search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    • விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்திட தமிழ்நாடு அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • பணியாளர்கள் விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை இயக்கங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல், அவர்களை மாறுதல் செய்திடவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்திடவும் தமிழ்நாடு அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

    அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்கங்கள், பள்ளிகளில் கடந்த மாதம் (ஜூன்) 30-ம்தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களில் பணிபுரிபவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    பணியாளர்கள் விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

    • ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
    • மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.

    அதன்படி, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம்தேதி பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.

    அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவ-மாணவிகள் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1,501 முதல் 3,000 வரை 2 பேர், 3,001 முதல் அதற்கு மேல் 3 பேர் என்ற அடிப்படையிலும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையிலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
    • ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஜூன் 6-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன், ராமதாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.
    • நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கொள்காட்டி வெளியிட்டுள்ள பதிவில்,

    அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

    20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,

    519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,

    22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள்,

    புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.

    நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! என்று கூறியுள்ளார்.


    • நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
    • மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பள்ளிகளில் மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.

    மாணவா்களுக்கு அளிக்கப்படும் இந்த நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதாா் எண் அவசியமாகிறது.

    பயிலும் பள்ளிலேயே ஆதாா் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதாா் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது.

    தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதாா் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதாா் தரவு உள்ளீட்டாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் 'பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான ஜூன் 6-ந்தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படவுள்ளது. இந்நிகழ்வை அமைச்சா்கள், பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.
    • பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 6-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதால் தூய்மைப் பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை புதிதாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கூடம் திறந்ததும் 3 திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும் அதுவும் பள்ளி வளாகத்திலேயே பயன்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதனை தடை செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இரண்டாவதாக ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோருக்கு தெரிவிக்க முடியும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 70 லட்சம் பெற்றோர்களின் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பெற்றோர்களின் செல்போன் எண்களையும் பள்ளி திறந்ததும் இணைக்கப்படுகிறது.

    மூன்றாவதாக மாணவர்கள் கையில் கட்டும் வண்ணக் கயிறுகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையில் கையில் வண்ணக் கயிறுகள் கட்டப்படுவதால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கையில் கட்டப்படும் வண்ணக் கயிறுகளுக்கு தடை கொண்டு வரும் உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
    • பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜூன் மாதம் 4-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மேலும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் பள்ளிகள் வரும் ஜூன் 4-ந்தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    2024-25-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 4-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • நேற்று முன்தினம் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் ‘எமிஸ்' தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஆகும். இந்த நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 2 நாட்களில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3 ஆயிரத்து 33, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதேபோல், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375, முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 2,748, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 146 என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. ஆக தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிப்பதால், எமிஸ் தளம் நேற்று முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    • பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    • பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 13.05.2024 முதல் 17.05.2024 வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    தொடக்கக்கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக்கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    பள்ளி கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    வட்டாரக்கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை ஏற்பளித்து தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர்களில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்வடும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை ஏற்பளித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

    ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்கள் நிலுவையின்றி உடனடியாக வட்டாரக்கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். மேற்படி அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே எவ்வித விடுதலுமின்றி மாறுதல்கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் மாறுதலுக்கு முன்பாக நடைபெறும். நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை.
    • தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது.

    அரசு பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந் தேதியுடன் மூடப்பட்டன. வெயிலில் சிறுவர்கள் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுப்பதால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

    ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தன.

    100 சதவீதம் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை. ஆனாலும் பள்ளி நிர்வாகத்தின் கட்டாயத்தின்படி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

    தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம்.
    • தேர்வுத்துறை அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித் தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ந்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    பிளஸ்-2 முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

    • பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது.
    • பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

    பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ந்தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×