என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 169210"
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதி கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் தனியார் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண விழா, கோவில் திருவிழா, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் வைத்து ரோட்டை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கடைவீதி, நான்கு ரோட்டில் நாலாபுறமும் குற்ற கண்காணிப்புக்காக போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் சுமார் 10 மாதத்திற்கு முன்பு சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக, போலீசார் கேமராவில் பார்க்கும் போது பதாகைகள் மறைத்து விட்டது. இதனால் மர்ம நபர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மேலும் கடைவீதிகளில் ரோட்டு ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடை களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டின் நடுவே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதுடன் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தியும், பதாகைகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
தமிழகத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பாரம்பரியமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் ரிக்ஷா மற்றும் ஆட்டோக்கள் அதிகரிக்கவே இதன் பயன்பாடு குறைந்தது. தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இது போன்ற கால்நடைகள் போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்படுவது இல்லை.
ஆனால் பழனியில் தொன்று தொட்டு குதிரை வண்டி சவாரி போக்குவரத்துக்கு இன்றளவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும், குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கும் குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களும் குதிரை வண்டிகளில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.
ஆனால் குதிரை வண்டிகளை வைத்துள்ளவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் அதனை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர். குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.500 வருமானம் வந்தால்தான் குதிரைக்கு தீவனம் வாங்கி கொடுத்து வண்டியையும் பராமரித்து தனது செலவையும் பார்த்துக் கொள்ள முடியும்.
ஆனால் கனரக வாகனங்கள் , ஆட்டோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குதிரை வண்டிகளின் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் பராமரிக்க முடியாமல் குதிரைகளை சாலையில் மேய விட்டு விடுகின்றனர்.
அவை வாகனங்களில் செல்பவர்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வெறி நாய்கள் துரத்தி குதிரைகளை கடிப்பதால் அவைகளுக்கு நோய் ஏற்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க கூட குதிரை வளர்ப்போரால் முடிவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் குதிரைகளை பராமரிக்க கால்நடைத்துறை மூலம் உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.
மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.
யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள். #SupremeCourt #ElephantCorridors
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபையில் காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகம் தற்போது கொதிநிலையில் உள்ளது. அதை இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கதிராமங்கலம், நெடுவாசல், தூத்துக்குடி போராட்டம் நடந்தது. தற்போது சேலம் முதல் சென்னை வரை பல கிராமங்களில் போராட்டம் நடக்கிறது. அறவழிப் போராட்டங்களை ஏற்க இந்த அரசு தயாராக இல்லையா? திறமையின் அடிப்படையில் தமிழக போலீசாரை ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக பேசிய காலமுண்டு. தற்போது தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த உகந்தது என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். மாநில உளவுத்துறைக்கு ஐ.ஜி. அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எப்படி டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள தன் மேல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க முடியும்? வரலாற்றில் இல்லாத அளவுக்கு மாநில உளவுத்துறை நம்பிக்கை இழந்துள்ளது.
இந்த ஆட்சியில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. தொடர் கொலைகள், கடத்தல், முகமூடி கொள்ளை, மணல் கொள்ளை, பெண்கள் வன்கொடுமை, சிலை திருட்டு, குட்கா விற்பனை, மனித உரிமை மீறல்கள், காவலர் தற்கொலை என பலவற்றை சொல்லலாம்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக தமிழகம் மாறியிருப்பதாகச் சொல்கிறார்.
இதை அரசு கண்டித்திருக்க வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் அதை ஏற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியதாவது:-
கொலை, கொள்ளை, திருட்டு எல்லா ஆட்சியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் ஆட்சியில் நடைபெறவில்லை என்று சொல்லவில்லை. உங்களுடைய (தி.மு.க.) ஆட்சியிலே நடைபெற்றதைவிட அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன.
