search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறை"

    தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் இ.எஸ்.ஐ. (தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்) மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் ரூ.6 கோடியே 41 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    புதுப்பிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தை மத்திய மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 1966-ம் ஆண்டு தொழிலாளர் காப்பீட்டு கழகம் 12 ஆயிரம் தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 175 படுக்கை வசதிகளுடன், 12 சிறிய மருத்துவ பிரிவுகளும், கிளை அலுவலகமும், மண்டல அலுவலகமும் இயங்கி வருகிறது. தற்போது ரூ.6 கோடியே 41 லட்சம் செலவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் பெற்று வரும் பென்ஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் பயனடைந்துள்ளனர்.

    தொழிலாளர் காப்பீட்டு கழகம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் செல்போனை பயன்படுத்தி இந்த செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் பலன்களை தொழிலாளர்கள் பெற விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநில முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. பல்வேறு துறைகள் இங்கு வந்துள்ளன என்றால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மக்கள்தொகையின் அடிப்படையில் பார்க்காமல் செய்தது தான். பல ஆண்டுகளாக இங்கே தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரோடியர் மில், சுதேசி மில், பாரதி மில், கூட்டுறவுத் துறையில் இருக்கும் ஸ்பின்னிங் மில், சர்க்கரை ஆலை ஆகியவற்றை இயக்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

    புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை மீண்டும் நல்ல முறைக்கு கொண்டு வர மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினரும் புதுவைக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி வாங்கித்தர வேண்டும். ரோடியர் மில்லை தொடர்ந்து இயக்க மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்றுத்தர வேண்டும் அல்லது அந்த மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்று தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்க ஒப்புதல் தர வேண்டும். இது தொடர்பான கோப்பு பல ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது.

    ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு குறைவான நிதி வழங்கப்படுகிறது. எனவே கூடுதலாக நிதி கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர முதல்-அமைச்சர் தலைமையில் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

    கிராமப்புற தொழிலாளர்கள் விடுப்பு பணம் வாங்க முதலியார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது. ஆகவே தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் இ.எஸ்.ஐ. கிளை அலுவலகம் திறக்க வேண்டும்.

    புதுவையில் ஆட்சி செய்வது எந்த அரசு என்பதை பார்க்க வேண்டாம். இந்திய நாட்டு மக்கள் என்பதை பார்த்து கூடுதல் நிதி பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் நிறைய திட்டங்கள் மக்களை சென்றடைய முடியும். புதுச்சேரிக்கு ரூ.1,000 கோடி நிதி பெற்றுக்கொடுத்தால் தான் நிலுவையில் உள்ள அரசு ஊழியர் சலுகை, சார்பு நிறுவனங்களில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை, நிலுவையில் உள்ள திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் புதுவை அரசு தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரவடிவேலு, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், இ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ராஜ்குமார், புதுவை மண்டல இயக்குனர் தாசு, காப்பீட்டு கழக கூடுதல் ஆணையர் மணி மற்றும் பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



    சீருடை அணிவதிலும் விதிமுறையை அரசு பஸ் டிரைவர் ஒருவர் கடைபிடித்து வருகிறார்.
    மானாமதுரை:

    அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார். 
    அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 
    ×