search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
    • மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
    • இதில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடந்தது. அதில் நாட்டின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் 9 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

    இதற்கிடையே, சிறப்பான ஊர்திகளை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.

    இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    கைவினை மற்றும் கைத்தறித் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடமும் பிடித்தது.

    • இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அஜோய் குமார் மேலும் கூறியதாவது:-

    காங்கிரசுடன் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கூட்டணியை அவர் வழிநடத்துவார். 

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

    ராமர் கோயில் கட்டவும், பல திட்டங்களைத் தொடங்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறார்கள். திருநெல்வேலி, சென்னை வெள்ளத்திற்கு தமிழக அரசு பலமுறை நிவாரண நிதி கேட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 76 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் தொகை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.
    • ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார்.

    காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.

    கடந்த டிசம்பர் 19-ந்தேதி நடந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
    • ஆர்வம் காட்டும் மாநிலங்கள்-பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.

    புதுடெல்லி:

    புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.

    மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (டி.பி.ஐ.ஐ.டி.) துறை இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மிகச் சிறநத மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.

    33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன.

    மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கர்நாடகா 2-வது ஆண்டாகவும் இடம் பிடித்து உள்ளன.


    2022-ம் ஆண்டுக்கான இந்த தர வரிசைப் பட்டியலை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    மிக சிறந்த மாநிலங்கள்-குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்.

    சிறந்த மாநிலங்கள்-மகாராஷ்டிரா , ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா.

    முதன்மை மாநிலங்கள்-ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா.

    ஆர்வம் காட்டும் மாநிலங்கள்-பீகார், அரியானா, அந்தமான்-நிகோபார் தீவுகள், நாகாலாந்து.

    முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்-சத்தீஸ்கர், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம்.

    • நடிகர் ரஜினி காந்த் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி காந்த் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த நன்நாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்" எனக் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது .
    • 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு ஏட்டிவிடும்.

    தமிழ்நாடு அரசு இருமொழி கொள்கையை மட்டும் பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டது. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக, மைக்ரோசாப்ட் டீல்ஸ் திட்டம் என்னும் புதிய திட்டத்தை நாட்டிலே முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் எனக் கூறியிருந்தார். மேலும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் கொண்டு வரும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, ஒரு போதும் மும்மொழிக்கொள்கையே தமிழ்நாடு அரசு ஏற்காது. இரு மொழி கொள்கை மட்டுமே தொடரும் என தெரிவித்துள்ளது. அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திணிக்கவோ கூடாது, தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. உதாரணமாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதம் ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதத்தை, 2019-20 ஆம் கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு 2035 ஆம் ஆண்டு 100 சதவீத மாணவர் சேர்க்கையை ஏட்டிவிடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்வி கொள்கையில் இணைத்துவிட்டு , தேசிய கல்விக்கொள்கையின் படி தமிழ்நாடு அரசு செயல்படுவது எனக் கூறுவது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டிற்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் மற்ற மாநிலங்களை விட தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

     

    • மிச்சாங் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு
    • பொதுநல மனுவை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், 8 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிட, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த மகேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இடைக்கால நிவாரண தொகையாக மூவாயிரம் கோடி ரூபாயை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தினார்.

    இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், மிச்சாங் புயல் நிவாரணம் தொடர்பாக, ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் முறையிடலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர்.
    • வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் வந்தது.

    அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

    இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் நிதியோகிக்கபட மாட்டாது என்றது.

    மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    ×