத்த மளிக்கிறது. சிலைகள் மட்டுமல்ல அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களே மாயமாகியுள்ளன.

    அறநிலையத்துறைக்கு 38 ஆயிரத்து 635 கோவில்களும், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருந்தன. தற்போது 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. மதுரை உயர்நிதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களின் சொத்துகளை மீட்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தி இந்து ஆலய மீட்பு குழு சார்பாக இம்மாத இறுதியில் சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    அடுத்த 3 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சரியான பாதையில் கொண்டு செல்கிறார். 

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #gst #tamilnadustatue

    மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவில் ஆகும்.
    மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பழமையான கோவில் மட்டுமல்ல... பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவிலும் கூட.

    பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சூர் சோ காங் என்ற மன்னரின் நினைவாக இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் கரிசனம் காட்டியவர். அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    இப்படி பாம்புகளுடன் அதிகமாக பொழுதைக் கழித்த காங் மன்னர், 65 வயதில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை புத்த துறவி ஒருவர் கட்டி முடித்திருக்கிறார். மன்னரின் நினைவாக கட்டப்பட்டதால், நன்கொடை பலவழிகளில் இருந்தும் வந்திருக்கிறது. முதலில் காங் கோட்டையாக கட்டப்பட்ட இந்த இடம், பாம்புகளின் படையெடுப்பால் பாம்புக் கோவிலாக மாறிவிட்டது. அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.



    பாம்பு நீச்சல் குளம் :

    கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு பிரமாண்ட மண்டபம் இருக்கிறது. அதில் அமர்ந்தபடி தான் வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வழிபடுகையில் அவர்களை நோக்கி பாம்புகள் ஊர்ந்து வருகிறது. அப்படி நிகழ்ந்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிகழ்வு எல்லா சமயங்களிலும் நிகழ்வதில்லை.

    ஒருசில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டவுடன் கோவிலுக்கு பின்புறத்தில் இருக்கும் பாம்பு குளத்திற்கு பக்தர்கள் செல்கிறார்கள். அதில் கொடிய விஷமுள்ள பாம்புகள் வாலை சுருட்டியபடி படுத்திருக்கின்றன. உலகில் இருக்கும் அதிபயங்கரமான விஷப்பாம்புகளை, இந்த நீச்சல் குளத்தில் பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் விஷம் நீக்கப்பட்ட பாம்புகள்.

    ஆம்! 1950-ம் ஆண்டு வரை இந்தக் கோவிலில் விஷப்பாம்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது விஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இருக்கின்றன. இருப்பினும் பாம்பு கடித்து பக்தர்கள் இறந்த செய்தி பழைய வரலாற்றிலும் இல்லை. ஏன்.. இப்போதும் கூட பாம்புகள், பக்தர்களைப் பார்த்து கோபத்துடன் சீறியதாகவும் செய்தி இல்லை. அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.



    புகை சூழ்ந்த கோவில் :

    நீச்சல் குளம், மரக்கிளை என கோவில் முழுக்க பாம்புகள் படர்ந்திருந்தாலும், அவை தூங்குவதற்காக பிரத்யேக ஸ்டாண்ட் அமைப்புகளை கோவில் நிர்வாகம் அமைத்திருக்கிறது. இரும்பு கம்பிகளை சுருள் வடிவில் வளைத்து, பாம்பு தூங்கும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் பாம்புகளின் எண்ணிக்கை, இரவில் குறைந்து விடுகிறதாம். அதற்கான மர்மம் என்ன என்பது இதுவரை விளங்காமல் இருக்க, பினாங்கு கோவிலை மேலும் மர்மமாக்குகிறது.. ஊதுபத்தி புகை மண்டபங்கள்.

    கோவிலை பாம்புகள் நிறைத்திருப்பது போல, புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. புத்தமத வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி கலா சாரம், பினாங்கு கோவிலிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் பாம்புகளுக்கு இணையாக புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. எந்நேரமும் கோவில் புகைமூட்டமாக இருப்பதால், பினாங்கு கோவிலை... 'பினாங்கு வானம்' என்றும் அழைக்கிறார்கள். இதுதவிர 'அசூர் மேகம் நிரம்பிய கோவில்' என்றும் சிறப்பிக்கிறார்கள்.

    பாம்புகள் பக்தர்களை கடிக்காமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், ஊதுபத்தி புகைகளை பயன்படுத்துவதாகவும், புகையினால் பாம்புகள் மயங்கி கிடப்பதாகவும் ஒருசிலர் புகார் தெரிவித்தாலும், பாம்பு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கிறது. காங் மன்னரின் பிறந்த நாள் தான், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் விஷப் பாம்புகளும் குவிவதுதான் ஆச்சரியம்.

    என்ன தான் பாம்புக் கோவிலாக இருந்தாலும், பாம்புகளை கையில் தூக்கவோ, தொடவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏனெனில் பாம்புகளை பாதுகாக்கவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏராளமான சட்டத்திட்டங்களை கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
    ×