search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடசேவை"

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை, ‘சிகர’ நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை உற்சவம்) நடந்தது.

    அதில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகிவற்றாலும், லட்சுமி ஆரம், மகர கண்டி, சகஸ்ர நாமாவளி ஆரம், கடிக அஸ்தம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். உற்சவர் மலையப்பசாமி மற்ற நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாலும் தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. வழக்கமாக, கருட சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி நடந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இரவு 7 மணிக்கே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. அதனை பார்ப்பதற்காக மாடவீதி ஒன்றில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பக்தர்களின் கண்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... அனாத ரட்சகா, ஆபத் பாந்தவா கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கருட சேவையை பார்ப்பதற்காக நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் காலை 10 மணியளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், உணவு ஆகியவற்றை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கினர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கேலரிகளில் ஒரு தேவஸ்தான என்ஜினீயர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படை வீரர்கள், சாரண-சாரணியர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது. 
    தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் 24 பெருமாள்கள் கருடசேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இதன்படி 84-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.

    அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுதவண்ணம் முதலில் சென்றார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள் லட்சுமியுடன் வந்தார். இவர்களை தொடர்ந்து நரசிம்ம பெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன் கோயில்தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலவீதி ரெங்கநாத பெருமாள், விஜயராம பெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன்தெரு பூலோக கிருஷ்ணன், மகர்நோம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயண பெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    24 பெருமாள்களையும் பக்தர்கள் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசமடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். கருடசேவை விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    கருடசேவையை முன்னிட்டு நான்கு ராஜவீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானம், நீர்மோர் போன்றவை வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இன்று காலை 6 மணிக்கு பெருமாள்கள் நவநீத சேவையில் புறப்பட்டு காலை 8 மணிக்கு கொடிமரத்து மூலையை வந்து அடைகிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து கீழராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி அளித்து வந்த வழியே அவரவர் கோவில்களுக்கு சென்றடைவர். நாளை(புதன்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது. 
    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜதர்சன சபை சார்பில் 24 கருடசேவை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அதன்படி 84-வது ஆண்டாக இந்த ஆண்டு 24 பெருமாள்கள் கருடசேவை வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில் களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்தடைகின்றனர்.

    அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுத வண்ணம் முதலில் வர அவரை தொடர்ந்து நீலமேகப்பெருமாள் லட்சுமியுடன் மற்ற பெருமாள்களான நரசிம்மபெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னபெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், கரந்தை யாதவக்கண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மபெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுகவெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன்கோவில் தெரு ஜனார்த் தனபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலராஜவீதி ரெங்கநாதபெருமாள், விஜயராமபெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன் தெரு பூலோக கிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணபெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்படுகிறார்கள்.

    கருடவாகனத்தில் எழுந்தருளிய அனைத்து பெருமாள்களும் வரிசையாக காலை 7 மணி முதல் 11.30 மணி வரை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்துவிட்டு மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைகின்றனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைகின்றனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனைபாடியபடி செல்வார்கள்.

    5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நவநீத சேவையும், 6-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், தமிழ்ச்செல்வி மற்றும் ராமானுஜதர்சன சபையினர் செய்து வருகிறார்கள். 
    ×