search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • கலையரங்கத்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் இந்த கோவிலில் தரிசனத்துக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நுழைவு வாசலில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    பகவதிஅம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்காக கோவிலின் நுழைவு வாசல் முன்பு மிக பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கலையரங்க த்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை காலையில் இந்த கலையரங்கம் முன்பு வைத்து விட்டு இரவு தான் திரும்பி வந்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்க பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் "பார்க்கிங்" இடமாக மாறிவிட்டது. தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால் இந்த பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதற்கிடையில் ஆட்டோ, கார், வேன், டிரக்கர், ஜீப், மினி பஸ் போன்ற பெரிய கனரகவாகனங்களும் இந்த சன்னதி தெரு பகுதியில் உள்ள லாட்ஜுகள் முன்பு ஆங்காங்கேபோக்குவரத்துக்குஇடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவிலில்வைகாசிவிசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் 10 நாட்களும் இந்த சன்னதி தெரு வழியாகத் தான் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறது.

    மேலும் இந்த 10 நாட்களும் இந்த கோவிலின் முன்புஉள்ள கலையரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவிலுக்குள் எளிதாக சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வர முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் கலையரங்கம்முன்பு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு போக்கு வரத்து போலீசார் தடை விதிக்கவேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இட வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
    • பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள சுமார் 1118 பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு தயாராகி வருகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்த கங்களை பள்ளி திறப்ப தற்கு முன்னதாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தோவாளை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங் கப்படும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பள்ளிகள் திறப்பதற்கு முன்பு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தற்போது கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் என்னென்ன முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளிகளை திறந்து சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    • பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா
    • நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 4-ம் திருவிழாவான நேற்று மாலை திருவாவடு துறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சமய உரையும் நடந்தது. பின்னர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப் பின் சார்பில் பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிறுவர்-சிறுமிகள் விநாயகர், முருகன், மதுரை மீனாட்சி அம்மன், சரஸ்வதி அம்மன், கன்னி யாகுமரி பகவதி அம்மன், கிருஷ்ணன், ராதை போன்ற தெய்வங்களின் வேட மணிந்த தத்ரூப காட்சி நடந்தது.

    மேலும் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது.

    அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கி ருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு சினிமா பட தயாரிப்பாளர்கள் கே.எஸ். போஸ், விஷ்ணுராம் ஆகியோர் ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்குசிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மழை சற்று குறைந்திருந்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கோட்டார் சாலை மீண்டும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, அருமநல்லூர் பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. காற்றும் வீசியதையடுத்து கொல்லன் துருத்தியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மின்சாரம் தடைபட்டது.

    பண்ணியோடு, காந்தி நகர், உரக்கோணம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். குருந்தன்கோட்டில் அதிகபட்சமாக 21.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், புத்தன் அணை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அருவியில் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.25 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.81 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.61 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 29.04 அடியாகவும் உள்ளது.

    • கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்ட 20 வாழை மரங்களை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள் சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :,

    கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்கீழ் கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட சுற்றுசூழல் பூங்கா வளாகத்தில் 20 அரிய வகையான வாழைக்கன்று களை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நட்டு வைத்தார்.

    இந்த வாழை மரங்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் உடனடியாக தோட்டக்கலை துறையினருக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் அழியும் தருவாயிலுள்ள சுமார் 31 ரக வாழை ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பண்ணையில் நடப்பட்டன. 20 வாழை ரக கன்றுகள் நடும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கி வைத்தேன்.

    நடவு செய்யப்பட்ட வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பல இனங்கள் நன்றாக வளர்ந்திருப்பதோடு பல வாழை மரங்களில் வாழைக்காய்கள் காய்த்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

    இந்த 31 வகை வாழை ரகங்களின் கன்றுகளை விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்ற, மா மற்றும் பலா வகைகளில் பல்வேறு வகைகளை கண்டறிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அரவிந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள்சரண்யா, ஆறுமுகம், அலுவலர்கள்

    சக்திவேல், மாஞ்சனா, உதவி அலுவலர் நிஷாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவள்ளுவர் சிலைக்கு 4 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது.
    • சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்தச் சிலையை திறந்து வைத்தார். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று இந்தச் சிலையை கண்டுகளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    3 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக, கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது.

    சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு பின்னர் காகிதக் கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல் நீக்கப்படுகிறது. அதன்பின், ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பணியால் இன்று முதல் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

    • கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
    • இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் உன்னி (வயது 58). ஆடிட்டர். இவர் சீடு குருகுலம் சார்பில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

    அங்கு உள்ள பாரத மாதா சிலைக்கு மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து ராமர் லட்சுமணர் சீதை சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் சித்திரக் கண்காட்சி கூடம் முன்பு உள்ள 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.

    அதைத் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை கன்னியா குமரி விவே கானந்த கேந்திர தலை வர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவே கானந்த கேந்திர மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், கேந்திர பொறுப்பாளர் சுனில் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்ட கோவிந்தன் உன்னி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி சென்றடைகிறார். மொத்தமுள்ள 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர் 48 நாட்களில் சைக்கி ளில் கடந்து செல்கிறார்.

    இவர் நாள்ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017- ம் ஆண்டு சபரி மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி, சென்னை வழியாக மீண்டும் பாலக்காடு சென்றடையும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    அப்போது இவர் மொத்தம் உள்ள 1860 கிலோ மீட்டர் தூரத்தை 28 நாட்களில் சைக்கிளில் கடந்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த முறை சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் இருந்து தலா ஒரு ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22 ஆயிரம் வசூல் செய்து சைக்கிள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    3-ம் திருவிழா நாளான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி பஜனையும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்ட அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா சென்றார்.

    வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழி பட்டனர். விழாவின் 4-வது நாளான இன்று (திங்கட்கி ழைமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு பால், தயிர், எண்ணெய், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள்பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சா மிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு கன்னியா குமரி பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பி ல் பக்தி பல்சுவை நிகழ்ச்சி யும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.


    கோவில் திருவிழா காலங்களில் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்ர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்க ரிக்கப்பட்ட யானை மீது வைத்து கொண்டு வரப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக 4-ம்திருவிழாவான இன்று வரை புனித நீரை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரவில்லை. அதற்கு பதிலாக கோவில் அர்ச்சகர் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே பகவதி அம்மன் கோவிலுக்கு புனித நீரை கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி பக்தர்களின் மனதை வேதனை அடைய செய்துஉள்ளது.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது விழாவுக்கு யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    • சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "அல்போன்சியன் உடற்பயிற்சி கூடம்" திறப்பு விழா நடைபெற்றது.
    • அல்போன்சா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் இந்த உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:


    சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "அல்போன்சியன் உடற்பயிற்சி கூடம்" திறப்பு விழா நடைபெற்றது.

    உடற்பயிற்சி கூடத்தைக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் ஆசீர்வதித்துத் திறந்து வைத்ததோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌ சிறப்பு அழைப்பாளராக கர்னல் வினோத் தேவராஜ் கலந்து கொண்டார். அல்போன்சா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சில பெரியோர்களின் உதவியுடன் இந்த உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த உடற்பயிற்சி கூடம் அமைந்திட முழுமுதற் காரணமாக இருந்த புனித அல்போன்சா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எ‌பி. சீலன் அவர்களைக் கல்லூரி தாளாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், முதல்வர் முனைவர் எஸ். இசையாஸ், துணை முதல்வர் முனைவர் ஆர். சிவனேசன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

    • திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் மனோகர் குமார் குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் சிபிராஜ் முன்னிலை வகித்தனர்.


    ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது. பேருராட்சி பா.ஜ.க. தலைவர் கோபுஜி கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார், சுஜாதா, கவுதமி, செய்யூர் சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிதிஷ் லால்(வயது 28). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து விஜயகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.


    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிதிஷ்லாலை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று குழித்துறை ஆற்றில் நிதிஷ் லால் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த நிதிஷ் லால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    மாயமான கல்லூரி பேராசிரியர் நிதிஷ் லால் ஆற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொ ண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.

    அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசார ணையில் நிதிஷ் லால் மாயமா வதற்கு சில நாள்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிணமாக கிடந்தார். எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


    தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆற்றின் கரையில் இருந்த நிதிஷ் லால் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    • கீழசங்கரன்குழியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் பயிற்சி வகுப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • கட்டிடத்திற்கு மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் அடிக்கல் நாட்டினார்

    கன்னியாகுமரி:


    ராஜாக்கமங்கலம் அருகே கீழசங்கரன்குழியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் பயிற்சி வகுப்பு கட்டிடத்திற்கு மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் அடிக்கல் நாட்டினார்.


    விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் ராமசாமி, ராதிகா, மற்றும் ஈஸ்வர பிரசாத், ஊராட்சி பாரதிய ஜனதா தலைவர் ரமேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×