search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதிகள்"

    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 விடுதிகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து மசினகுடியை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அப்போது 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் என 821 கட்டிடங்கள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் முதல்கட்டமாக யானை வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு உத்தரவிட்டடனர்.

    மீதி உள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் சரி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் வழங்கிய 48 மணி நேரத்தில் விடுதியை சீல் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    ஊட்டி ஆர்.டி.ஒ. சுரேஷ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட உள்ளாட்சி, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய 3 குழுவினர் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

    பொக்காபுரம் பகுதியில் உள்ள விடுதியை சீல் வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உரிமையாளர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னர் அதிகாரிகள் விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனர்.

    இதே போல் 27 விடுதிகளுக்கும் அங்குள்ள அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இரவு 7.30 மணி வரை சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

    மசினகுடியில் 27 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினகுடி பொதுமக்கள் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இன்று முதல் (13-தேதி) 15-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அதே போல் சுற்றுலா வாகனங்களை இயக்காமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டம் நடத்த போவதாகவும் பொதுமக்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், சொக்க நல்லி, பொக்காபுரம், தொட்டலிங்கி, மாயார் மற்றும் மசினகுடியை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    ×