search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் ரொம்ப பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சை மிளகாய் -1,

    கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப்,

    சீரகம் - அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்),

    எண்ணெய் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாய், கடைந்த தயிர், சீரகம், உப்பு சேர்த்து உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மைதா போண்டா ரெடி.

    இதை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

    இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி சூப்பராக இருக்கும்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சில்லி பொட்டேட்டோ செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 5

    சோள மாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    சாஸ் செய்ய

    நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி

    மிளகாய் சாஸ் - 1 மேசைக்கரண்டி

    தக்காளி கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    வினிகர் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    சோள மாவு - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    உருளைக்கிழங்கு தோல்களை சீவி விட்டு நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தண்ணீரை படி படியாக சேர்த்து கரைத்துக்கொள்ளவும். சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.

    நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், சில்லி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், தக்காளி கெட்சப், மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.

    நன்கு வதக்கிய பின்பு இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவை திக்கான பதம் வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சில்லி பொட்டேட்டோ தயார்.

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • சர்க்கரை நோயாளிகளும் இந்த தோசையை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    நன்கு பழுத்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் - 4,

    நெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வாழைப்பழத்தை நன்றாக மசித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், வெல்லம் நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 5,

    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.

    தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.

    • காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    வடித்த சாதம் - 2 கப்

    கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 2

    கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்

    கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

    பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    * கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் போட்டு கொட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தளர்வாகி விட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் கலந்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

    * தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    • 10 நிமிடத்தில் இந்த் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 4

    ரவை -1 கப்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4

    வெங்காயம் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவையை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ரவையில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்த கலவையை விரல் வடிவில் உருட்டி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்ததை ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் சுவையாக இருக்கும்..

    • இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,

    கருப்பட்டி - 175 கிராம்,

    முந்திரி - 30 கிராம்,

    திராட்சை - 30 கிராம்,

    பாதாம் - 20 கிராம்,

    பிஸ்தா - 20 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    தண்ணீர் - 200 மி.லி.,

    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,

    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    • சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று சாக்லேட் சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 4 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    * பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    * இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவியதும் எடுத்து விடவும்.

    * இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * இப்போது டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • குஜராத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டி தயிர் - 250 ml

    சர்க்கரை - 1/4 கப்

    பாதாம் மற்றும் முந்திரி தலா - 10

    உப்பு சேர்க்காத பிஸ்தா - 6-8 நம்பர்ஸ்

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் பூ - 2 இழைகள்.

    செய்முறை:

    இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.

    பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.

    பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.

    குறிப்புகள் :

    ஜாதிக்காய் பூ இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்.

    • இது அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்,

    மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்,

    கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்,

    கடலை மாவு – 1 ஸ்பூன்,

    காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்,

    மிளகு தூள் – 1 ஸ்பூன்,

    சீரகத்தூள் -1/2 ஸ்பூன்,

    உப்பு – 1ஸ்பூன்,

    கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,

    தனியா தூள் -1 ஸ்பூன்,

    கறிவேப்பிலை -1 கொத்து,

    எண்ணெய் – 250 கிராம்.

    செய்முறை

    அடுப்யில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்). அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்து கொள்ளுங்கள்.

    காலிஃப்ளவரை மசாலாவில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃப்ளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃப்ளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃப்ளவர் மெது மெது வென்று ஆகி விடும்.

    இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கறிவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.

    • எள் உடல் எடையை குறைக்க உதவும்.
    • உடலில் கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - அரை கிலோ

    வெல்லம் -அரை கிலோ

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது.

    வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

    பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும்.

    பின்பு லட்டுகளாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.

    ×