search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி"

    • திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கையில் பட்டா கத்தியுடன் சுற்றினார். திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதற்கிடையே கஞ்சா வாலிபர் கையில் பட்டாகத்தியை வீசியபடி அங்குள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி தனது குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அந்த கஞ்சா வாலிபரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கம் பூட்டி சிறைவைத்தார்.

    இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட கஞ்சா போதை வாலிபரை மீட்டு, அவரிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

    நிற்க கூட முடியாத அளவுக்கு அவர் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினர். விசாரணையில் அவர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கத்தி பட கதை விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறும்பட இயக்குநர் ராஜசேகர், சர்கார் படத்துக்கு தடை கேட்டுள்ளார். #KaththiStory #ARMurugadoss #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் தன்னுடைய கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தாரர்.

    புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க நிர்வாகி டைரக்டர் பாக்யராஜும் அதனை உறுதி செய்ததால் வழக்கு ஐகோர்ட்டுக்கு சென்றது. கதைக்கருவை வருண் முதலில் பதிவு செய்திருந்ததை முருகதாஸ் ஒப்புக்கொள்ளவே வழக்கில் சமரசம் ஏற்பட்டு முடித்துக் கொண்டனர்.

    சர்கார் பட பிரச்சினை தீர்ந்தாலும், கத்தி பட சர்ச்சை முருகதாசை தொடர்கிறது. குறும்பட டைரக்டர் ராஜசேகர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் டைரக்டர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உதவி டைரக்டர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார்.



    அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படத்தை முருகதாஸ் எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை.

    பிறகு எனது வக்கீல் மூலம் முருகதாஸ், விஜய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. லைகா நிறுவன தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது.

    ஆனால் முருகதாசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன்.

    எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார்.



    எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

    தனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் இன்று காலை 10 மணி முதல் 5 வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

    கத்தி வெளியான சமயத்தில் டைரக்டர் மீஞ்சூர் கோபியும் இதே புகாரை கூறினார். அந்த வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. #KaththiStory #ARMurugadoss #Vijay #Rajasekar #HungerStrike

    பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார்.

    பெரம்பூர்:

    செம்பியத்தில் போலீஸ் காரராக பணிபுரிபவர் சிவலிங்கம். இவர் ‘பாஸ் போர்ட்’ விசாரணைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் கையில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி சென்றனர்.

    அவர்களை போலீஸ்காரர் சிவலிங்கம் மடக்கினார். ஆனால் அவர்கள் நிற்காமல் அவரது கை விரலில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதனால் ரத்த காயம் அடைந்த அவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே அவர்கள் அந்த வழியாக வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்திய போது அவர்களது பெயர் அஜித் (20), பரத் (19) என தெரியவந்தது. வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆவர்.

    இவர்கள் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தது ஏன் என தெரியவில்லை. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட இருவரும் வந்தனரா? அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி திரிந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையைச்சேர்ந்த ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    2 ரவுடிகள் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னசேகர் என்பவரது மகன் பாம்பு என்ற நாகராஜ்(30). பிரபல ரவுடியான இவர் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்தகரையைச்சேர்ந்த பிரபல ரவுடி பல்லி என்ற ரோகனின் கூட்டாளியான சூளைமேட்டை சேர்ந்த குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி ரோகன் தனது எதிரியான நாகராஜை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த நாகராஜூம், ரோகனை கொல்ல சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தார்.

    இதற்கிடையே ரோகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மூடூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் பொன்ராஜின்(32) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது நாகராஜூக்கு தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களாக பொன்ராஜ் தனது மனைவியுடன் திண்டிவனத்தில் வசித்து வந்தார். இதனால் ரவுடி ரோகன் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக திண்டிவனத்துக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இந்த விஷயத்தை நாகராஜூக்கு பொன்ராஜ் தெரிவித்தார். இதனால் ரோகனை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் நாகராஜ் ஸ்ரீபெரும்புதூரில் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவில் திண்டிவனத்திற்கு வந்தார்.

    அங்கு தனது கூட்டாளி பொன்ராஜ் உதவியுடன் ரோகனை கொலை செய்யும் திட்டத்துடன் திண்டிவனம் வ.ஊ.சி. திடல் அருகில் பதுங்கி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பையை(பேக்) சோதனையிட்ட போது, அந்த பையினுள் அரிவாள், கத்தி, மிளகாய்பொடி பாக்கெட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்.

    ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார். முன்கூட்டியே ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×