எனவே, கொலை, கொள்ளை, திருட்டை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே எம்.ஜி.ஆர். சொன்னதைப்போல, திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான். எந்த ஆட்சி வந்தாலும் சரி, உங்களுடைய ஆட்சியிலும் அப்படித்தான் இருக்கிறது.எனவே அ.தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும், மிக வேகமாக, விரைவாக, குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சியிலே 2006-ம் ஆண்டு 17 துப்பாக்கி பிரயோக சம்பவங்களும், 2007-ம் ஆண்டு 13 சம்பவங்களும், 2008-ம் ஆண்டு 17 சம்பவங்களும், 2009-ம் ஆண்டு 8 சம்பவங்களும், 2010-ம் ஆண்டு 12 சம்பவங்களும் என மொத்தம் 67 சம்பவங்கள் நடந்துள்ளன.
இவற்றில் மொத்தம் 33 பேர் உயிரிழந்துவிட்டனர். எனவே உங்களுடைய ஆட்சிக் காலத்திலும், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அவ்வப்போது ஏற்படுகின்ற சட்டப்பிரச்சினைகளையொட்டித்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள்.மத்திய இணை மந்திரியைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கின்றபோது, குற்றங்களும் குறைவாக இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கும் பேணிக் காக்கப்படுகிறது.சில அமைப்புகள் வேண்டுமென்றே, தூண்டிவிட்டு அந்த போராட்டத்தின் வாயிலாக தங்களுக்கு ஏதாவது பெயர் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு செயல்படுகின்ற காரணத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டங்களோ, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் யாராவது நடக்க முற்பட்டால், கடுமையான முறையிலே அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அதற்கு அரசு தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் செயின் பறிப்பு, 12 இடங்களில் செல்போன் பறிப்பு நடந்துள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு சென்றுள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (குறுக்கிட்டு):-
டெல்லியில் இருந்து வந்து சங்கிலி பறித்தவர்களை உடனே போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தமிழக போலீசார் திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளனர்.எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் திருட்டைத் தடுக்க போலீசார் தயாராக உள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- காட்பாடியில் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் உதவியாளர் ஒருவரின் செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுபற்றி விருகம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அங்கிருந்த போலீசார், செல்போன் பறித்தவர்கள் ஒரு பைக்கில் 2 பேராக வந்தார்களா? ஒல்லியாக கருப்பாக உயரமாக இருந்தார்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதற்கு, அப்படியானால் செல்போனை மறந்துவிடுங்கள் என்று கூறினர். இப்படிப்பட்ட போலீசாரும் உள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இதுபோன்ற சம்பவங்களை உடனே அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
துரைமுருகன்:- இதற்காக டீம் போட்டு விசாரிப்பதாக போலீசார் கூறுகின்றனர். பல நாட்கள் ஆகிவிட்டது. டீ தான் போடுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின்:- சேலம் சென்னை 8 வழி பசுமை சாலையை ஆதரிக்கின்றனர் என்பதை ஏற்றாலும், பலர் அதை எதிர்க்கவும் செய்கின்றனர். போராட்டத்தை சிலர் தூண்டுவதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் வளர்மதி, நந்தினி, மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் வயதான பெண்கள் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என்று மன்சூர் அலிகான் பேசியது, வன்முறையைத் தூண்டாதா? சில அமைப்புகள் பொய்பிரசாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது.
காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளும், காவலர்களும் இரவு, பகல் பாராமல் ஓய்வின்றி காவல் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும், பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும், போராட்டங்களை கையாளும் போதும், அவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும், இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட்டு, இல்ல பணிகளை கவனிக்க இயலாமல் இருந்து வருவதால், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மற்றும் பணி நிமித்தம் காரணமாகவும் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.
காவல் துறையினரின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களது உடல் நலத்தை பேணி காக்கவும் ஏதுவாக, பெங்களூரூவில் உள்ள மனநல நிறுவனத்தினருடன் இணைந்து உளவியல் ரீதியான பயிற்சியை அளிக்க முடிவு செய்தது.
இப்பயிற்சிக்காக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, 22.6.2018 அன்று, அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பயிற்சியை உடனடியாக தொடங்க, முதற்கட்ட செலவினங்களுக்காக 60 லட்சத்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஒப்புதல் அளித்து மேலும் ஒரு அரசாணை அன்றே வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகவும் பயனடைவர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்