search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • நாளை விநாயகருக்கு நைவேத்தியமாக இந்த கொழுக்கட்டையை படைக்கலாம்.
    • இந்த கொழுக்கட்டை சத்தானது மற்றும் ஆரோக்கியமானது.

    தேவையான பொருட்கள்:

    மேல் மாவுக்கு:

    கொழுக்கட்டை மாவு - 1 கப்

    உப்பு - சிறிதளவு

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    பூரணத்திற்கு:

    வாழைப்பழம் - 4

    தேங்காய் துருவல் - 1 கப்

    கண்டன்ஸ்டு மில்க் - ¾ கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வாழைப் பழத்தை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்து ஆறியதும் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து வேக வைக்க வேண்டும்.

    பூரணம் தயாரிப்பதற்கு, ஒரு வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய தேங்காயைப் போட்டு 7 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

    பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியின் சூட்டிலேயே வேக வைத்த வாழைப்பழம், கண்டன்ஸ்டு மில்க், நெய், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பூரணத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    இப்போது, மேல் மாவை எடுத்து, அதைச் சிறிய கிண்ணம் போல செய்ய வேண்டும். அதற்கு நடுவில் தயார் செய்து வைத்த பூரணத்தை சிறிது வைத்து, ஓரங்களை மடித்து விட வேண்டும்.

    இவ்வாறு விரும்பிய வடிவில் கொழுக்கட்டை தயார் செய்து மிதமான தீயில், ஆவியில் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.

    • நாளை விநாயகருக்கு நைவேத்தியத்திற்கு இந்த மோதகத்தை படைக்கலாம்.
    • இன்று இந்த மோதகம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - ¼ கப்

    ரவை - ¼ கப்

    எண்ணெய் - 1 டீஸ்பூன் (மாவு பிசைவதற்கு)

    உப்பு - சிறிதளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    பால்கோவா - 1 கப் (இனிப்பு சேர்த்தது)

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். பிசைந்த மாவின் மீது சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

    பின்பு மீண்டும் ஒருமுறை மாவைப் பிசைய வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும்.

    அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார்செய்து வைத்திருக்கும் மோதகங்களைப் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இந்த மோதகம், ஒரு வாரம் வரை மொறு, மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • இந்த விநாயகர் சதுர்த்தியை சத்தான நைவேத்தியம் செய்து கொண்டாடுங்கள்.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    கம்பு - ஒரு கப்,

    தினை - ஒரு கப்,

    கேழ்வரகு - ஒரு கப்,

    ஏலக்காய் - 4,

    கருப்பட்டி - 3 கப்,

    தேங்காய்த் துருவல் - 1 1/2கப்

    செய்முறை

    கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

    தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்க வேண்டும்.

    அவற்றை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    மேல் மாவிற்கு...

    கேழ்வரகு மாவு - 250 கிராம்,

    தண்ணீர் - 1/2 லிட்டர்,

    எண்ணெய் - 50 மி.லி.,

    உப்பு - 20 கிராம்.

    பூரணத்திற்கு...

    எள் - 100 கிராம் (பொடிக்கவும்),

    கருப்பட்டி - 200 கிராம்,

    முழு தேங்காய் - 2 (துருவியது),

    நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).

    செய்முறை

    மாவிற்கு...

    மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பூரணத்திற்கு...

    அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.

    இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.

    • பாசிப்பருப்பு அல்வா வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • திடீரென உறவினர்கள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்,

    தண்ணீர் - 2 கப்,

    பால் - 1 கப்,

    சர்க்கரை - 11/2 கப்,

    வறுத்த ரவை - 1/4 கப்,

    நெய் - 4 டேபிள்ஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்.

    செய்முறை :

    * முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டி விட்டு குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு வறுபட வறுபட ஒட்டாமல் வரும். அந்த சமயத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடுங்கள்.

    * குக்கரில் 4 விசில் போட்டு பருப்பு வெந்ததும் குக்கர் மூடியை திறந்து வெந்த பருப்பை கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த திக்கான பால் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் சற்று தளர ஆரம்பிக்கும்.

    * அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

    * முந்திரி வறுபட்டதும் பாசி பருப்பை அதில் ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கிண்டும் பொழுது பருப்பு திரண்டு அல்வா போல கெட்டியான பதத்திற்கு வரும்.

    * இந்த சமயத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நெய் தெளிந்து கரண்டியில் பாசிப்பருப்பு ஒட்டாமல் அல்வா பதத்திற்கு திரண்டு வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அல்வாவை கரண்டியில் எடுத்து பேனில் போட்டால் பொத்தென்று அழகாக விழும். அது தான் சரியான பதம். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுட சுட கரண்டியால் எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

    * ஆரோக்கியம் நிறைந்த தித்திக்கும் இந்த பாசிப்பருப்பு அல்வா நொடியில் செய்து விடலாம்.

    • அல்வா என்றதுமே நமக்கு நினைவில் வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான்.
    • இன்று தேங்காய் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - 2 1/2 கப்

    சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்

    முந்திரி - தேவையான அளவு

    நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

    * பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இடைஇடையே நெய் சேர்த்துகொள்ளலாம்.

    * கடைசியாக அல்வா போன்று வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.

    * ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

    * மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே ஆகும்.
    • இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் பொரி - 3 கப்,

    வெல்லத் தூள் - 1 கப்,

    ஏலப்பொடி, சுக்குப் பொடி - தலா 1 ஸ்பூன்,

    தேங்காய்ப் பல் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க வேண்டும்.

    பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை சிவக்க வதக்க வேண்டும். (எள் சேர்க்க விரும்புபவர்கள் 2 ஸ்பூன் எள்ளை வெறும் வாணலியில் பட பட வென்று பொரிய வறுத்து பாகில் சேர்த்துக் கொள்ளலாம்).

    பிறகு வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிப் பாகு செய்ய வேண்டும்.

    பாகில் தேங்காய் பற்கள், எள் சேர்த்து உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி ஏலம், சுக்கு சேர்த்து தட்டிலுள்ள பொரியில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கையில் அரிசிமாவு அல்லது நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

    அவ்வளவுதான் சூப்பரான அவல் பொரி உருண்டை ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் (Desiccated Coconut) - 1 கப்

    மில்க்மெய்ட் - 1 1/2 கப்

    துருவிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு அதனுடன் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். எல்லா உருண்டையும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் துருவிய டார்க் சாக்லேட்டை போட்டு நன்றாக கைவிடாமல் கிளறவும்.

    சாக்லேட் நன்றாக கரைந்து உருக ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

    இப்போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சாக்லேட் கலவையில் டிப் செய்து ஒரு பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.

    இதனை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான தேங்காய் ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்த ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று சாக்லேட், தேங்காய் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் - 200 கிராம்

    மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10

    சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்

    வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

    கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்

    பால் - அரை கப்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)

    அலங்கரிக்க

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    செய்முறை

    * மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.

    * ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.

    * இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.

    * அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.

    இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    • வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
    • விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)

    நெய் - 2 மேசைக்கரண்டி

    முந்திரி - 1 தேக்கரண்டி

    கருப்பு எள் - தேக்கரண்டி

    திராட்சை - 1 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சுக்கு தூள் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)

    * எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இந்த ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    இட்லி அரிசி - 200 கிராம்,

    கேழ்வரகு - 200 கிராம்,

    உளுந்து - 50 கிராம்,

    வெந்தயம்-1 டீஸ்பூன்,

    கருப்பட்டி - 500 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,

    உப்பு - சிறிதளவு,

    நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.

    கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும்.

    அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.

    பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி.

    • கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை செய்து கிருஷ்ணருக்கு படைப்பார்கள்.
    • இன்று எளிய முறையில் சீடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்

    பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - 3 டீஸ்பூன்

    எள் - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி!!!

    ×